தோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس

Share this:

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-1)
 عبد الله ابن عباس

தீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி விடுவது வழக்கம். மக்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்து வீட்டிற்குள் புகுந்தால், சாய்ந்தோ, படுத்தோ இளைப்பாறிவிட்டு, அஸ்ருக்குத் தலையை வெளியே நீட்டுவார்கள்.

ஒரு தோழரின் வீடு. பதின்மப் பருவ இளைஞர் ஒருவர் கொடிய வெயில் தணியும்வரைகூடக் காத்திருக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அரும்பொருள் ஒன்றைத் தேடும் அளவற்ற ஆவல் அவருக்கு. அதனால் அந்த வெப்பமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. வீட்டை நெருங்கியவர், கதவைத் தட்டலாமா என்று யோசித்தார்.

‘நிச்சயம் அனுமதி கிடைக்கும். அந்தத் தோழரும் முகம் கோணாமல் வரவேற்பார்தாம். ஆயினும் எதற்கு அவரது இளைப்பாறல் நேரத்தில் குறுக்கிட்டுக்கொண்டு? விலை மதிப்பற்ற செல்வம் வைத்திருக்கும் செல்வந்தர் அவரை உச்சபட்சப் பணிவுடன் அணுகுவதே சரி. வீட்டுக் கதவின் வெளியே படுத்துக் கொள்வோம். வெளியில் வருபவர் எப்படியும் நம்மைப் பார்ப்பார். பேசுவோம். கேட்டுப் பெறுவோம்.’

‘தக தக’ என்று அனல் சூடு பறந்தது. மேலாடையைக் கழற்றி, கையிலிருந்த தம் சிறு மூட்டைக்குள் திணித்துத் தலையணையாக்கிப் படுத்துக் கொண்டார். அந்த வெயிலிலும் களைப்பு மெல்லிய உறக்கத்தில் ஆழ்த்தியது. பாலைப் பகுதியின் வெப்பக் காற்று மெல்லிய தூசியை வீச, உறங்கிக் கொண்டிருந்த அவர் மீது தூசுப் போர்வை.

வீட்டின் உள்ளே இருந்த தோழருக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியவில்லை. உறக்கம் கலைந்தார். பிற்பகலில் செய்யவேண்டியவற்றைக் கவனிப்போம் என்று வெளியே வந்தால், வீட்டு வாசலில் ஓர் இளைஞர். படுத்திருக்கும் அவரும் அவரது கோலமும் ஆச்சரியப்படுத்த,  யார் என்று பார்த்தவர் அதிர்ந்து விட்டார்!

“என்ன காரணத்திற்காக வந்தீர்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே?”

“நீங்கள் தகுதி படைத்த மூத்தவர். உங்களை நான் வந்து காண்பதே சரி. மாணவன்தான் அறிவைத் தேடிப் பெற வேண்டும். அது மாணவனைத் தேடி வரக்கூடாது.”

இதற்குத்தான் அத்தனைச் சிரமப்பட்டிருக்கிறார் அவர். மெய்வருத்தம், அலைச்சல், எல்லாம் அறிவைத் தேடி! ஏழை, எளிய நபித் தோழரிடம் புதைந்திருந்த அந்தப் பெரும் செல்வத்தைப் பெறுவதற்குத்தான் மெனக்கெடல்; புழுதியுடல். பணிவுடன் நின்றிருந்தார் இளைஞர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ரலியல்லாஹு அன்ஹு.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு ஆண் மக்கள் பலர். அவர்களுள் முக்கியமான ஒருவர் அப்பாஸ் இப்னு முத்தலிப். நபியவர்களின் சிறிய தந்தை. அவருக்கும் அவர் மனைவி லுபாபா பின்த் அல்-ஹாரித் என்பவருக்கும் பிறந்தவர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். ரலியல்லாஹு அன்ஹும். இத்தம்பதியருக்கு மற்றும் சில மகன்களும் மகள்களும் உண்டு. மூத்த மைந்தர் ஃபத்ளு. அரபியரின் வழக்கப்படி மூத்த மகனான இவரது பெயரைக் கொண்டு பெற்றோர் இருவரும் முறையே அபூ ஃபதல், உம்மு ஃபதல் என்று விளிபெயரால் அறியப்பட்டனர். ஆனால் இப்னு அப்பாஸ்? அப்பாஸினுடைய மைந்தர் என்று குறிப்பிட்டாலே அது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்றாகிவிட்டது.

எப்படி அந்தச் சிறப்பு?

ஞானம். அழுத்தந்திருத்தமான, விசாலமான ஞானம். அவரிடம் பேசி மூழ்கினால் முத்து நிச்சயம் எனும் அளவிற்கு அதன் ஆழம் கடல். இத்தனைக்கும் நபியவர்கள் மதீனா புலம்பெயரும்முன், ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகள் முன்னர் பிறந்த மிக இளைய தோழர் இப்னு அப்பாஸ். நபியவர்கள் இவ்வுலகை நீங்கியபோது இப்னு அப்பாஸுக்கு ஏறக்குறைய பதின்மூன்று வயதுதான். அதன் பிறகுதான் பயணம் துவங்கியிருக்கிறது. உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

அப்பாஸின் மனைவி லுபாபா பின்த் அல்-ஹாரித் ஒரு நாள் கஅபாவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் நபியவர்கள் கஅபாவின் ஹிஜ்ரு இஸ்மாயீல் அருகில் இருந்தார்கள். தம்மைக் கடந்து சென்று கொண்டிருந்த உம்மு ஃபதல் லுபாபாவிடம், “நீர் ஆண்மகவைக் கருவுற்றுள்ளீர்” என்றார்கள் நபியவர்கள்.

பெண் குழந்தைகள் பெறுவதும் பிறக்கும் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதும் நடைமுறையில் இருந்த காலம் அது. இஸ்லாம் மீளெழுச்சி பெற்றதும் அந்த மாபாதகத்தை ஒழித்துக் கட்டியது. ஆனால் அச்சமயம் முஸ்லிமல்லாத குரைஷியர்கள் மிகைத்திருந்த மக்காவில் ‘பெண் குழந்தையாமே’ என்று செய்தியுடன் ஒட்டிக்கொள்ளும் பரிதாபமோ, கழிவிரக்கமோ மாறாத நிலை.  “ஏன் அப்படி? குரைஷிப் பெண்கள் பெண் மகவை ஈன்றெடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்துள்ளார்களா என்ன?” என உம்மு ஃபதல் வினவினார்.

நபியவர்கள் உறுதியாய் மீண்டும் கூறினார்கள், “நான் உங்களுக்கு அறிவித்ததுதான். மகனை ஈன்றதும் என்னிடம் கொண்டு வாருங்கள்”.

அந்த நேரத்தில் மற்றொரு முக்கிய விஷயம் நிகழ்ந்தது. நபியவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்திவந்த தாக்கத்தைக் கண்டு கடும் வெறுப்பில் இருந்த குரைஷிகள் ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்த ஆயுதம் – ஊர் விலக்கு. கொடுக்கல், வாங்கல்; உதவி, உபகாரம்; வியாபாரம், ஆகாரம் எதுவும் கிடையாது என்று சொன்னதோடு நில்லாமல் அதை எழுதி கஅபாவிலும் தொங்க விட்டுவிட்டார்கள். ‘கிடந்து மாளுங்கள்’ என்று கடுமையான விலக்கு. இது நபியவர்களை மட்டும் பாதிக்கவில்லை.  அவர்களது ஹாஷிம் கோத்திரத்தினர் அனைவரின் மீதும் வந்து விடிந்தது. மூன்று ஆண்டுகள் நீடித்த அந்தச் சோதனையைத் தாக்குப்பிடித்து முஸ்லிம்கள் ஒருவழியாய் மீண்டெழுந்தார்கள். அந்த காலகட்டத்தில்தான் –

உம்மு ஃபதலுக்கு நபியவர்கள் முன்னறிவித்தது நிகழ்ந்தது. ஆண் மகனை ஈன்றார் உம்மு ஃபதல். அவர் அந்தக் குழந்தையை முதலில் தூக்கிக் கொண்டு சென்றது அல்லாஹ்வின் தூதரிடம். ‘அப்துல்லாஹ்’ என்று பெயரிட்டு தமது உமிழ்நீரை குழந்தையின் வாயில் தேய்த்துவிட்டு, “நீங்கள் இந்த மகனை உவப்பானவராய்க் காண்பீர்கள்” என்று அடுத்து அறிவித்தார்கள் நபியவர்கள். இவற்றையெல்லாம் தம் கணவர் அப்பாஸிடம் விவரித்தார் உம்மு ஃபதல். புன்னகையுடன் கேட்டுக் கொண்டார் அப்பாஸ்.

இதற்குள் நபியவர்களின் வாழ்க்கையில் இதர சோதனைகள் தொடர்ந்து, இறுதியாக மக்காவில் தமது பணியை நிறுத்திக்கொண்டு அவர்கள் மதீனா புலம்பெயரும்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் மூன்று வயது பாலகர்.

அடுத்து மதீனாவில் இஸ்லாம் பரபரவென்று படர்ந்து, பற்பல நிகழ்ந்து, ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தபோது, நபியவர்களும் தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா நிறைவேற்றினார்கள். கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது, நபியவர்களுக்கும் மைமூனா பின்த் ஹாரித் ரலியல்லாஹு அன்ஹாவுக்கும் திருமணம் நிகழ்வுற்றது. அன்னை மைமூனா யார் எனில், இப்னு அப்பாஸின் தாயான உம்மு ஃபதலுக்கும் அல்லாஹ்வின் போர்வாள் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்ட [http://www.satyamargam.com/articles/history/world/2040-2040.html],காலித் பின் வலீதின் தாயான அஸ்மாவுக்கும் சகோதரியாவார். இந்தத் திருமண உறவு இப்னு அப்பாஸுக்கும் நபியவர்களுக்கும் இடையிலான உறவில் மற்றொரு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் தம் பெரிய தந்தையின் மைந்தர் என்ற ரத்த உறவு ஒருபுறம்; தாயின் உடன்பிறந்தாளின் கணவர் என்ற அடுத்த நெருக்கம் மறுபுறம் என்றாகிப் போனது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸுக்கு. ஆனால், நபியவர்கள், காலிதுக்கும் தாயின் உடன்பிறந்தாளின் கணவர் என்ற போதும் அந்த உறவு எவ்விதத்திலும் அவருக்கு நபியவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை.

நபியவர்களுடன் திருமணம் முடிந்து மதீனாவுக்குச் சென்றுவிட்ட மைமூனாவைச் சந்திக்க வந்திருந்தார் பாலகர் இப்னு அப்பாஸ். அச்சமயம் அவருக்கு ஏறக்குறைய பத்து வயது. கருத்தறிந்த நாளாய் தாம் மக்காவில் கேட்டது, அறிந்தது; நபியவர்களின் மக்கா வருகை, ‘மக்கா வெற்றி’ என்ற பெரும் நிகழ்வைத் தம் கண்முன் கண்டது; நபியவர்களின் தோற்ற அறிமுகம்; தோழர்களும் முஸ்லிம்களும் நபியவர்களிடம் பழகிய, பாராட்டிய விதம் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து, உணர்ந்து, உள்வாங்கி – இந்த எளிய மனிதர் மாமனிதர்; அல்லாஹ்வின் தூதர் என்ற பிரம்மாண்ட பிம்பம் சரியான வகையில் அந்தச் சிறுவர் அப்துல்லாஹ்வின் மனத்தில் பதிந்து போயிருந்தது.

அன்னை மைமூனாவின் வீட்டிற்கு நபியவர்கள் வரும்போது, அவர்களுக்கு உபச்சாரம், சேவை என்று துறுதுறுப்பும் சுறுசுறுப்புமாகத் துவங்கியது இப்னு அப்பாஸின் வாழ்க்கை. நபியவர்கள் ஒளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வருவார்; அவர்கள் தொழ ஆரம்பித்ததும் பின்னால் சென்று நின்று கொள்வார். அந்த வேகமும் சூட்டிகையும் நபியவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தன! ஒரு பின்னிரவு நேரம். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். இப்னு அப்பாஸ் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார். அன்னை மைமூனா நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒளூச் செய்ய அப்துல்லாஹ் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

மகிழ்வுற்ற நபியவர்கள் இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ்! மார்க்கத்தில் இவருக்கு ஆழ்ந்த ஞானத்தை அளிப்பாயாக! அதன் அர்த்தம் விளக்கங்களில் இவரை நெறிப்படுத்துவாயாக.” இப்னு அப்பாஸுக்காக நபியவர்கள் இறைஞ்சியது அந்த ஒருமுறை மட்டுமன்று.

நபியவர்கள் இரவுத் தொழுகையை தொழுத ஒருபோது அவர்களுக்கு இடப்புறத்தில் நின்று தொழுகையில் இணைந்து கொண்டார் இப்னு அப்பாஸ். நபியவர்கள் தம் கையை நீட்டி இப்னு அப்பாஸின் காதைப் பிடித்திழுத்து, தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்கள்.

“ஒருமுறை நபியவர்கள் தம் நெஞ்சோடு என்னைக் கட்டியணைத்து, இறைஞ்சினார்கள். யா அல்லாஹ்! இவருக்கு ஞானம் வழங்குவாயாக” என்றோர் அறிவிப்பும் இபுனு அப்பாஸ் வழியாகப் பதிவாகியுள்ளது.
என்னாயிற்று?

தன் தூதர் இறைஞ்சியதை அப்படியே நிறைவேற்றினான் இறைவன். ஹாஷிம் குலத்து வழித்தோன்றல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் கற்றார்; உயர்ந்தார்; பெரும் அறிஞராக உருவானார். அவருக்கு வந்து இணைந்த பட்டம் – ‘நம் சமூகத்தின் அறிஞர்’. இத்தனைக்கும் நபியவர்கள் இவ்வுலகை விட்டு  நீங்கியபோது இப்னு அப்பாஸின் வயது ஏறத்தாழ பதின்மூன்று மட்டுமே. ஆனால் அவர் மனனம் செய்து அறிவித்து, ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஹதீத்களின் எண்ணிக்கை 1660. அவரது கல்வி ஞான மேன்மை அறிய இது போதாது?

இப்னு அப்பாஸ் அடைந்த அந்த உச்சத்தின் பின் மறைந்திருந்த பெரும் உழைப்பு ஓர் ஆச்சரியம். அதன் குறிப்புகள் அவரது அறிவிப்பாகவே நூல்களில் இடம் பிடித்துள்ளன. மதீனாவில் நபியவர்களின் மறைவிற்குப் பிந்தைய காலம். அன்ஸார் ஒருவரிடம் வந்தார் இப்னு அப்பாஸ். “நபியவர்களின் தோழர்கள் இன்று நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஆயுளுடன் இருக்கும்போதே அவர்களிடம் சென்று கேட்டுப் பயில்வோமே” என்று அழைத்தார்.

அந்த அன்ஸாரிக்கு ஆச்சரியம். நகரெங்கும் நபித் தோழர்கள் பரவி வியாபித்திருந்த அன்றைய ஆரோக்கிய சூழலில் அதைத் தாண்டி அவர் அதிகம் யோசிக்கவில்லை. “ஆச்சரியப்படுத்துகிறாயே இப்னு அப்பாஸ்! அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் பலர் நிறைந்திருக்கிறார்கள். எனும்போது, மக்களுக்கு உம்மிடம் என்ன தேவை இருக்கப் போகிறது?”

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாமென்ன கற்று?, கற்பித்து? என்பதைப் போன்ற பதில் அது. அவருக்கு ஆர்வமில்லை என்றதும் இப்னு அப்பாஸ் வற்புறுத்தவில்லை. தம் தேடலைத் தொடர்ந்தார். வெயில், குளிர்; பாலை, சோலை என்று அலைந்து திரிந்து தேடித் தேடிப் பயில ஆரம்பித்தார். அது, ‘அதோ பார் கணினி; பொத்தானை அழுத்து. பதிலை எடுத்து இங்கு கொட்டு’ என்பது போன்ற தேடல், நுனிப்புல் சமாச்சாரம் அன்று. அவையெல்லாம் தகவல்கள். இவர் பயின்றது கல்வி. தகவலுக்கும் கல்வி ஞானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமிருக்கிறதே அது பெரிது. மலைக்கும் மடுவுக்குமான அளவு பெரிது.

ஒரு தோழர். அவருக்கு நபியவர்களின் அறிவிப்பு, சொல், செயல் என ஒரு விஷயம், ஒரு ஹதீத் தெரியும் என்பதை இப்னு அப்பாஸ் அறிய வந்தால் போதும். அந்த ஒரே ஒரு ஹதீதிற்காக அந்தத் தோழரின் வீடு வெகு தொலைவில் இருப்பினும் பயணப்பட்டுச் செல்வார். அத்தகைய நிகழ்வையும் அவரே விவரித்து, ஆவணமாகியுள்ளது அச்செய்தி.

மதீனாவில் வெயில் கொளுத்தும். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நண்பகல் நேரமாக இருக்கும். அந்நேரங்களில் ஊர் அடங்கிவிடுவது வழக்கம். மக்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்து வீட்டிற்குள் புகுந்தால், சாய்ந்தோ, படுத்தோ இளைப்பாறிவிட்டு, அஸ்ருக்குத் தலையை வெளியே நீட்டுவார்கள். அதன் பிறகுதான் பிற வேலைகள். அப்படியான வெப்ப நேரத்தில் அந்தத் தோழரின் வீட்டிற்குச் செல்வார் இப்னு அப்பாஸ். எப்படியும் அந்நேரத்தில் அந்தத் தோழர் வீட்டில்தானே இருந்தாக வேண்டும்.

வீட்டை நெருங்கியதும் கதவைத் தட்டலாமா என்று யோசிப்பார். ‘நிச்சயம் அனுமதி கிடைக்கும். அந்தத் தோழர் முகம் கோணாமல் வரவேற்பார்தாம். ஆயினும் எதற்கு அவரது இளைப்பாறல் நேரத்தில் குறுக்கிட்டுக்கொண்டு? தோழருக்கும் அனாவசிய அவஸ்தை. தவிர, விலை மதிப்பற்ற செல்வம் வைத்திருக்கும் செல்வந்தர் அவரை உச்சபட்சப் பணிவுடன் அணுகுவதே சரி. வீட்டுக் கதவின் வெளியே படுத்துக் கொள்வோம். வெளியில் வருபவர் எப்படியும் நம்மைப் பார்ப்பார். பேசுவோம். கேட்டுப் பெறுவோம்’ எனத் தோன்றும்.

‘தக தக’ வென்று அனல் தகிக்கும். மேலாடையைக் கழற்றி, கையிலிருக்கும் சிறு மூட்டைக்குள் திணித்துத் தலையணையாக்கிப் படுத்துக் கொள்வார். வெயிலிலும் களைப்பு மெல்லிய உறக்கத்தில் ஆழ்த்த, பாலைப் பகுதியின் வெப்பக் காற்று மெல்லிய தூசியை வீசி, உறங்கிக் கொண்டிருக்கும் அவர்மீது அதுவே போர்வையாகிவிடும்.

அப்படியான ஒரு நிகழ்வுதான் தோழர் தாபித் பின் கைஸ் வீட்டு வாசலில் நிகழ்ந்தது. வீட்டின் உள்ளே இருந்த தோழர் இது எதுவும் தெரியாது. உறக்கம் கலைந்து வெளியே வந்தார். வந்தால், வீட்டு வாசலில் படுத்திருக்கும் அந்த இளைஞரும் அவரது கோலமும் ஆச்சரியப்படுத்தி யார் என்று பார்த்து, அதிர்ந்தார்.

“அல்லாஹ்வின் தூதரின் சிற்றப்பா மைந்தரே! என்ன காரணத்திற்காக வந்தீர்? என்னை வரச் சொல்லித் தகவல் அனுப்பியிருந்திருக்கலாமே?” நபியவர்களின் குடும்பத்தினர்மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பும் நேசமும் மரியாதையும் அப்படி.

“நீங்கள் தகுதி படைத்த மூத்தவர். உங்களை நான் வந்து காண்பதே சரி. மாணவன்தான் அறிவைத் தேடிப் பெற வேண்டுமே தவிர, அது மாணவனைத் தேடி வரக்கூடாது” புழுதியுடலுடன் பணிவாய் நின்றார் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.

அவ்விதம் நேரடியாகக் கேட்டுப் பெற்று மனனம் செய்வதுடன் அவரது பணி நின்றுவிடவில்லை. அந்த ஹதீதை மற்ற அறிவிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க முப்பது தோழர்கள் வரையிலும்கூட அணுகி, கேட்டு, ஆராய்ந்து, பயின்று… “ஒரு விஷயத்தைப் பற்றி அறிய முப்பது தோழர்களிடம் வினவி அறிவேன். அதிகமதிகம் கேட்டு, சரிபார்த்து, அலசி ஆராய்வேன்” என்று பதிவாகியுள்ளது அவர் தம்மைப் பற்றித் தாமே விவரிக்கும் அறிவிப்பு.

ஆழ் ஞானம் உருவானது! குர்ஆனின் வசனங்களுக்குப் பிறரைவிடச் சிறப்பாக அவரால் அர்த்தம் உணர்ந்து விவரிக்க முடிந்தது. எந்தளவென்றால், சிறப்புக்குரிய தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு வியந்துள்ளார். “குர்ஆனுக்கு விளக்கம் அளிப்பதில் இப்னு அப்பாஸுக்கு எவ்வளவு மேதைமை!”

இப்னு அப்பாஸ் அறிவைத் தேடுவதற்குத் தம்மை எந்தளவு பணிவடக்கத்துடன் தாழ்த்திக் கொண்டாரோ அந்தளவிற்கு அறிஞர்களை கௌரவித்தார். ஒருமுறை ஸைது இப்னு தாபித் (ரலி) எங்கோ செல்வதற்காகத் தம் குதிரையில் ஏற வந்தார். நபியவர்கள் தமக்கு அருளப்படும் குர்ஆன் வசனங்களை எழுத்தில் எழுதி வைக்க நியமித்து வைத்திருந்த தோழர்களுள் முக்கியமானவர் அவர். அச்சமயம் மதீனாவில் இருந்த அறிஞர்களுள் முதன்மையானவர். வாரிசுரிமைச் சட்டங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர். அவர் தமது குதிரையில் ஏறச் சென்றபோது அதன் சேணத்தையும் கடிவாளத்தையும் ஒரு பணியாளைப் போல் பணிவுடன் பற்றி நின்றிருந்தார் இப்னு அப்பாஸ்.

“அல்லாஹ்வின் தூதருடைய சிற்றப்பா மைந்தரே! இதைப் பணியாள் பார்த்துக்கொள்வார்” என்றார் ஸைது.

“இவ்விதம்தான் நாங்கள் அறிஞர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்” என்றார் இப்னு அப்பாஸ்.

“உங்களுடைய கையைக் காண்பியுங்கள்” என்ற ஸைதிடம் இப்னு அப்பாஸ் தம் கையைக் காண்பிக்க, வளைந்து அதைப் பற்றி, முத்தமிட்டார் ஸைது.
“அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தினரை நாங்கள் இப்படித்தான் மதிப்புடன் நடத்தவேண்டும்” என்றார் ஸைது.

என்ன சொல்ல? போட்டியெல்லாம் பணிவில் என்று வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.

இப்படியெல்லாம் கற்று, பயின்று இப்னு அப்பாஸ் உயர்ந்து, பிற்காலத்தில் மக்கள் அவரிடம் பயில முட்டி மோதுவதைப் பார்த்து, முன்னர் வாய்ப்பைத் தவறவிட்ட அன்ஸாரி கூறினார், “அந்த இளைஞர் என்னைவிட புத்திசாலி.”

‘முட்டி மோதுவதா?’ மிகையற்ற விவரிப்புதான் அது. அதையும் இப்னு அப்பாஸின் புத்தி சாதுர்யத்தைத் அழுத்தந்திருத்தமாய்த் தெரிவிக்கும் நிகழ்வுகளும் நிறைய உண்டு. சிலவற்றையாவது பார்ப்போம்.

oOo

இன்னும் வருவார், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் முகப்பு |  தோழர்கள்-58 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.