பா.ஜ.க வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல்!

http://www.livechennai.com/businesslistings/News_photo/TNEC0610_01.jpgடாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்!

 

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக…. அரசியல் தலைவரை கண்டித்து புதிய வரலாறு படைத்த தேர்தல் ஆணையம்!

 

மனு கொடுத்தார் தமிழிசை

6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு வேட்பாளர் பிரபாகரன் என்பவர் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உடனடி விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து, அவர் முன்னிலையிலேயே விழுப்புரம் மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரின் விரிவான விசாரணை அறிக்கையை உடன் ஆணையத்திற்கு அனுப்புமாறு ஆணையிடப்பட்டது.

தமிழிசை சொன்னது பொய்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர். அதில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டு உறுப்பினர் தேர்தல் வேட்பாளர் பிரபாகரன் என்பவரை காணவில்லை என மேல்மலையனூர் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த குமார் என்பவர் புகார் கொடுத்ததாகவும், காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபாகரனது குடும்பத்தினர் எவரும் இதுகுறித்து புகார் ஏதும் அளிக்கவில்லை எனவும், குமார் என்பவர் புகார் கொடுத்தது குறித்து தெரியவந்தவுடன் உடனடியாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபாகரன் தானே காவல் நிலையத்தில் ஆஜராகி தனது வீட்டில்தான் தாம் இருப்பதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், பா.ஜ.க.வினர் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொய் செய்தி.. பொய்ப் புகார்

எனவே, அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பொய்யான தகவல் என்றும், பத்திரிகைகளில் வந்தது பொய் செய்தி எனவும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொறுப்பு வேண்டாமா?

அரசியல் கட்சிகள் புகார் அளிக்கும் முன்பும், மாநில தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் கொடுக்கும் முன்பும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போதும் சம்பந்தப்பட்ட செய்திகள் உண்மையா என விசாரித்து உண்மை நிலை அறிந்து அதற்கு பின்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

துரிதமாக நடவடிக்கை எடுக்கிறோம்

மாநில தேர்தல் ஆணையத்தில் கிடைக்கப்பெறும் எந்த ஒரு செய்திக்கும் ஆணையமானது உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, அறிக்கையைப் பெற்று அதன் மீது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற தவறான செய்திகளால் மாநில தேர்தல் ஆணையத்தின் துரிதமான பணிகளில் இயற்கையான தடைகள் ஏற்படுகின்றன என்பதை மாநில தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஆணையத்தால் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் அவற்றின் உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில்

தமிழக தேர்தல் ஆணையமானது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். இது சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தவிர பிற தேர்தல்களை நடத்தி வருகிறது.

நன்றி: Oneindia (செப் 08, 2014)