சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8

Share this:

சுல்தான்களின் ராஜாங்கம்

ன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ஸலான் வெற்றியடைந்தார், பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV தோல்வியடைந்தார், உதவிப்படை கோரி ஐரோப்பாவில் உள்ள போப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று ஆரம்பித்து, ஐரோப்பாவிற்குள் நுழைந்த நாம் மேற்குலகிலேயே சில அத்தியாயங்கள் சுற்றிக்கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது.

அச்சமயம் கிழக்கே இஸ்லாமிய அரசில் என்ன நடந்தது என்பதை ஓரளவிற்கு விரிவாகவே பார்த்துவிடுவோம். பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் ஐயூபி வகுக்கப்போகும் வியூகத்தைப் புரிந்துகொள்ள அந்நிகழ்வுகளை அறிவது வெகு முக்கியம். தவிர, காலம் நெடுக முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டும் வரலாறு அவற்றில் புதைந்துள்ளதால் அவை அவசியம்.

மன்ஸிகர்த் யுத்தத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டிலேயே (ஹி. 464/கி.பி 1072) அல்ப் அர்ஸலானின் ஆயுள் முடிவுற்று விட்டது. அவருக்கு ஏழு மகன்கள். அவர்களுள் பதினேழு வயது நிரம்பியிருந்த மாலிக்-ஷா அடுத்து சுல்தான் ஆனார். நீளமான இயற்பெயர் கொண்டிருந்த இவர் வரலாற்றில் குறிப்பிடப்படுவது மாலிக்-ஷா I. அடுத்து சுல்தானாக அவர் பதவியேற்றார் என்று சொல்லிவிட்டாலும் அப்படியொன்றும் ஏகோபித்த முடிவாக அவர் தலையில் கிரீடம் ஏறவில்லை.

அல்ப் அர்ஸலானின் சகோதரர் காவுர்த், “நான்தான் வயதில் மூத்தவன். அவருடைய சகோதரன். நீயோ சின்னப்பயல். அதனால் ஆட்சி எனக்கே” என்று முழக்கம் எழுப்பினார். “மகன் உயிருடன் இருக்கும்போது சகோதரனுக்கு வாரிசுரிமை இல்லை ” என்று எதிர்க்குரல் எழுப்பினார் மாலிக்-ஷா. இது என்ன சொத்துத் தகராறா மரத்தடியில் பஞ்சாயத்து நடத்த? இருவரும் போர்க்களத்தில் படைகளுடன் மோதிக்கொண்டார்கள். மூன்று நாள் நடத்த யுத்தத்தில் தம் பெரிய தந்தையைத் தோற்கடித்தார் மாலிக்-ஷா.

தோல்வியை ஏற்றுக்கொண்ட காவுர்த், “சரி என்னை விட்டுவிடு, நான் ஒமன் பகுதிக்குச் சென்று விடுகிறேன்” என்று மன்றாட, அதை மாலிக்-ஷா ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய அமைச்சராக இருந்த நிஸாம் அல்-முல்க், “அப்படியெல்லாம் விட்டுவிட்டால் அது பலவீனத்தின் அடையாளம். பின்னர் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம்” என்று அறிவுறுத்தியதில், காவுர்த் கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொல்லப்பட்டார். போரில் அவருக்கு உதவிய அவருடைய இரண்டு மகன்களின் கண்கள் பிடுங்கப்பட்டன. அதன் பிறகுதான் மாலிக்-ஷா, சுல்தான் மாலிக்-ஷா ஆனார்.

oOo

அல்ப் அர்ஸலானின் பாட்டனார் மீக்காயிலுக்கு மூஸா என்றொரு சகோதரர் இருந்தார். அவருடைய பேரன் சுலைமான். மாலிக்-ஷா அந்த சுலைமானின் தலைமையில் படையணி ஒன்றைத் திரட்டினார். ஸெல்ஜுக் துருக்கியர்களைப் போலவே மற்றும் பல துருக்கியப் பழங்குடியினர்கள் அணியணியாகப் புலம்பெயர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் படைவீரர்களாகக் கொண்டு உருவானது அந்தப் படை. பைஸாந்தியப் பகுதிகளை நோக்கி சுலைமானை அந்தப் படையுடன் அனுப்பி வைக்க, கடகடவென்று அவர்கள் அங்கு வெற்றிபெற ஆரம்பித்தனர். பகுதிகள் பலவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வர, வர, சுலைமானுக்கு அந்த யோசனை உதித்தது. ‘நானும் சுல்தான் ஆனால் என்ன?’

என்ன தப்பு என்று தோன்றியிருக்க வேண்டும். வெகு திறமையாகத் தமக்கென ஓர் ஆட்சியெல்லையை வடிவமைத்துக்கொண்டு, தாம் கைப்பற்றிய பைஸாந்தியத்தின் நைஸியா நகரை அதன் தலைநகராக ஆக்கிக்கொண்டு, சுல்தானாகிவிட்டார் சுலைமான். கி.பி. 1077 ஆம் ஆண்டு அவரது ஆட்சிப் பகுதி ரோம ஸல்தனத் ஆக உருவானது. பாக்தாதில் உள்ள கலீஃபாவின் ஆணைகளையும் விதிமுறைகளையும் பொதுப்படையாக ஏற்றுக்கொண்டாலும் தனிப்பட்ட சுதந்திரமான சுல்தானாகத் தம்மை ஆக்கிக்கொண்டார் சுலைமான். அன்று உருவான ரோம ஸல்தனத்தின் பகுதிகளே இன்றைய துருக்கி.

இதற்கிடையே ஹி. 468 / கி.பி. 1076 ஆம் ஆண்டு, சுல்தான் மாலிக்-ஷாவின் தளபதி அத்ஸாஸ் கவாரிஸ்மி, சிரியாவுக்குச் சென்று டமாஸ்கஸைக் கைப்பற்றினார். மாலிக்-ஷாவின் ஆளுகைக்குள் அந் நகரம் வந்ததும் சிரியாவின் இதர பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பைத் தம் சகோதரரான தாஜுத்தவ்லா துதுஷ் என்பவரிடம் அளித்தார் சுல்தான். படை, பரிவாரங்களுடன் அங்குப் புறப்பட்டுச் சென்றார் துதுஷ். சிரியாவின் அலெப்போ (ஹலப்) நகரம் அச்சமயம் எகிப்தியர்கள் வசமிருந்தது. முதலில் அந் நகரை முற்றுகையிட்டார் துதுஷ். உடனே எகிப்தியப் படை என்ன செய்தது என்றால் தளபதி அத்ஸாஸ் கைப்பற்றி வைத்திருந்தாரே டமாஸ்கஸ், அதை முற்றுகையிட்டது. அந்த முற்றுகையைத் தளபதி அத்ஸாஸால் வெகுநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உதவி வேண்டி துதுஷுக்குத் தகவல் அனுப்பினார். வேறுவழியின்றி துதுஷ் அலெப்போ முற்றுகையைக் கைவிட்டு டமாஸ்கஸைக் காப்பாற்ற விரையும்படி ஆனது. அதைத்தான் எகிப்தியர்களும் விரும்பியிருக்க வேண்டும். முற்றுகையைத் தளர்த்தி அவர்களது படை பின்வாங்கிச் சென்றுவிட்டது. அலெப்போவையும் பிடிக்க முடியவில்லை; இங்கு வந்து எகிப்தியர்களையும் போரில் நொறுக்க முடியவில்லை என்றானதும் ஆத்திரமா, ஆட்சி மோகமா, அல்லது இரண்டும் சேர்ந்தா என்பது தெரியாது, வந்த வேகத்துக்கு, இந்தப் பின்னடைவுக்குக் காரணமான தளபதி அத்ஸாஸை துதுஷ் கொன்றார்.

இங்குச் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, முந்தைய சில அத்தியாயங்களில் உள் நுழையாமல் கடந்து வந்துவிட்ட எகிப்திய அரசு, அதன் அரசியல் பற்றிய சிறு குறிப்பை மட்டும் பார்த்துவிடுவோம். ஃபாத்திமிய ஷீஆ வம்சத்தின் தலைமையகமாக எகிப்து இருந்தது. ஸன்னி முஸ்லிம்களின் அப்பாஸிய கலீஃபாக்கள் இராக்கின் பாக்தாதைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க எகிப்தின் கெய்ரோவில் ஃபாத்திமி வம்ச ஷீஆ கலீஃபாக்களின் ஆட்சி. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்தே தொடங்கிவிடும் ஸன்னி-ஷீஆ பிளவானது ஆன்மீக அளவில் மட்டும் தங்கிவிடாமல், எக்காலமும் தொடரும் இரு துருவ அரசியல். ஷீஆக்களின் ஃபாத்திமி வம்சத்தை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்பதே ஸன்னி அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதைத்தான் ஒவ்வொரு ஸெல்ஜுக் சுல்தானும் அப்பாஸிய கலீஃபாவின் சார்பாக முன்னெடுத்தார். ஃபாத்திமி வம்சத் தோற்றத்தையும் இந்த வரலாற்றுக் காலம் வரையிலான நிகழ்வுகளையும் விரிவாகப் பிறகு பார்ப்போம். இப்பொழுது துதுஷ்ஷைப் பின் தொடர்வோம்.

சிரியாவில் பெருமளவு வளர்ந்து முக்கியத்துவம் பெற்றுவிட்ட ஃபாத்திமி ஷீஆக்களுடன் மும்முரமாக மோதி எகிப்துவரை அவர்களை நெட்டித்தள்ளினார் துதுஷ். ஒருவழியாக சிரியாவைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து டமாஸ்கஸ் நகருக்கு அவர் தம் இருப்பிடத்தை நகர்த்தினார். கடலோர நகரங்கள் சில ஃபாத்திமி ஆதரவாளர்களின் வசம் இருந்தாலும் சிரியாவின் நிர்வாகம் கி.பி. 1080களில் ஸெல்ஜுக்கியர்களின் கைகளுக்குத் திடமாக வந்து சேர்ந்தது. சிரியாவின் பகுதிகள் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஸெல்ஜுக் வம்சத்தைச் சேர்ந்தவர் அரசராக ஆக்கப்பட்டார். அப்படி அரசராகும் நபர் மிகவும் சிறுவராகவோ, இள வயதினராகவோ இருப்பின் அவருக்குப் பொறுப்பாளராக அத்தாபேக் ஒருவர் அமர்த்தப்பட்டார்.

அத்தாபேக் எனப்படும் துருக்கிய வார்த்தைக்கு நெருக்கமான தமிழ்ப் பதம் ‘தந்தையின் பிரதிநிதி’. அத்தாபேக்குகளை உருவாக்கியவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள். சுல்தான்கள் தங்களுடைய துருக்கிய அடிமைகளுள் திறமையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, குட்டி அரசருக்கு ஆசானாகவும் பாதுகாவலராகவும் வாழ்க்கைக்கும் ஆட்சிக்குமான அனைத்துப் பாடங்களையும் கற்றுத் தருபவராகவும் இராணுவப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி அளிப்பவராகவும் நியமித்தார்கள். அவர்களும் குட்டி சுல்தானை சுல்தானாக உருவாக்குவார்கள்; அவரது சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிவார்கள். ஆனால் –

பிற்காலத்தில் ஆங்காங்கே அந்த அத்தாபேக்குகள் தாங்களும் அரசர்களாகவும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் சூத்திரதாரிகளாகவும் மாறி, சில சமயங்களில் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்ததெல்லாம் வியப்பைத் தூண்டும் நிகழ்வுகள்.

சுல்தான் மாலிக்-ஷாவுக்கு, காஸிம் அத்-தவ்லா அக் சுன்குர் என்றொரு பால்ய நண்பர் இருந்தார். ஒத்த வயதுடைய இருவரும் ஒன்றாக ஓடி, விளையாடி வளர்ந்தவர்கள். தாம் சுல்தானாக உயர்ந்ததும் தம்முடைய ஆத்மார்த்தத் தோழரைத் தமது பணிகளுக்கு நம்பகமானவராகவும் தமக்கு நெருக்கமானவராகவும் மாலிக்-ஷா ஆக்கிக்கொண்டார். ஆட்சி அரசியலில் அப்படி ஒருவர் செல்வாக்குப் பெற்று உயர்வது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ? கட்டுப்படுத்த ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அவரை சுல்தானுக்கு அண்மையில் இல்லாமல் ஆக்கினால் போதும் என்று முடிவு செய்து முயற்சிகள் மேற்கொண்டதில், அது வேலை செய்தது. சுல்தான் மாலிக்-ஷா சிரியாவிலுள்ள அலெப்போ, ஹமாஹ், மன்பிஜ், அல்-லாதிகிய்யா நகரங்களை, காஸிம் அத்-தவ்லாவுக்கு நிலவுரிமைகளுடன் பரிசாக அளித்து அந் நகரங்களை ஆளும் ஆளுநராகவும் ஆக்கி அனுப்பி வைத்தார்.

அங்குப் புலம்பெயர்ந்த காஸிம் அத்-தவ்லா ஷைஸார், ஹிம்ஸ் நகரங்களையும் ஃபம்யாஹ் அர்-ரஹ்பாஹ் என்ற படையரண் நகர்களையும் தம் ஆட்சிக்குட்பட்ட நிலங்களுடன் இணைத்துத் திறமையாக ஆட்சி புரிய ஆரம்பித்தார். அவரது ஆட்சிச் சிறப்புக்கு உதாரணமாய் ஹிஜ்ரீ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் இமாம் அபூஷமாஹ் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். வணிகர் கூட்டம் அவரது ஆட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரைக் கடக்க நேர்ந்தால் அதன் உடைமைகளுக்கு அவ்வூர் மக்களே பொறுப்பு என்று அவர் நியதி ஏற்படுத்தியிருந்தார். வணிகர்களின் பொருள், பணம் என்று ஏதேனும் களவு போனால் அவ்வூர் மக்கள்தாம் பொறுப்பு. அவர்கள்தாம் அவற்றைத் திருப்பித் தர வேண்டும் என்பது உத்தரவு. எனவே, வணிகர் கூட்டம் தங்களது உடைமைகளை இறக்கி வைத்துவிட்டு, கால் நீட்டி உடல் நீட்டி ஏகாந்தமாக உறங்க, அவர்கள் கிளம்பிச் செல்லும் வரை அவ்வூர் மக்கள் முறைபோட்டுக் காவல் காத்திருக்கிறார்கள். சாலைகள் கள்வர்கள் தொல்லையின்றிப் பாதுகாவலுடன் திகழ்ந்திருக்கிறது.

சிரியாவின் ஒரு பகுதி நகரங்களைத் தம் தோழருக்கு அளித்த சுல்தான் மாலிக்-ஷா ஃபாத்திமிகளை விரட்டிய தம் சகோதரர் தாஜுத் தவ்லா துதுஷுக்கு டமாஸ்கஸ், அதன் அண்டைய நகரங்கள், ஜெருசலம் ஆகியனவற்றின் நிலவுரிமையை அளித்தார். சிரியாவின் முக்கியமான நகரங்களான (திமிஷ்க்) டமாஸ்கஸும் (ஹலப்) அலெப்போவும் சகோதரருக்கும் தோழருக்கும் முறையே பங்களிக்கப்பட்டு, அவரவர் ஆளுகையில் அரசியல் நிலவரம் நிதானத்தை எட்டியது; அமைதி அடைந்தது – சுல்தான் மாலிக்-ஷா உயிருடன் இருந்தவரை. அதன் பிறகு? பிறகென்ன? ஓயாத போர், ஒழியாத ரகளை!

ஹி. 485 / கி.பி. 1092 ஆம் ஆண்டு சுல்தான் மாலிக் ஷா மரணமடைந்தார். அவருடைய இருபதாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. உருவானது வாரிசுப் போர்.

சகோதரர் இறந்ததும் தாம் சுல்தான் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை தாஜுத் தவ்லா துதுஷுக்கு ஏற்பட்டது. எளிதில் நிறைவேறக் கூடிய ஆசையா அது? டமாஸ்கஸ் அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் அவர் வசம். ஹும்ஸ் நகரிலிருந்து வடக்கே நீண்டிருந்த பகுதிகளோ காஸிம் அத்-தவ்லா அக் சுன்குரின் கையில். அங்கு அவரது ஆட்சி. எனவே, அவர்கள் இருவருக்கும் இடையே முதலில் முட்டிக்கொண்டது; போராக உருவானது. அடுத்த இரண்டு ஆண்டுகள் அது வரிசையாகத் தொடர்ந்தது. இறுதியில் ஹி. 487/கி.பி. 1094ஆம் ஆண்டு துதுஷ், காஸிம் அத்-தவ்லாவைக் கொன்றார். பத்து வயது நிரம்பியிருந்த அவருடைய ஒரே மகன் அனாதரவானார். அந்த மகன் இவ் வரலாற்றில் முக்கியப் புள்ளி. இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமான இமாதுத்தீன் ஸன்கி.

oOo

மறைந்த சுல்தானின் சகோதரருக்குத் தாம் அடுத்த சுல்தான் ஆக வேண்டும் என்ற ஆசை எழும்போது சுல்தானின் மகன்களுக்கு எழாமல் இருக்குமா? எழுந்தது. சுல்தான் மாலிக்-ஷாவின் மகன்களான ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது எனும் இருவருக்கு இடையே எழுந்தது. அவர்களுக்கு இடையேயான மும்முரப் போட்டி மும்முனைப் போட்டியாகிவிடக் கூடாது என்பதற்காக முதலில் மாலிக்-ஷாவின் சகோதரர் துதுஷ் போட்டியிலிருந்து துடைத்து எறியப்பட்டார். அவர் காஸிம் அத்-தவ்லாவைக் கொன்ற அடுத்தச் சில மாதங்களிலேயே மாலிக்-ஷாவின் மகன் ருக்னுத்தீன் பர்க்யாரை போர்க் களத்தில் சந்திக்கும்படி ஆனது. ஆட்சி, அதிகாரம் என்று வந்தபின் அண்ணன் என்ன, தம்பி என்ன, பெரியப்பா, சித்தப்பா பாசமென்ன? தம் தந்தையின் சகோதரரின் தலையைக் கொய்தார் ருக்னுத்தீன். அத்துடன் துதுஷின் ஆசையும் ஆயுளும் முடிவுற்றது.

அதன்பின் ‘வா! நீயா நானா என்று பார்த்துவிடுவோம்’ என்று சகோதரர்கள் பர்க்யாரும் முஹம்மதும் வாரிசுப்போட்டியில் இறங்கிப் போரிட்டார்கள், போரிட்டார்கள், பன்னிரெண்டு ஆண்டுகள் வரை போரிட்டார்கள். ஒருமுறை ஒருவர் வெல்வார். தோற்றவர் ஓடுவார். அவர் அடுத்துச் சில மாதங்களில் மீண்டும் படையைத் திரட்டிக் கொண்டு வருவார். இம்முறை அவர் வெல்வார். இவர் ஓடுவார். பிறகு இவர் படை திரட்டிக்கொண்டு வருவார். இப்படியாக இருவரும் மாறி மாறிப் போரிட்டுக்கொண்டால் மக்களின் கதி என்னாகும்?

‘அட என்ன இது சண்டை ஒரு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறது’ என்று ஒரு கட்டத்தில் படையினருக்கே சோர்வு ஏற்பட்டிருக்கும் போலும். இரு தரப்புப் படைத்தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் வரைந்து அச் சகோதரர்கள் இருவர் மத்தியிலும் பகுதிகளைப் பிரித்து அளித்தனர். ஒருவழியாக சமாதானம் சாத்தியம் ஆனது.

இராக்கில் மாலிக் ஷாவின் பிள்ளைகளின் கதை இப்படியென்றால், அங்கு துதுஷ் கொல்லப்பட்டாரே, அவர் வசம் சிரியாவின் ஆட்சி அதிகாரம் இருந்ததல்லவா? அதுவும் முக்கியமான நகரங்களைத் தம்மிடம் வைத்திருந்தார் இல்லையா? அவற்றின் கதி? துதுஷும் மகன்களைப் பெற்று வைத்திருந்தார். அவர்களுள் இருவர் ரித்வான், துகக். அந்த மகன்கள் ஆளுக்கொரு வாளையும் படையையும் திரட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் வாரிசுப் போரில் களம் இறங்கினார்கள். துண்டானது சிரியா. ரித்வான் அலெப்போ நகரையும் துகக் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றி இரண்டும் இரு தனி அரசுகளாக ஆயின. அதுநாள் வரை அலெப்போவிற்குக் கட்டுப்பட்டிருந்த அந்தாக்கியா தனது விசுவாசப் பிரமாணத்தைத் தூக்கியெறிந்தது. ஜெருசலம் நகர், ஃபாத்திமி ஷீஆக்களான எகிப்தியர்கள் வசம் சென்றது.

இவ்விதம் சிரியா பிளவுண்டு தனி ஆட்சியாக ஆகிவிட்டாலும், அதன் பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடவில்லை. மறைந்த சுல்தான் மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லாவுக்கு மற்றுமொரு நெருங்கிய நண்பர் இருந்தார். அவர் பெயர் கெர்போகா. துதுஷ் அவரைச் சிறையில் அடைத்து வைத்திருந்தார். துதுஷ் கொல்லப்பட்டதும் விடுதலையான கெர்போகா, ருக்னுத்தீன் பர்க்யாருக் அணிக்கு ஆதரவாக இராக்கில் உள்ள ஹர்ரான், நுஸைபின், மோஸுல் பகுதிகளைக் கைப்பற்றி வலிமை பெற ஆரம்பித்தார். அதையடுத்து அதாபேக் ஆக மோஸுலை ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது பார்வை துதுஷின் பிரிவடைந்த சிரியா பகுதிகளின்மீது விழுந்தது. அலெப்போவைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்டி அதற்கான காரியங்களில் இறங்க ஆரம்பித்தார் அவர்.

இப்படி அவரவரும் பேட்டைக்கு ஒருவராய் அடித்துக்கொண்டிருக்க கலீஃபா என்ன செய்து கொண்டிருந்தார்? ஷீஆக்களின் புவைஹித் வம்சத்திடமிருந்து அப்பாஸிய கிலாஃபத்தை மீட்டுத் தந்ததே ஸெல்ஜுக் சுல்தான் துக்ரில்பேக்தான் என்று பார்த்தோம். அந்தளவு பலவீனப்பட்டுக் கிடந்த அந்த கிலாஃபத் அதன் பின்னரும் தன்னளவில் பலம் பொருந்திய, ஆளுமை மிக்க சக்தியாக மீளவில்லை.

கலீஃபா இருந்தார். பாக்தாத் நகரம் அவருடைய வசிப்பிடமாகவும் அவரது ஆட்சிக்குரிய நகரமாகவும் இருக்கும். சுல்தான்கள் அவருக்குப் பிரமாணம் அளிப்பார்கள். அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இஸ்லாமியக் கொள்கையளவில் அவருக்கு அடிபணிவார்கள். ஆனால் தாங்கள் கைப்பற்றி வைத்திருக்கும் நாடுகளுக்கு, பகுதிகளுக்கு அவர்கள்தாம் ராஜா. அவர்களுடையதுதான் ஆட்சி.

அவர்களுக்குள் போரிட்டு யாருடைய கை ஓங்குகிறதோ, அவர் சம்பிரதாயமாக கலீஃபாவைச் சந்திப்பார். மறுப்பின்றி கலீஃபா அவரை அங்கீகரித்து, அரச அங்கியும் ராஜ மரியாதையும் அளிப்பார். நாடெங்கும் வெள்ளிக்கிழமை குத்பாக்களில் கலீஃபாவின் பெயரும் அந்த சுல்தானின் பெயரும் இடம்பெறும். சில மாதங்களில் மற்றொரு சுல்தான் வெற்றிபெற்றால் அவையனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டு குத்பாவில் பழைய சுல்தானின் பெயர் நீக்கப்பட்டு இந்தப் புதிய சுல்தானின் பெயர் கலீஃபாவின் பெயருடன் இடம்பெறும். அந்தளவில்தான் அப்பாஸிய கலீஃபாவின் அதிகாரம் இருந்து வந்தது.

முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் வந்து நுழையும் போது, இஸ்லாமிய ஸல்தனத் இவ்விதம் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தது. பலவீனமடைந்திருந்தது. பேராபத்து ஒன்று வந்து நுழைகிறது; அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூட உணரமுடியாத நிலையில் அவர்களுக்குள் உட்பூசலும் அதிகாரப் போரும் அவர்களது கவனத்தை முற்றிலுமாய்த் திசை திருப்பி வைத்திருந்தன.

அவலக்கேடே! சிலுவைப் படையினருக்கு எதிராக எந்த ஒரு சுல்தானும் படை திரட்டவில்லையா, போரிடவில்லையா என்ற கேள்வி எழுந்தால், இருந்தார். ஒருவர் இருந்தார் – கிலிஜ் அர்ஸலான் I.

அல்ப் அர்ஸலானின் பெரிய பாட்டனாரின் பேரன் சுல்தான் ரோம ஸல்தனத்தை உருவாக்கினார் என்று மேலே பார்த்தோமே, அவர் மரணமடைந்து அவருடைய மகன் கிலிஜ் அர்ஸலான் அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவர்தாம், முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தார். ஆனால், அந்த வெற்றிக் களிப்புத் தொடரவில்லை. அதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அதற்குமுன் முக்கியப் பயணம் ஒன்று இருக்கிறது. எகிப்துக்கு!

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …

– நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.