சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் -54

Share this:

54. இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 2

ந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி. மொராக்கோவைப் பூர்விகமாகக்கொண்டவர். இறைமையியலில் வல்லுநர். முஸ்லிம்களின் படைகளுடன் இணைந்த குடிமக்களுள் முண்டியடித்து முன்னால் நின்றார் அவர். அவரைக் கவனித்துவிட்டார் படைத்தலைவர்.

“மதிப்பிற்குரிய முதியவரே! உங்களது வயது போரிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கிறது. நாங்களே முஸ்லிம்களுக்காகத் தற்காத்துப் போரிட வேண்டியவர்கள்” என்று கூறி அவரைத் திரும்பிச் செல்லும்படி வேண்டினார்.

மறுத்தார் அல்-ஃபின்தலாவி. அவர் அளித்த பதில் படைத் தலைவருக்கு வியப்பளித்தது; மற்றவர்களுக்கு உற்சாகத்தை அளவின்றி அளித்தது.

“நான் என்னை விற்றுவிட்டேன். அல்லாஹ் என்னை வாங்கிவிட்டான்” என்றார். குர்ஆனில் உள்ள வசனத்தின் சுருக்கம் அவர் அளித்த பதில்.

முஃமின்களின் உயிர்களையும் பொருள்களையும் அவர்களுக்கு நிச்சயச் சுவனம் உண்டு என்ற உறுதியுடன் அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளைக்) கொல்வார்கள்; (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள் (குர்ஆன் 9:111).

சொல்லிவிட்டு அல்-ஃபின்தலாவி முன்னேறிச் சென்றார்; போரிட்டார்; உயிர்த் தியாகி ஆனார்!.

oOo

ஜெர்மன் – ஃபிரெஞ்சு கூட்டணி சிலுவைப்படை இங்கு வடக்கே கிலிஜ் அர்ஸலானின் மகன் மஸ்ஊதிடம் சிக்கிச் சீரழிந்து பட்ட அவஸ்தைகளும் அடைந்த படுதோல்விகளும் மெதுமெதுவே தெற்கே சென்று சேர்ந்தன. முஸ்லிம்களால் கொல்லப்பட்டும் நோயினாலும் பசியினாலும் பாதிக்கப்பட்டும் பெரும் எண்ணிக்கையில் அவர்களுக்கு உயிர்ச் சேதம் என்று செய்தி வந்ததும் சிரியாவிலும் ஃபலஸ்தீனிலும் இருந்த முஸ்லிம்களுக்கு அது ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததுதான்; என்றாலும் எஞ்சியிருந்த படையினர் எண்ணிக்கையோ பல்லாயிரம். அவர்களுடன் ஜெருசலம், அந்தாக்கியா, திரிப்போலி பகுதிகளில் உள்ள பரங்கியர் படைகளும் இணைந்தால்? ஆகவே, முற்றிலும் ஆபத்து விலகிவிடவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்தே இருந்தனர். சிலுவைப்படையின் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும் என்று எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர். எஞ்சியுள்ள பரங்கியர் படை எந்த நகரத்தை நோக்கித் திரும்பும் என்பது அவர்களுக்குக் கேள்வியாக இருந்தது.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் எடிஸ்ஸா அவர்களது இலக்காக இருந்திருக்க வேண்டும். அதை இமாதுத்தீன் ஸெங்கி மீட்டெடுத்ததுதானே இந்த இரண்டாம் சிலுவைப்போரின் முகாந்திரம்? அதைச் சொல்லி அரற்றித் தானே ஐரோப்பாவில் தூபம் போடப்பட்டது? ஆனால் எடிஸ்ஸாவை நூருத்தீன் ஸெங்கி தம் முழுக் கட்டுப்பாட்டிற்குள் இப்பொழுது கொண்டுவந்து விட்டதால், அடுத்த பெரும் ஆளுமையாக அவர் உருவாகி வருவதால் அவரை முளையிலேயே கிள்ளி எறிய அவர்கள் அலெப்போவைத் தாக்கலாம். நூருத்தீன் ஸெங்கியை முறியடித்தால் அலெப்போவும் வீழும்; எடிஸ்ஸாவும் இலவச இணைப்பாகச் சென்று சேரும்… யூகங்கள் பலவாறாகச் சுற்றி வந்தன.

ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. தர்க்கமெல்லாம் அனர்த்தமாகி, அவர்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்காத டமாஸ்கஸ் இரண்டாம் சிலுவைப்படையின் இலக்கானது. ஏன் அப்படி என்று திகைத்தார்கள் முஸ்லிம்கள். அவர்கள் யாரும் சற்றும் எதிர்பாராதது அது. ஏனெனில், இமாதுத்தீன் ஸெங்கியும் மற்றவர்களும் பரங்கியர்களை எதிர்த்து நின்ற நேரத்தில், அரசியல் ஆதாயத்திற்காக ஜெருசலத்துடன் நட்பு பாராட்டி, பரங்கியர்களுடன் இணக்கமாக இருந்தவர் முயினுத்தீன் உனூர். இப்பொழுது அவர் ஆட்சி செலுத்தும் டமாஸ்கஸை எதிர்த்து வியூகமா என்று அனைவருக்கும் வியப்பு. ஆனால் பரங்கியர்களின் அந்த முடிவு அவர்கள் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வெறுப்பைச் சம்பாதிக்கவும் முஸ்லிம்கள் ஓரணியில் திரளவும் எளிதாக வழி ஏற்படுத்திவிட்டது.

ஹி. 543 / கி.பி. 1148ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே, உடல்நலம் தேறியிருந்த ஜெர்மன் ராஜா கான்ராட், பைஸாந்தியர்களின் உதவியுடன் கப்பலேறி, கடல் மார்க்கமாக ஃபலஸ்தீன் வந்து சேர்ந்துவிட்டார். மே மாதம். சிலுவைப்படையினரும் கடல் மார்க்கமாக டைர் (Tyre), அக்கா (Akka) துறைமுகங்களில் வந்து இறங்கினர். தம் மனைவி தொடர்பான வதந்தியால் அந்தாக்கியாவிலிருந்து கோபமும் வெறுப்புமாக வெளியேறிய ஏழாம் லூயீயும் தம் மனைவி, படையினருடன் ஃபலஸ்தீன் வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும் ஜெருசலம் சென்று சமயக் கிரியைகள் செய்து முடித்தனர்.

இவ்விரு கூட்டணிப் படையினரும் ஜெருசலத்தின் ராஜா மூன்றாம் பால்ட்வினும் அவருடைய தாயார் மெலிஸாண்டும் மூத்த தளபதிகளும் ஜெருசலத்தின் பாதிரிகளும் ஏக்கர் நகரில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். ‘டமாஸ்கஸ் தன்னளவில் தனிப்பெரும் ஆளுமையாக உருவாகி வருகிறது. நமக்கு அண்டை நாடான அது அவ்விதம் உருவாவது ஜெருசலத்திற்குப் பெரும் அபாயம்; ஆகவே முதலில் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்; அதைக் கைப்பற்ற வேண்டும்’ என்றனர் ஜெருசல பரங்கியர்கள். வலிமையும் பெருமையும் மிக்க டமாஸ்கஸைக் கைப்பற்றினால்தான் தாங்கள் மெனக்கெட்டுப் புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்ததற்குத் தகுந்த சன்மானமாக அமையும்; சுல்தான் மஸ்ஊதிடம் பெற்ற அடிக்கும் அடைந்த தோல்விக்கும் களிம்பாக ஆகும் என்று நினைத்தார்கள் ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த சிலுவைப்படையினர். டமாஸ்கஸ் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது எளிது; வெற்றி நிச்சயம் என்று நம்பினர். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. எந்த அளவென்றால், முதல் அடி எடுத்து வைப்பதற்குள் அந்நகரைப் பாகம் பிரித்து, பங்கிட்டுக்கொள்வது வரை அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து விட்டார்கள். ஆனால் அவர்கள் டமாஸ்கஸ் அதிபர் முயினுத்தீன் உனூரின் ராஜ தந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதுதான் சோகம்.

ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த சிலுவைப்படையும் ஜெருசலத்தின் பரங்கியர் படையும் இணைந்தன. மற்ற மாநிலத்திலிருந்து பரங்கியர் படை வந்து சேர்ந்துகொண்டது. பெரும் எண்ணிக்கையில் திரண்ட அக்கூட்டணி டமாஸ்கஸை நோக்கிப் பேரலையாய் நகர்ந்தது.

oOo

பரங்கியர்களின் திட்டம் தெரிய வந்ததுமே, தற்காப்புக்கான அத்தனை முயற்சிகளிலும் முயினுத்தீன் மும்முரமாக இறங்கி விட்டார். தாக்குதலுக்கு இலக்காகும் என்று அஞ்சப்பட்ட பகுதிகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டன. இராணுவத் தளவாடங்கள் குவிக்கப்பட்டன. டமாஸ்கஸை நோக்கி, பாதை நெடுகிலும் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் குடிமக்களும் திரண்டு வந்து இணைந்தனர். டமாஸ்கஸில் உள்ள கிணறுகள் நிரப்பிப் பத்திரப்படுத்தப்பட்டு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த நீராதாரங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. அலெப்போவில் இருந்த நூருத்தீனுக்கும் மோஸூலில் இருந்த அவருடைய சகோதரர் ஸைஃபுத்தீனுக்கும் தகவல் பறந்தது.

அந்தாக்கியா, ஜெருசலம் நகரங்களைப் போல் டமாஸ்கஸுக்குப் பாதுகாப்பு அரண் அமைந்திருக்கவில்லை. தாழ்வான வெளிச் சுவர், அதையடுத்து, கூட்ட நெரிசல் மிகுந்த புறநகர். அவ்வளவே! ஆனால் நகரின் தென் மேற்கே அடர்த்தியான, வளமான பழத்தோட்டங்கள் நிறைந்திருந்தன. அவற்றைச் சுற்றித் தாழ்வான மண் சுவர்கள். அவற்றையொட்டி ஒடுக்கமான, குறுகிய பாதை. புறநகரிலிருந்து ஐந்து மைல் தூரம் அவை நீண்டிருந்தன. ஜெருசலத்திலிருந்து வந்த பரங்கிப்படை அதன் ஊடாகத்தான் முன்னேறி வரவேண்டியிருந்தது. படர்ந்து விரிந்திருந்த சிலுவைப்படையின் வேகத்தை மட்டுப்படுத்தும் முதல் அடுக்குப் பாதுகாப்பாக அந்தப் பாதைதான் அமைந்திருந்தது. மறைந்திருந்து தாக்குவதற்கு இயற்கையாகவே வசதிகள் அமைந்துவிட்ட அப்பகுதியில் முஸ்லிம் படையினர் சிலுவைப்படையின் மீது அம்பு மழை பொழிந்து சின்னாபின்னப்படுத்தி விட்டனர். முன்னேறிச் சென்று, போரிட்டு, உயிர்தியாகி ஆனார் மேலே நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட அல்-ஃபின்தலாவி. பரங்கியர் தரப்பில் கணிசமான இழப்பு. இருப்பினும் தாக்குப்பிடித்துத் தொடர்ந்தது சிலுவைப்படை.

ஹி. 543 / 24 ஜூலை 1148. நகர்ந்து, நகர்ந்து, அன்றைய நாள் முடிவில், நகருக்கு வெளியே அமைந்திருந்த பெருவெளியில் சிலுவைப்படை பாடி இறங்கியது. ஒட்டகங்களின் நீண்ட நெடுவரிசை. அவற்றின் முதுகுகளில் படையினரின் ஏராள பொதிகள். டமாஸ்கஸின் கண்ணுக்கு எதிரே வெகு அண்மையில் சிலுவைப்படை. நிலைமை கைமீறி நகருக்குள் அவர்கள் புகுந்துவிடும் அபாய நிலை. அவ்விதம் நிகழ்ந்துவிட்டால் அடுத்து அவர்கள் நிகழ்த்தப்போகும் வெறிச் செயல்களை எண்ணிப்பார்க்கவே அஞ்சினர் முஸ்லிம்கள்.

அன்றைய இரவு முயினுத்தீன் உனூர் கட்டளையிட, பெரும் பெரும் மரக் கட்டைகளை இழுத்து வந்து வீதிகளில் கிடத்தினர். கற்களையும் கண்டதையும் கொண்டு வந்து கொட்டி, பாதைகளில் தடை ஏற்படுத்தினர். பரங்கியர் படையின் முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் இடைஞ்சலாக இருக்குமோ அவையெல்லாம் மேற்கொள்ளப்பட்டன.

உமைய்யா மஸ்ஜிதில் பெரும் கூட்டம் கூட்டப்பட்டது. ஜிஹாதுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. உத்வேகம் அளிக்கும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அந்நகரில் பெரும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள் வைத்திருந்த குர்ஆனின் பிரதி கூட்டத்தினர் முன்னே உயர்த்திக் காட்டப்பட, மக்கள் மனத்தில் ஆக்ரோஷ ஜுவாலை படர்ந்தது.

காஸிக்கள் என்றொரு குழுவினர் இருந்தனர். இவர்கள் தனித் துருப்புகளாக இயங்குபவர்கள். இஸ்லாத்தின் புனிதப் போராளிகளாகக் கருதப்பட்டவர்கள். எங்கெல்லாம் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிரான போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்று முஸ்லிம்களுடன் இணைந்து போரிடுவதுதான் அவர்களது பணி. அவர்கள் டமாஸ்கஸ் படையுடன் வந்து இணைந்தனர். பொதுமக்களுள் சண்டைத் திறன் வாய்ந்தவர்கள், துருக்கியர்கள் ஆகியோரும் பெருமளவில் படையுடன் சேர்ந்துகொண்டனர். டமாஸ்கஸின் சுற்றுப் பகுதியிலிருந்து ஏராளமான வில்லாளிகள் வந்து டமாஸ்கஸ் படைக்குள் குதித்தனர்.

மறுநாள் விடிந்தது. ஜெர்மன் ராஜா கான்ராடுடன் வயது முதிர்ந்த பாதிரியார் இலியாஸ் என்பவர் உடன் இருந்தார். நீண்ட தாடி அவருக்கு. சிலுவைப்படையினருக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு, நம்பிக்கை. டமாஸ்கஸ் முற்றுகை இடப்பட்டதும் தம் கழுதையில் அமர்ந்தபடி வந்தார் பாதிரியார் இல்யாஸ். அவரது கழுத்தில் சிலுவை ஆடியது. ஒரு கரம் சிலுவையை ஏந்தியிருந்தது. மற்றும் பல பாதிரியார்களும் சிலுவைகளை ஏந்தியபடி குழுமியிருந்தனர். கூட்டத்தினரை நோக்கிப் பேசினார் பாதிரியார் இல்யாஸ்:- “நான் இன்று டமாஸ்கஸைக் கைப்பற்றுவேன் என்று இயேசு கிறிஸ்து எனக்கு வாக்கு அளித்துள்ளார். யாராலும் என்னைத் தடுக்க முடியாது”

ஆரவாரத்துடன் ஆரம்பமானது போர். பகல் முழுவதும் ஓயாத, ஒழியாத அம்பு மழை. இரவு வரை இடைவிடாத சண்டை. பின்னணி இசையாக ஆயுத ஒலிகள், மரண ஓலங்கள். நூருத்தீனும் ஸைஃபுத்தீனும் தம் படைகளுடன் வந்துவிடுவார்கள்; அதுவரை எப்படியும் தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்று சுழன்றார் உனூர். இருள் கவிந்ததும்தான் இருதரப்பும் ஓய்ந்தன. களைத்துச் சோர்வுற்றுத் தத்தம் பகுதிக்குத் திரும்பின. அன்று நடந்த சண்டையில் இளவயது முஸ்லிம் போர்வீரன் ஒருவன் பாதிரியார் இல்யாஸையும் அவருடன் சேர்த்து அவரது கழுதையையும் கொன்றிருந்தான்.

இரவு முழுவதும் டமாஸ்கஸ் படையினரின் ஒரு பகுதி பரங்கியரை எதிர்த்து விழிப்புடன் காவலுக்கு நின்றது. அரண் சுவர்களில் குடிமக்களின் காவல் படை.

அதற்கு அடுத்த நாள். துருக்கியர்களும் குர்தியரும் அரபியரும் நிறைந்த குதிரைப்படை புழுதி பறக்க டமாஸ்கஸுக்கு விரைந்து வந்து முஸ்லிம் படைகளுடன் இணைந்தது. சிலுவைப்படையினரின் முகாம்களைச் சுற்றி வளைத்தனர் முஸ்லிம்கள். அம்புகளும் கற்களும் தொடர்ந்து பொழிந்தன. கூடாரங்களை விட்டு வெளியே வரவே அஞ்சியது சிலுவைப்படை. சிலர் வந்து சண்டையிட்டனர். பறந்து வந்த அம்புகளும் ஈட்டிகளும் அவர்களைக் கொன்றன. சிக்கியவர்கள் வாளுக்கு இரையாகினர். அவர்களுடைய தலைகள் கொய்யப்பட்டன. தலைக்கேற்ப சன்மானம் வழங்கப்பட்டு, அங்கு ஏராளமான பரங்கியர் தலைகள் குவிக்கப்பட்டன.

‘போரில் பெரும் முன்னேற்றம் இல்லை. அடுத்து என்ன செய்யலாம்’ என்று பரங்கியர்கள் ஆலோசித்தனர். நகரின் கிழக்குப் புறம் நகர்ந்து செல்வோம். அங்கிருந்து நேரடித் தாக்குதல் எளிது என்று முடிவானது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக டமாஸ்கஸின் அப்பகுதி பலமான பாதுகாப்புடன் நின்றிருந்தது. மட்டுமல்லாமல் அப்பகுதியில் நீராதாரம் இன்றி வெட்டவெளியில் மாட்டியது சிலுவைப்படை. சுட்டெரிக்கும் வெயில் அவர்களை வாட்டி வதைக்க, டமாஸ்கஸுக்கு முஸ்லிம்களின் உதவிப்படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலும் அவர்களது செவிகளில் தீயாய்ப் பாய்ந்தது. பேரழிவு உறுதி என்று மனத்தளவில் அவர்களது உறுதி குலைந்தது.

அலெப்போ படைகளுடன் நூருத்தீன் வருகிறார்; அவருடைய சகோதரர் ஸைஃபுத்தீன் மோஸூலிலிருந்து தம் படைகளுடன் வருகிறார்; மறுநாள் வந்து சேர்ந்து விடுவார்கள் என்ற தகவலும் வந்து சேர்ந்ததும் ராஜதந்திர யுக்தியில் இறங்கினார் முயினுத்தீன் உனூர். என்னதான் ஒரே கூட்டணியாகக் கிளம்பி வந்திருந்தாலும் பரங்கியர்களுக்கு இடையே நிலவி வந்த மனக் கசப்பும் கருத்து பேதங்களும் உனூருக்குத் தெரிந்திருந்தன. எதிரிப் படையினரின் அந்த பலவீனத்தைச் சிறப்பாகப் பயன்படுதினார் உனூர். அவர்களுக்கு இடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதைகள் தூவப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து வந்துள்ள ராஜாக்கள் கான்ராடுக்கும் ஏழாம் லூயீயிக்கும் அனுப்பிய தகவலில், ‘வந்துகொண்டிருக்கிறார் எங்கள் மன்னர். அதற்குள் நீங்கள் கிளம்பிச் சென்றுவிடுங்கள். இல்லையெனில், நான் இந்நகரை அவர் வசம் ஒப்படைத்துவிடுவேன். அதன் பின் நிகழ்வதற்கு நீங்கள் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்’ என்ற மறைமுக எச்சரிக்கை இருந்தது.

ஜெருசலப் பரங்கியர்களுக்கு வேறு விதமான தகவல் அனுப்பப்பட்டது.

‘எங்களுக்கு எதிராக இந்தச் சிலுவைப்படையினருக்கு உதவும் அளவிற்கு நீங்கள் முட்டாள்களாகி விட்டீர்களா என்ன? உங்களது கூட்டணி அவர்கள் புதியதொரு ஆட்சியை உருவாக்கி உங்களுக்குப் போட்டியாக அமரவே உதவும். அவர்கள் மட்டும் டமாஸ்கஸைக் கைப்பற்றிவிட்டால், உங்கள் வசம் உள்ள கரையோர நகரங்களையெல்லாம் உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆட்சியையும் பறிக்க முற்படுவார்கள். இவற்றையெல்லாம் உணர மறந்துவிட்டீர்களா? என்னைப் பொறுத்தவரை, என்னால் இந்நகரைக் காப்பாற்ற இயலாவிட்டால், ஸைஃபுத்தீனிடம் ஒப்படைத்துவிடுவேன். அவர் டமாஸ்கஸின் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சிரியாவில் உங்களது பகுதிகளில் நிலைத்திருக்க முடியாது என்பதை நன்கு அறிவீர்கள்’

அத்திட்டம் முழு வெற்றியைத் தந்தது. டமாஸ்கஸ் வீழ்ந்தால் யாருக்கு எந்தப் பகுதி, எவ்வளவு பங்கு என்ற காரசாரமான விவாதத்தில் அவர்களுக்கு இடையே இறுக்கம் கூடியிருந்த நிலையில் உனூரிடமிருந்து வந்த மடல்கள் சரியான வேலையைச் செய்தன. ஜெருசலப் பரங்கியர்களுக்கு உனூரின் தகவலில் இருந்த சாத்தியம் அச்சுறுத்தியது. தாமதிக்காமல் முயினுத்தீனுடன் பேசினர். பனியாஸ் கோட்டையை அளிக்கிறேன் என்று பேரம் பேசி ஆசை காட்டினார் முயினுத்தீன் உனூர். அது மிச்ச வேலையைச் செய்தது. நூருத்தீனும் ஸைஃபுத்தீனும் வருவதற்குள் டமாஸ்கஸிலிருந்து கிளம்பி விடலாம் என்று அவர்கள் ஜெர்மன் ராஜாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டனர்.

‘துரோகி! உனூரிடம் சலுகை பெற்று இச்சமயம் கைகழுவுகிறாய்’ என்று குதித்தது இலத்தீன் சிலுவைப்படை. ஒற்றுமை முற்றிலும் சிதைந்து போய், வலிமையுடன் நின்றிருந்த ராஜாக்கள் உறுதி குலைந்து போனார்கள். அச்சமும் பதற்றமும் அவர்களைச் சூழ்ந்தன. வியர்வையோடும் அவமானத்தோடும் பின்வாங்கத் தொடங்கியது சிலுவைப்படை. முஸ்லிம்களின் ஒரு பகுதிப் படை சிலுவைப்படையைப் பின்புறமிருந்து துரத்திக்கொண்டே வர, புறவெளியில் தோப்புகளில் மறைந்திருந்த முஸ்லிம் படையினரோ வெளியேறும் அவர்களை அம்புகளால் மேலும் துளைத்து எடுத்தனர். சிக்கித் தவித்து, மேலும் பல உயிர்களை இழந்து, நாசமடைந்து டமாஸ்கஸிலிருந்து ஒருவழியாக வெளியேறி ஜெருசலம் வந்து சேர்ந்தது சிலுவைப்படை.

வியந்து, மகிழ்ந்து, குதூகலித்தது டமாஸ்கஸ்! சக்திவாய்ந்த பெரும் படை ஒன்று ஐரோப்பாவிலிருந்து வருவதை அறிந்த நாளாய், மாதக்கணக்கில் அச்சத்தில் ஆழ்ந்திருந்ததவர்களுக்கு, அம்மாபெரும் அபாயம் நாலே நாள் போரில் கலகலத்துச் சிதறிவிட்டதை நம்பவே முடியவில்லை. ஒருவேளை இது சிலுவைப்படையின் சூழ்ச்சியோ என்றுகூட நினைத்தனர்.

சோகத்துடன் பின்வாங்கினோம்” என்று பின்னர் எழுதியுள்ளார் ஜெர்மனியின் ராஜா கான்ராட்.

அவர்கள் குழப்பத்தாலும் அச்சத்தாலும் சூழப்பட்டனர்” என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் வில்லியம்.

அல்லாஹ் முஸ்லிம்களைச் சிலுவைப்படையின் தீமைகளிலிருந்து காப்பாற்றினான்” என்று எழுதி வைத்துள்ளார்கள் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள்.

பட்டபாடு போதும் என்று கான்ராட் செப்டெம்பர் மாதம் கப்பலேறி ஐரோப்பா திரும்பினார். அடுத்த ஆண்டு ஏழாம் லூயீயும் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்.

இரண்டாம் சிலுவைப்போர் அத்துடன் படுதோல்வியில் முடிவடைந்தது.

முயினுத்தீன் உனூர் சாதித்துகாட்டிய இவ்வெற்றி அவருக்குப் பெரும் புகழையும் மரியாதையையும் ஈட்டித்தந்தது. முன்னர் அவர் பரங்கியர்களுடன் வரம்பு மீறி ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியையும் இழைத்த தவறுகளையும் மக்கள் மன்னித்து மறக்கத் துணிந்தனர். ஆனால், அவரது ஆயுள் அதற்குப் பின் அதிக காலம் நீடிக்கவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு, உடல் சுகவீனமுற்று, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார் முயினுத்தீன் உனூர்.

அவரையடுத்து, துக்துஜினின் வழித்தோன்றலான அபாக் என்ற பதினாறு வயது இளைஞரிடம் டமாஸ்கஸின் ஆட்சிப் பொறுப்பு சென்றது. நுண்ணறிவு இல்லாத, அரசாளும் தகுதி இல்லாத இளைஞர் அபாக். அதுவே டமாஸ்கஸின் வெற்றியாளராக நூருத்தீன் உருவாக அடித்தளம் அமைத்தது.

oOo

வரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.