சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-53

Share this:

இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 1

பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது. இவர் முதலாம் சிலுவைப் போருக்குக் காரணமாக இருந்த அலக்ஸியஸ் காம்னெனஸின் பேரன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அந்தச் சிலுவைப்படையின் அட்டூழியங்களைக் கண்டு திகைத்தவர்களுள் எஞ்சிய சிலர் இன்னமும் பைஸாந்திய அரசவையில் இருந்தனர். அவர்களுக்கும் அந்த நிகழ்வுகளுக்கு ஆட்பட்ட மக்களுக்கும் இச்செய்தி அடிவயிற்றைக் கலக்கியது. முதலாம் சிலுவைப்போரின் போது சிலுவைப்படை பைஸாந்தியர்களின் ஊரில் நடத்திய களேபரங்களும் அடித்த கொள்ளைகளும் அப்படியானவை.

தம்மளவில் சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கும் இந்தச் சிலுவைப்படையின் மீதோ அதன் நோக்கத்தின் மீதோ எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. மாறாக, தமது அதிகாரமும் பைஸாந்தியத்தின் ஆளுமையும் சேதமடையும்; செல்வாக்குப் பறிபோகும் என்றுதான் அவருக்குக் கவலையும் அச்சமும் ஏற்பட்டன. கிழக்கு நோக்கி வருகிறது புயல். கடக்கும் போது அது நமக்கும் அனாவசிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் போகிறது. முன்னெச்சரிக்கையே உத்தமம் என்று தற்காப்புக்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினார் அவர். தலைநகர் கான்ஸ்டண்டினோபிளின் காவல் பலப்படுத்தப்பட்டது. அதிகப்படியான துருப்புகள் குவிக்கப்பட்டன. சிலுவைப்படையை பைஸாந்தியப் படை பின் தொடர வேண்டும்; அவர்கள் வரம்பு மீறினால் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. இவை அனைத்திற்கும் மேலாக ஸெல்ஜுக் சுல்தான் மஸ்ஊதுடன் தற்காலிக சமாதான உடன்படிக்கை ஒன்றையும் மேனுவெல் ஏற்படுத்திக்கொண்டார்.

கிலிஜ் அர்ஸலானின் மகனான முதலாம் மஸ்ஊத் அச்சமயம் ரோம ஸல்தனத்தின் சுல்தானாக வீற்றிருந்தார்.  பைஸாந்திய சக்கரவர்த்தியின் இச்செயல் சிலுவைப்படைக்கு ஆற்றமாட்டா ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த சமாதான உடன்படிக்கை மாபெரும் துரோகம் என்று அவர்கள் துடித்தனர்.

ஹி. 542 / கி.பி. 1147ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஜெர்மனியின் ராஜா கான்ரெட் தலைமையிலான படை பைஸாந்தியம் வந்து சேர்ந்தது. வளப்பமான பைஸாந்தியப் பகுதிக்குள் நுழைந்ததுமே, அவர்களுக்கு பைஸாந்தியப் படையினருடன் ஏற்பட்டன முட்டல், மோதல், கலகம். தற்காத்துக்கொண்டால் போதும் என்ற நிலையில், அந்தச் சிலுவைப்படையை வேகவேகமாக பாஸ்பரஸ் ஜலசந்திக்கு நகர்த்தி, கடந்தால் அதோ ஆசியா மைனர் என்று காட்டி, சம்பிரதாயத்துக்குச் சில வழிகாட்டிகளையும் தந்து அவர்களை நெட்டித்தள்ளினார் சக்கரவர்த்தி மேனுவெல்.

பைஸாந்தியத்தின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றானதும் சிலுவைப்படையினர் – ஜெர்மன் படையும் பிரெஞ்சு படையும் – ஆசியா மைனரில் ஒன்றிணைந்து தங்களது அடுத்த நகர்வைத் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆண்டின் அக்டோபர் மாத இறுதியில், நைஸியாவுக்குத் (Nicaea) தென் கிழக்கே உள்ள டொரிலியம் நோக்கித் தமது ஜெர்மன் படையுடன் தனியே அணிவகுத்தார் கான்ராட். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் முதலாம் சிலுவைப்போரில் அன்றைய சிலுவைப்படை, கிலிஜ் அர்ஸலானை வென்ற அதே டொரிலியம். கான்ராடின் திட்டம், முதலாம் சிலுவைப் படை சென்ற பாதையில் அதேபோல் செல்வது; அதேபோல் வெல்வது. ஆனால், இப்பொழுது அங்கு சுல்தானாக அமர்ந்திருந்த கிலிஜ் அர்ஸலானின் மகன் மஸ்ஊத், கூர் தீட்டிய ஆயுதங்களும் இதழோரத்தில் குறுஞ்சிரிப்புமாக இதற்குத்தானே காத்திருந்தேன் இத்தனை நாளாய், என்று தம் தந்தையின் சார்பில் பழி தீர்க்கச் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்தார்.

வறண்ட நிலப்பரப்பில் வியர்க்க விறுவிறுக்க வந்துகொண்டிருந்தது ஜெர்மனிய சிலுவைப்படை. அது நன்கு முன்னேறி வரட்டும் என்று காத்திருந்தார் மஸ்ஊத். சுற்றியிருந்த மலை முகடுகளில் அவரது படை பரவி மறைந்து நின்றது. அங்கு வந்து சேர்ந்த சிலுவைப்படையை சற்றும் எதிர்பாராத வகையில் சுல்தானின் படை தாக்கத் தொடங்கியது. மழையாய்ப் பொழிந்தன முஸ்லிம் படையினரின் அம்புகள். பதுங்கியிருந்து வந்து தாக்கிவிட்டு விரைந்து மறையும் துருக்கிய குதிரை வீரர்களின் போர் தந்திரம் என்பது ஜெர்மனியப் படையினருக்கு அறிமுகமில்லாதது. திகைத்துத் திணறிவிட்டனர். தளபதிகள் படைக் கட்டுப்பாட்டை இழந்தனர். களைப்பாலும் தாகத்தாலும் தவித்துப் போயிருந்த சிலுவைப்படையினர் மலைகளின் இடையே ஓடித் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றால் அங்கும் தாக்குதல். தாகத்தில் தவித்த குதிரைகளோ நகர மறுத்தன. ஆகாரக் கையிருப்போ குறைந்தது. குழப்பமும் பீதியும் அவர்களைச் சூழ்ந்தன.

ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, களமெங்கும் சடலங்கள், குருதிச் சகதி. ஜெர்மனிய ராஜா கான்ராடுமே கூட தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. தலைக்காயத்துடன் தலை தப்பியிருந்தார் அவர். நிலைமை கை மீறிவிட்டது, பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்துத் திரும்ப யத்தனித்தால், சுல்தான் மஸ்ஊத் அதற்கும் விடவில்லை. சிலுவைப்படையின் முன் பகுதி, பின் பகுதி, அதன் மையப் பிரிவு அனைத்தும் எந்தப் பாகுபாடும் இன்றித் தாக்குதலுக்கு உள்ளாயின. ஒருவழியாக, தப்பிப் பிழைத்த படையினரைத் திரட்டிக்கொண்டு நைஸியா நகருக்குத் திரும்பி ஓடினார் ஜெர்மனிய ராஜா கான்ராட். பிழைத்தவர்களுள் நைந்து நொந்துபோன பலர், பட்டவரை போதும் என்று ஜெர்மனிக்கே திரும்பிவிட்டனர். ஏராளமான போர்க் கைதிகள், குதிரைகள், சிலுவைப்படை போட்டுவிட்டுச் சென்ற ஆயுதங்கள், தளவாடங்கள், இன்னபிறவும் போர்ச் செல்வங்களாக சுல்தான் மஸ்ஊத் படையினர் வசமாயின.

இரண்டாம் சிலுவைப்போருக்கு அவர்களின் முதல் தோல்வி இவ்விதம் முன்னுரை எழுதி முடித்தது.

oOo

ஜெர்மனியப் படை கான்ஸ்டண்டினோபிளைக் கடந்த பின், பிரெஞ்சு ராஜா ஏழாம் லூயீயின் தலைமையிலான படை பைஸாந்தியம் வந்து சேர்ந்திருந்தது. முதலில் அமைதியாகத்தான் அவர்கள் முன்னேறி வந்தார்கள். ஆனால் கான்ஸ்டண்டினோபிளுக்கு வெளியே முகாமிட்டதும் அவர்களும் களேபரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். பிரெஞ்சு பாதிரியார் ஒருவர் கான்ஸ்டண்டினோபிளைத் தாக்க வேண்டும் என்று கூட அறிவித்துவிட்டார். ஆனால் ராஜா லூயீ இடைபுகுந்து அதை நிராகரித்து, சமாளிக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கும் ஆசியா மைனருக்கு வழிகாட்டி, பைஸாந்திய சக்கரவர்த்தி அங்கிருந்து கிளப்பி அனுப்பி வைத்தார்.

அங்கு டொரிலியத்தில் ஜெர்மனியப் படைக்கும் சுல்தானின் படைக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கும்போதே ராஜா லூயீ நைஸியா வந்து சேர்ந்து விட்டார். தோற்று ஓடி வந்த ஜெர்மன் ராஜாவிடம் சோகக் கதையை எல்லாம் கேட்டு சமாதானப்படுத்தி விட்டு, அவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு வேறு பாதையில் படையுடன் தெற்கு நோக்கி நகர்ந்தார் அவர். ஆனால் வழியில் ஜெர்மன் ராஜாவுக்கு நோய் ஏற்பட்டு உடல்நலம் கெட்டுப்போனது. அவரை கான்ஸ்டண்டினோபிளுக்கு அனுப்பிவிட்டு, கி.பி. 1148 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், அனடோலியாவின் மேட்டு நிலத்தை நோக்கித் திரும்பியது ராஜா லூயீயின் படை.

சுல்தான் மஸ்ஊத் பிரெஞ்சு ராஜா லூயீயையும் விட்டுவைப்பதாக இல்லை. டிஸெர்ஃபியோஸ் என்ற பட்டணத்தை பிரெஞ்சுப் படை நெருங்கியதும் தம் தாக்குதலைத் தொடங்கினார். ஆரம்பத்தில் இராணுவக் கட்டுக்கோப்புடன் பிரெஞ்சுப் படை அதை எதிர்த்து நிற்கத்தான் செய்தது. ஆனால், துருக்கியர்களின் கடுமையான தொடர் தாக்குதலில் அவர்கள் நிலைகுலைந்தனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, ராஜா லூயீயும் ஒரு கட்டத்தில் சுற்றி வளைக்கப்பட்டார். மரமொன்றில் தஞ்சம் புகுந்து, தாம் கைதாவதிலிருந்து தப்பிக்கும் அவலத்திற்கு உள்ளானார் ராஜா. அது அவரைப் பெரிதும் நடுங்கச் செய்துவிட்டது. பிரான்சில் தம் படையில் வந்து இணைந்த டெம்ப்ளர்களை அழைத்து, அவர்களது உதவியுடன் படையை ஒழுங்கு படுத்தி, கிரேக்கர்கள் வசம் இருந்த துறைமுக நகரமான அடாலியா வந்து சேர்ந்து தப்பித்தார் ராஜா லூயீ. அந்த நாட்களின் அவல அனுபவத்தைப் பின்னர் அவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘பதுங்கியிருந்து பாயும் கொள்ளைக்காரர்களின் தொடர் தாக்குதல்; பயணத்தின் சிரமங்களோ கடுமை; துருக்கியர்களுடன் தினமும் போர்… தொடர்ந்து எங்களது உயிருக்கு ஆபத்துடனேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த அனைத்து ஆபத்திலிருந்தும் தப்பித்துப் பிழைத்தோம். கடவுளுக்கே நன்றி!’

கி.பி. 1148, மார்ச் மாதம். இனி தரை மார்க்கம் சரி வராது என்று முடிவெடுத்த ராஜா லூயீ தம் படையினருள் ஒரு பகுதியை அழைத்துக்கொண்டு, இவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மற்றவர்களை பைஸாந்தியர் வசம் ஒப்படைத்துவிட்டு, அடாலியாவிலிருந்து கப்பல் ஏறி அந்தாக்கியா வந்து சேர்ந்தார். அந்த மீதப் படையினரோ, துருக்கியர்களின் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார்கள். அதிலும் பிழைத்தவர்கள் பசியால் மாண்டு போனார்கள். இதற்கிடையே கான்ஸ்டண்டினோபிளில் தங்கியிருந்து உடல்நலம் தேறிய ஜெர்மன் ராஜா கான்ராட், அங்கிருந்து ஒரு கப்பல் மூலம் ஜெருசலத்திற்கு வட மேற்கே உள்ள ஏக்கர் (Acre) நகரம் சென்று சேர்ந்தார்.

முந்தைய சிலுவைப்படையினரைப் போல் வீராவேசம் நிகழ்த்தலாம் என்று கிளம்பி வந்த இந்த இரண்டாம் சிலுவைப்படை சீரழிந்திருந்தது. இதற்கெல்லாம் காரணம் கிரேக்கர்கள் என்று அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டார்கள் இலத்தீன் சிலுவைப்படையினர். அவர்களது துரோகமே இத்தனை அவலத்திற்கும் காரணம் என்று வெதும்பினார்கள். பைஸாந்தியச் சக்கரவர்த்தி மானுவெல் அவர்களுக்கு வழங்கியது குறைந்த அளவு ஒத்துழைப்புதான்; அதற்கான காரணம் அவருக்கு இருந்ததுதான். ஆனால் அவை இரண்டாம் பட்சமே. முந்தைய நிகழ்வுகளிலிருந்து பாடம் படித்திருந்த கிலிஜ் அர்ஸலானின் மகன் சுல்தான் மஸ்ஊத் சிலுவைப்படைக்கு எதிராக வகுத்திருந்த திட்டமும் அதை வெகு திறமையாகப் பயன்படுத்தி அவர்களிடம் தொடுத்த போரும் அதைச் சற்றும் எதிர்பார்க்காத சிலுவைப்படையின் அலட்சியமும்தாம் முஸ்லிம்களின் வெற்றிக்கும் சிலுவையரின் தோல்விக்கும் முதன்மையாக அமைந்த காரணங்கள்.

‘ஒருகாலத்தில் வீரத்திற்குப் புகழ் பெற்றிருந்தவர்கள் சிதைந்து போனார்கள். முஸ்லிம்களுக்கு அச்சம் ஏற்படுத்துபவர்களாக இருந்தவர்கள் இதன்பின் நகைப்புக்கு உரியவர்களாக ஆகிவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் வில்லியம்.

கப்பலேறிய ராஜா ஏழாம் லூயீ தம் மனைவியுடனும் படை பரிவாரங்களுடனும் அந்தாக்கியா வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு வினோதமான சோதனை ஒன்று ஏற்பட்டது. அவருக்கும் அந்தாக்கியாவின் ரேமாண்டுக்கும் இடையே நிரந்தரப் பிரிவை உண்டாக்கும் பிரச்சினையாக அது முடிந்தது. லூயீயின் படையையும் இணைத்துக்கொண்டு அலெப்போவில் நூருத்தீனை வீழ்த்தலாம், அந்நகரையும் ஷைஸாரையும் கைப்பற்றலாம் என்ற ரேமாண்டின் திட்டத்தின்மீது அப்பிரச்சினை மண் அள்ளிப்போட்டது.

அப்படி என்ன பிரச்சினை?

ஏழாம் லூயீயின் அழகிய மனைவி எல்லெநோருக்கு அந்தாக்கியாவின் ஆட்சியாளர் ரேமாண்ட் மிக நெருங்கிய உறவு. எல்லெநோருடைய தந்தையின் சொந்த சகோதரர்தாம் ரேமாண்ட். அந்த அன்போ, பாசமோ, அந்தாக்கியா வந்து சேர்ந்த எல்லெநோர் நாள்தோறும் சிற்றப்பா ரேமாண்டுடன் அதிக நேரம் தனிமையில் கழித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுவிட்டது என்றொரு வதந்தியை அது உருவாக்கிவிட்டது. உண்மையோ பொய்யோ, திகைத்து, அவமானப்பட்டுப்போனார் ராஜா ஏழாம் லூயீ. வலுக்கட்டாயமாகத் தம் மனைவியை இழுத்துக்கொண்டு அந்தாக்கியாவிலிருந்து வெளியேறினார் அவர். அத்துடன் அந்தாக்கியாவுக்கும் ஏழாம் லூயீயுக்கும் இடையேயான உறவு செப்பனிட முடியாத அளவிற்கு முறிந்தது.

சில காலத்திற்குப் பின் எல்லெநோருக்கும் ஏழாம் லூயீயுக்குமான திருமண உறிவு முறிந்தது; எல்லெநோர் இங்கிலாந்தின் ராஜா இரண்டாம் ஹென்றியை மறுமணம் செய்துகொண்டதும் அவர்கள் இருவருக்கும் முதலாம் ரிச்சர்ட் பிறந்ததும் அவருக்கு ‘சிங்க மகன் ரிச்சர்ட்’ (Richard the Lionheart) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டதும் பிற்காலத்தில் சுல்தான் ஸலாஹுத்தீனுடன் அந்த ரிச்சர்ட் மூன்றாம் சிலுவை யுத்தம் நிகழ்த்தியதும் இங்கு நமக்குச் சுருக்கமான முன் குறிப்புகள்.

ராஜா லூயீ ஃபலஸ்தீன் வந்து சேர்ந்தார். ராஜா கான்ராடும் அப்பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தார், எஞ்சியுள்ள தங்களது படையினரை வைத்துக்கொண்டு, இவர்கள் இருவரும் இந்த இரண்டாம் சிலுவைப்போரில் குறிப்படத்தக்க வெற்றி என்று எதையாவது சாதிப்பார்களா, மீண்டும் அவர்கள் மத்தியில் சிலுவை யுத்த ஜுவாலை வீசுமா என்ற கேள்விகளுடன் சிரியாவிலிருந்த மக்கள் அவர்களது அடுத்தகட்ட நடவடிக்கையைக் கவலையுடன் கவனித்தபடி இருந்தார்கள். அவர்களுக்குப் பெரும் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது சிலுவைப்படையின் அந்த அடுத்த நகர்வு.

அது?

oOo

வரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.