சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 89

மைரீயோஹ்கெஃப்ஹலோன் போர்
Share this:

89. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிரியாவிலிருந்து தெற்கே எகிப்துக்குத் திரும்பிய நேரத்தில் சிரியாவின் வடக்கே ரோம ஸல்தனத்தின் சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கும் (Kilij Arslan II) பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கும் (Manuel I Komnenos) இடையே மைரீயோஹ்கெஃப்ஹலோன் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. பைஸாந்தியத்தின் இடுப்பைச் சுக்கு நூறாக ஒடித்துப் போட்ட வரலாற்று பிரசித்தி மிக்க போர் அது.

சுல்தான் ஸலாஹுத்தீன் சரி; இரண்டாவதாக இந்த சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலான் யார்? பைஸாந்தியத்தை ரோம சாம்ராஜ்யம் என்போம்; இது என்ன ரோம ஸல்தனத்? பலருக்கும் வியப்பும் குழப்பமுமாக இவ்விதக் கேள்விகள் தோன்றலாம். பல அத்தியாயங்களாக எகிப்திலும் ஃபலஸ்தீனிலும் சிரியாவிலும் இராக்கிலும் நாம் கவனத்தைச் செலுத்திவிட்டதால் சற்றுப் பின்னோக்கி, –சுமார் நூறு ஆண்டுகள் பின்னோக்கிச்- சென்று இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் வாசித்தவற்றைச் சுருக்கமாக அசைபோட்டு, சில விபரங்களை மீள் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஸெல்ஜுக் துருக்கியர்களின் நாயகனான அல்ப் அர்ஸலானின் பாட்டனார் மீக்காயிலுக்கு மூஸா என்றொரு சகோதரர் இருந்தார். அவருடைய பேரன் சுலைமான். கி.பி. 1070ஆம் ஆண்டுகளில் துருக்கியர்களின் பெரியதொரு படையைத் தலைமை தாங்கிச் சென்ற சுலைமான், பைஸாந்தியத்தின் பல பகுதிகளைக் கடகடவென்று வென்றார். அவையெல்லாம் தமது கட்டுப்பாட்டுக்குள் வர, வர சுலைமானுக்கு அந்த யோசனை உதித்தது.

‘நானும் சுல்தானானால் என்ன?’

என்ன தப்பு? என்று தோன்றியிருக்கலாம். வெகு திறமையாகத் தமக்கென ஓர் ஆட்சியெல்லையை வடிவமைத்துக்கொண்டு, தாம் கைப்பற்றிய பைஸாந்தியத்தின் நைஸியாவை, அதன் தலைநகராக ஆக்கிக்கொண்டு சுல்தானாகிவிட்டார் சுலைமான். கி.பி. 1077ஆம் ஆண்டு அவரது ஆட்சிப் பகுதியாக உருவானது ரோம ஸல்தனத். அன்று உருவான ரோம ஸல்தனத்தின் பகுதிகளே இன்றைய துருக்கி.

சிலுவைப்போர்ப் படையினர் முதன் முதலாக வந்து நுழையும் போது, இஸ்லாமிய ராஜ்யம் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தது; பலவீனமடைந்திருந்தது. பேராபத்து ஒன்று வந்து நுழைகிறது; அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் உட்பூசலிலும் அதிகாரப் போரிலும் முற்றிலுமாகக் கவனம் சிதறிக் கிடந்தது இஸ்லாமிய ராஜ்யம். வெட்கக்கேடான அந்நிலையிலும் சிலுவைப்படையினருக்கு எதிராகப் படை திரட்டிப் போரிட்டார் ஒருவர். அவர் முதலாம் கிலிஜ் அர்ஸலான். ரோம ஸல்தனத்தை உருவாக்கிய சுலைமான் மரணமடைந்ததும் அவருடைய மகனான முதலாம் கிலிஜ் அர்ஸலான் அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவர்தாம் முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தார்.

இந்த ரோம ஸல்தனத்துக்கு நேரெதிர் போட்டியாக, துருக்கிய முஸ்லிம்களுள், டானிஷ்மெண்த் என்றொரு வம்சாவளி உருவாகியிருந்தது. டானிஷ்மெண்த் காஸி (Danishmend Gazi) என்பவரால் கி.பி. 1071ஆம் ஆண்டு இது உருவானது என்பது வரலாற்றுத் தகவல். ரோம ஸல்தனத்துக்குக் கிழக்கே இவர்களது பிரதேசம் உருவாகியிருந்தது. இவர்கள் தங்களது ஆட்சி அதிபரை ”மாலிக்” என்று அழைப்பார்கள். கி.பி. 1100ஆம் ஆண்டு, டானிஷ்மெண்த் காஸியின் மகனான மாலிக் காஸி குமுஷ்திஜின் (Gazi Gümüshtigin) இப்பகுதியை ஆட்சி புரிந்துகொண்டிருந்தார். இப்பகுதிக்குத் தெற்கே ஆர்மீனியர்கள் ஆட்சி புரிந்த சிலிசியா அமைந்திருந்தது. அதையடுத்து அந்தாக்கியா. சிலிசியாவின் வடக்கே உள்ள பகுதிகளையும் அரண்களையும் தாக்கத் தொடங்கினார் டானிஷ்மெண்த் காஸி குமுஷ்திஜின். அங்கிருந்த மெலிடீன் நகரின் அதிபருக்கு அதை எதிர்க்கும் அளவிற்கு வலிமை இல்லை. எனவே, தம்முடைய நட்பரசரான பரங்கியர் பொஹிமாண்டுக்கு, ‘உதவுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று தகவல் அனுப்பினார் அவர். பொஹிமாண்டும் தமது பரங்கியர் படையைத் திரட்டிக்கொண்டு சிலிசியாவின் மெலிடீனுக்கு அணிவகுத்தார்.

பதுங்கிக் காத்திருந்தனர் டானிஷ்மெண்த் படையினர். பரங்கியர் படை நுழைந்ததும் டானிஷ்மெண்த் படை அவர்களைத் திடீரென்று தாக்கி, திகைப்பில் ஆழ்த்தி, சிலுவைப் படை வீரர்களுள் ஏராளமானோரை வெட்டித் தள்ளியது; கொன்று குவித்தது. அர்மீனியாவின் பாதிரியார்கள் கொல்லப்பட்டனர். உச்சக்கட்டமாகச் சிலுவைப் படையின் முக்கிய தலைவரும் அந்தாக்கியாவின் அதிபருமான பொஹிமாண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த முதலாம் சிலுவைப்படை, அப்படியொன்றும் வெட்டி முறிக்க முடியாத சக்தியன்று என்று முஸ்லிம்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டிய போர் மெலிடீன் போர்.

ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அடுத்த சிலுவைப் படை தயாராகிப் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்தது. அதில் பெரும்பாலானோர் இத்தாலியைச் சேர்ந்த லோம்பார்டு (Lombards) குழுவினர். இத்தாலியைச் சேர்ந்த லோம்பார்டுகள், ‘தங்கள் நாட்டைச் சேர்ந்த பொஹிமாண்ட், டானிஷ்மெண்த் காஸி குமுஷ்திஜினால் கைது செய்யப்பட்டு அங்குச் சிறைக் கொட்டடியில் கிடக்க அவரை மீட்காமல் மேற்கொண்டு எந்த வேலையும் பார்க்க முடியாது’ என்று சொல்லி டானிஷ்மெண்த் பகுதியை நோக்கி அணிவகுத்தனர்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் தரப்பில் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. ரோம ஸல்தனத்துக்குப் போட்டியாக உருவாகியிருந்த டானிஷ்மெண்த் வம்சாவளியின் மாலிக் காஸி குமுஷ்திஜினும் ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலானும் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு தோளோடு தோள் கைபோட்டுக் கூட்டாளிகளாகி விட்டனர். இரு தரப்புப் படைகளும் நட்புப் படைகளாயின.

புதிதாய்க் கிளம்பி வந்த சிலுவைப்படையின் மூன்று பிரிவுகளுடன் கிலிஜ் அர்ஸலான்–குமுஷ்திஜின் கூட்டணி மூன்று முக்கியப் போர்களை நிகழ்த்தின. மூன்றும் முத்தாய்ப்பாய்ப் பெருவெற்றியில் முடிந்தன. இந்த வெற்றிகளுக்குப் பிறகு கிலிஜ் அர்ஸலானின் புகழ் ஓங்கியது. டானிஷ்மெண்த் துருக்கியர்களின் படைகளும் தம் பங்கிற்குத் தங்கு தடையின்றி முன்னேறி எடிஸ்ஸா மாநில எல்லை வரை வந்து நின்றன. அங்கு மலாட்யா நகரைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரையும் கைது செய்தார் காஸி குமுஷ்திஜின். அதில் புதிதாக உருவானது கிலிஜ் அர்ஸலானுக்கும் காஸி குமுஷ்திஜினுக்கும் இடையே ஒரு விரிசல். ‘மலாட்யா எனக்கு’ என்று வந்து நின்றார் கிலிஜ் அர்ஸலான்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொஹிமாண்டை விடுவிக்க, காஸி குமுஷ்திஜினிடம் பெரும் பணயத் தொகைக்கான பேரம் ஒன்று நடைபெற்றது. அதை அளிக்க முன்வந்தவர் பைஸாந்திய சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் என்கின்றன சில தகவல்கள். அந்தப் பணயத் தொகையில் தமக்கும் சரிபாதி பங்கு வேண்டும் என்று கிலிஜ் அர்ஸலான் கோரினார். அதுவும் ஒரு முக்கியமான பிணக்காக கிலிஜ் அர்ஸலான்–காஸி குமுஷ்திஜின் இடையே ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சினைகளை நீங்கள் உங்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று பணயத் தொகையை பேரம் பேசிக் குறைத்து, அதை முழுவதுமாக காஸி குமுஷ்திஜினிடம் அளித்துவிட்டு, விடுதலை அடைந்து சென்றுவிட்டார் பொஹிமாண்ட்.

இந்நிலையில் கிலிஜ் அர்ஸலானின் விதி வேறு விதமாக முடிந்தது. மோஸுலில் ஏற்பட்டிருந்த அரசியல் பிரச்சினைகளின் விளைவாக, தம்மிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவச் சென்ற முதலாம் கிலிஜ் அர்ஸலான், அங்கு நிகழ்ந்த யுத்தத்தில் காபூர் ஆற்றில் மூழ்கி மரணமடைந்தார்.

oOo

முதலாம் கிலிஜ் அர்ஸலானின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகன் முதலாம் மஸ்ஊத், ரோம ஸல்தனத்தின் சுல்தானாகப் பட்டமேற்றார். அலெக்ஸியஸுக்குப் பிறகு முதலாம் மேனுவெல் பைஸாந்தியத்தில் சக்கரவர்த்தியானார். இவர் தற்காலிக சமாதான உடன்படிக்கை ஒன்றை கிலிஜ் அர்ஸலானுடன் ஏற்படுத்திக்கொண்டார். காரணம், சிலுவைப்படை. முதலாம் சிலுவைப்போரின் போது சிலுவைப்படை பைஸாந்தியர்களின் ஊரில் நடத்திய களேபரங்களும் அடித்த கொள்ளைகளும் ஏற்படுத்தியிருந்த வெறுப்பில் இரண்டாம் படையெடுப்பாக அவர்கள் ஐரோப்பாவிலிருந்து கிளம்பி வரும் செய்தி அறிந்து ரோம ஸல்தனத்துடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அரசியல் சமரசம் அது.

பைஸாந்தியத்தின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றானதும் சிலுவைப்படையினர் முதலாம் சிலுவைப் படை சென்ற பாதையில் அதேபோல் செல்வது; அதேபோல் வெல்வது என்று திட்டமிட்டனர். ஆனால், இப்பொழுது அங்கு ரோம ஸல்தனத்தின் சுல்தானாக அமர்ந்திருந்த கிலிஜ் அர்ஸலானின் மகன் மஸ்ஊத், கூர் தீட்டிய ஆயுதங்களும் இதழோரத்தில் குறுஞ்சிரிப்புமாக, ‘இதற்குத்தானே காத்திருந்தேன் இத்தனை நாளாய்’ என்று சிறப்பான முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்தார்.

வறண்ட நிலப்பரப்பில் வியர்க்க விறுவிறுக்க வந்துகொண்டிருந்தது ஜெர்மனிய சிலுவைப்படை. அது நன்கு முன்னேறி வரட்டும் என்று காத்திருந்தார் மஸ்ஊத். சுற்றியிருந்த மலை முகடுகளில் அவரது படை பரவி மறைந்து நின்றது. அங்கு வந்து சேர்ந்த சிலுவைப்படையைச் சற்றும் எதிர்பாராத வகையில் சுல்தானின் படை தாக்கத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இரண்டாம் சிலுவைப்போர் படையினரைத் தாக்கித் துரத்தியடித்தார் சுல்தான் மஸ்ஊத்.

சுல்தான் மஸ்ஊதுக்குப் பிறகு ரோம ஸல்தனத்தின் ஆட்சியில் அமர்ந்தார் அவருடைய மகன் இஸ்ஸத்தீன் கிலிஜ் அர்ஸலான். பாட்டனாரின் பெயருடன் குழப்பம் தவிர்க்க வரலாற்று நூல்களில் இவரது பெயர் இரண்டாம் கிலிஜ் அர்ஸலான். (சொச்சமுள்ள இந்த அத்தியாயத்திற்கு வாசிக்க வசதியாக நமக்கு இவர் இப்போது வெறுமே கிலிஜ் அர்ஸலான்.)

கி.பி. 1158ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் பைஸாந்தியர்கள் ரோம ஸல்தனத்தின் மீது படையெடுத்தபடியே இருந்தார்கள். அதில் அவர்களுக்கு வெற்றி விளையவில்லை. மாறாக பைஸாந்தியத்திற்கு ரோம ஸல்தனத் கட்டுப்பட்டதாக உடன்படிக்கை மட்டுமே ஏற்பட்டது. ஆனால் அது பலவீனமான ஒப்பந்தம். ஏனெனில், கிலிஜ் அர்ஸலான் தமது எல்லைப்பரப்பைக் கடற்கரையை ஒட்டியுள்ள வளமான நிலங்கள் வரை விரிவாக்கும் கனவுடன் இருந்தார். சக்கரவர்த்திக்கோ அந்த ஸெல்ஜுக் துருக்கியர்களிடம் நூறாண்டுகளுக்கு முன் மன்ஸிகர்த் யுத்தத்தில் பைஸாந்தியம் இழந்த அனடோலியா பகுதிகளை மீட்டெடுக்கும் வேட்கை!.

ஆகவே இரு தரப்பினரும் இந்த அமைதி ஒப்பந்தக் காலத்தைப் பயன்படுத்தி அவரவர் இராணுவ வலிமையைப் பெருக்கிக்கொண்டனர். பைஸாந்தியம் ஹங்கேரியைத் தோற்கடித்து, பால்கன் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது; பரங்கியர்கள் முதலாம் சிலுவைப்போரில் வென்று ஆட்சி புரிந்த அந்தாக்கியா மாநிலத்தைத் தமக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக ஆக்கியது. கிலிஜ் அர்ஸலான் தம் நாட்டிற்குள் தமக்குப் போட்டியாக உருவாக முனைந்த எதிரிகளையெல்லாம் களையெடுத்து விட்டு, படையை வலிமைப்படுத்துவதில் ஈடுபட்டார். சிரியாவில் நூருத்தீனின் மறைவிற்குப் பிறகு ஸலாஹுத்தீனின் கவனமெல்லாம் எகிப்திலும் ஃபலஸ்தீனிலும் குவிந்து கிடந்ததால், அதன் வடக்கே இருந்த இவர் ரோம ஸல்தனத்துக்குப் போட்டியாக வீற்றிருந்த டானிஷ்மெண்ட் எமிரேட்ஸைத் தாக்கினார். அங்கிருந்த அமீர்களெல்லாம் தப்பித்து ஓடி பைஸாந்தியச் சக்கரவர்த்தி மேனுவெலிடம் அடைக்கலம் கோர, ‘இதுதான் சாக்கு’ என்று அவருக்கும் கிலிஜ் அர்ஸலானுக்கும் இடையே ஒட்டிக்கொண்டிருந்த ஒப்பந்தம் பிய்ந்து போனது.

’ரோம ஸல்தனத்தை நசுக்காமல் இனியும் வாளா இருப்பதா?’ என்று வெகுண்டெழுந்தார் மேனுவெல். ஏறத்தாழ 35,000 எண்ணிக்கையிலான படை வீரர்களைத் திரட்டிக்கொண்டு அணிவகுத்தார். அது கிலிஜ் அர்ஸலானுக்கும் மிரட்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்; பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார். தம் கை ஓங்கியிருப்பதை உணர்ந்த மேனுவெல் அதை விழைவாரோ? முதலில் படையின் ஒரு பிரிவை அமேசியா நகரை நோக்கி அனுப்பி விட்டு, தாம் தம் படையின் பெரும் பிரிவுடன் ஸெல்ஜுக்கியர்களின் தலைநகரான ஐகோனியம் நோக்கி அணிவகுத்தார். ஆனால், வாய்ப்புக்கேடாக பைஸாந்தியப் படைகள் முன்னேறிய இரண்டு பாதைகளுமே துருக்கியர்கள் எளிதாகப் பதுங்கியிருந்து தாக்குதல் தொடுக்கத்தக்க அடர்ந்த காட்டுப் பகுதி. அமேசியாவுக்கு முன்னேறிய படையை அவ்விதம் பாய்ந்து தாக்கி, அழித்து ஒழித்தார் கிலிஜ் அர்ஸலான். பைஸாந்திய சக்கரவர்த்தியின் தலைமையில் வந்த படையை விடாது துன்புறுத்தி மைரீயோஹ்கெஃப்ஹலோன் கோட்டைக்கு அருகிலுள்ள சிவ்ரிட்ஸ் மலைக்கணவாயை நோக்கித் தள்ளினார்.

1176ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் நாள் நிகழ்ந்தது மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம்.

கணவாயில் சிக்கிய பைஸாந்தியப் படைகளை, கிலிஜ் அர்ஸலானின் படையினர் சுற்றி வளைத்தனர். மலை உச்சியிலிருந்தும் நான்கு திசைகளிலிருந்தும் இடைவெளியின்றித் தாக்கினர். திக்கு முக்காடிய பைஸாந்தியப் படை முன்னால் நடந்த கொடூரத்தைக் கண்டு பின்வாங்கினால், பின்புறமும் அடிவாங்கியது. ஒரு பதுங்குத் தாக்குதலிலிருந்து தப்பித்து ஓடியவர்கள் மற்றொரு தாக்குதலில் சிக்கினர். சுமைவண்டிகள் தாக்கி நொறுக்கப்பட்டன. அவற்றை இழுக்கும் விலங்குகள் கொல்லப்பட்டன. அமேசியாவுக்கு முன்னேறிய படைகளின் தளபதியைக் கொன்று, தலையைப் பத்திரப்படுத்தியிருந்தார்கள் துருக்கியர்கள். அதை ஈட்டியில் செருகிக் களத்தில் உயர்த்திப் பிடித்துக் காட்சிப்பொருளாக்கியதும் அச்சமுற்றுச் சோர்வடைந்தது பைஸாந்தியப் படை. போதாக்குறைக்குத் திடீரெனத் தோன்றிய மணல் புயல் கண்களைக் குருடாக்கி, பைஸாந்தியப் படைகளின் ஒழுங்கை மேலும் குலைத்தது.

அத்துடன் பைஸாந்தியப் பேரரசர் மேனுவெல் நம்பிக்கை இழந்து களத்திலேயே உட்கார்ந்து விட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைக்குக் கை நீட்டினார். ஏராள உயிரழப்பு; ஆயுதங்களும் முற்றுகை இயந்திரங்களும் முற்றிலும் நாசம். எனும்போது அவருக்கு வேறு வழி? பைஸாந்தியம் தாம் முன்னர்க் கைப்பற்றியிருந்த கோட்டைகளிலிருந்து தம் படைகளை விலக்கிக்கொள்ளும் என்று கிலிஜ் அர்ஸலானிடம் சமாதானம் ஏற்படுத்திக்கொண்டார் பைஸாந்தியப் பேரரசர்.

இந்தப் போரில் மேனுவெல் வென்றிருந்தால் சிரியாவின் வடக்கே அவர் மிகப் பெரிய சக்தியாக மாறியிருக்கக்கூடும்; ஜெருசல இராஜாங்கமும் அவருடன் இணைந்து ஸலாஹுத்தீனுக்கு எதிராகப் பெரியதொரு தாக்குதலைத் திட்டமிட்டிருக்கக்கூடும். ஆனால், அத்தோல்வி பைஸாந்தியத்தின் இராணுவ வலிமையை முற்றிலும் நசுக்கி விட்டது. 105 ஆண்டுகளுக்கு முன் மன்ஸிகர்த் போரில் பைஸாந்தியர்கள் அடைந்த தோல்வியுடன் மேனுவெல் தாமே ஒப்பிடும்படி ஆனது. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம் அத்தகு அவமானத்தை அவருக்கு அளித்தது.

oOo

இவ்வாறு பைஸாந்திய சக்கரவர்த்தியின் இடுப்பை ஒடித்து ரோம ஸல்தனத்தின் ஆளுமையாக உருவெடுத்த இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபிக்கும் இடையே பின்வரும் காலத்தில் மோதல் ஏற்பட்டது. அது என்னாயிற்று என்பதை அப்போது பார்ப்போம்.

(தொடரும்)


Share this: