சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 83

Share this:

83. அலெப்போவின் எதிர்க்குரல்

மாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக வந்து வாய்த்து விடவில்லை. மோஸுல், எடிஸ்ஸா, அலெப்போ, ஹமா, பால்பெக், ஹும்ஸு நகரங்களில் இருந்தவர்கள் அவரை இராஜ துரோகி என்று தூற்றினர், அதிகார ஆசை பிடித்தவர் என்று இகழ்ந்தனர். பற்பல சவால்கள்; இன்னல்கள். அவர்கள் ஒவ்வொருவரை நோக்கியும் அவர் படையுடன் செல்லும்படி ஆனது. தேவைக்கேற்ப ஆயுதங்களையும் பிரயோகிக்கும்படி ஆனது. அக்டோபார் 1174லிருந்து செப்டெம்பர் 1176 வரை, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பல போராட்டங்களைக் கடந்த பிறகே சிரியாவின் அதிபராக ஸலாஹுத்தீன் தம்மை நிலைநிறுத்த முடிந்தது.

ஸலாஹுத்தீனின் எழுச்சி தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்த போதும் அவரது வழியில் குறுக்கிட முடிந்த சக்தியாகத் திகழ்ந்தவர் பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவல். என்றாவது ஒருநாள், தாம் சிரியாவைக் கைப்பற்றி அதன் ராஜாதி ராஜாவாக வேண்டும்; அதன்பின் பரங்கியர்களுடன் இணைந்து எகிப்தின் மீது படையெடுக்க வேண்டும் என்று அவருக்குக் கனவு. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதலாம் கிலிஜ் அர்ஸலானின் பேரனான இரண்டாம் கிலிஜ் அர்ஸலான். செப்டெம்பர் 1176 பைஸாந்தியத்தின் சக்கரவர்த்தியையும் அதன் இராணுவ வலிமையையும் [Battle of Myriocephalum (Myriokephalon)] மிரியோஃபலொன் போரில் முறியடித்தார் அவர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மேனுவலும் மரணமடைந்தார்; பைஸாந்தியமும் குழப்பத்தில் மூழ்கியது. கிறிஸ்தவர்களின் கடலோர அரசுகள் வடக்கிலிருந்து இனி உதவியை எதிர்பார்க்க இயலாது என்றான பிறகே ஸலாஹுத்தீன் இதர எதிர்தரப்பு முஸ்லிம் ஆட்சியாளர்களை நோக்கித் திரும்ப முடிந்தது. பரங்கியர்களை நோக்கித் தமது கவனத்தை ஒருமுகப்படுத்த முடிந்தது.

இமாதுத்தீன் அல்-இஸ்ஃபஹானி என்பவர் 1174ஆம் ஆண்டிலிருந்து ஸலாஹுத்தீனின் செயலாளராகவும் பஹாவுத்தீன் இப்னு ஷத்தாத் 1188ஆம் ஆண்டிலிருந்து ஆலோசகராகவும் திகழ்ந்தவர்கள். ஸலாஹுத்தீன் பரங்கியர்களை எதிர்த்து மேற்கொண்ட ஜிஹாதை அவர்களிருவரும் நுணுக்கமாக எழுதியுள்ளனர் :

ஸலாஹுத்தீனுக்கு ஜிஹாதில் சளைக்காத ஈடுபாடு; பெரும் வைராக்கியம். ஜிஹாதுக்கும் அதன் விவகாரங்களுக்கும் அவர் அனைத்தையும் செலவழித்தாரேயன்றி வேறு எதற்கும் ஒற்றை தீனாரோ திர்ஹமோ விரயம் செய்ததில்லை என்று எவரேனும் சத்தியமிட்டு உரைத்தால் அவர் முழுக்க முழுக்க உண்மையே உரைத்தவராவார்.

ஜிஹாதும் அதன் மீதான நேசமும் பேரார்வமும் அவரது உள்ளம் மட்டுமின்றி உடல் முழுவதையும் பலமாகப் பற்றிப் பிடித்திருந்தன. எந்தளவென்றால். அவர் ஜிஹாதைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை; அதை மேற்கொள்ளும் வழிகளைத் தவிர வேறொன்றையும் நினைப்பதில்லை.

வெறுமே இரத்தவெறி கொண்ட கொடுங்கோலன் அல்லர் அவர். இமாதுத்தீன் ஸெங்கியைப் போல் அச்சமூட்டும் கடினப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், தம்முடைய முன்னாள் அதிபர் நூருத்தீனின் கொள்கைகளை நெருக்கமாகப் பின்பற்றுவதையே அவர் தேர்ந்தெடுத்தார். அவ்வகையில், அவர் நூருத்தீனின் உண்மையான வாரிசு என்று கூறலாம் என்று எழுதியுள்ளார் பஹாவுத்தீன்.

ஸலாஹுத்தீனுக்கும் நூருத்தீனுக்கும் பல பொது அம்சங்கள் இருந்தன. ஸலாஹுத்தீனிடம் நூருத்தீனுடைய ஆளுமையின் தாக்கம் இருந்தது. ஜெருசலத்தை மீட்டெடுக்க தார்மீக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் முஸ்லிம்களை அணிதிரட்ட வேண்டும், அரபுலகை ஒன்றிணைக்க வேண்டும் என்ற இலட்சியம் ஸலாஹுத்தீனிடமும் தொடர்ந்தது. எதிரிகள் அவரை நூருத்தீனின் பிரதிபலிப்பாகவே கருதினர். பிறருடன் –குறிப்பாகப் படையினருடன்– பழகுவதில் அவரது அன்பு, நூருத்தீனைவிட ஒரு பிடி அதிகம் என்றால் ஆன்மீகத்தில் மிகைத்திருந்தவர் நூருத்தீன். ஸலாஹுத்தீனிடம் எந்தளவு கனிவு இருந்ததோ அதற்குக் குறைவற்ற கடுமை இஸ்லாத்தை அவமதித்தவர்களைக் கையாளும் போதும் தகித்தது.

oOo

ஸலாஹுத்தீனுக்கு டமாஸ்கஸை அடுத்துத் தம்முடைய நகர்வு எது என்பதில் தெளிவு இருந்தது. சிலுவைப்படையினருக்கு எதிரான ஜிஹாதை முன்னெடுக்க வேண்டுமாயின் எகிப்து, இராக்கின் வடபகுதி, சிரியா அனைத்தையும் ஒன்றிணைத்த இஸ்லாமிய முன்னணியைக் கட்டியெழுப்ப வேண்டும். சிரியா என்றால் டமாஸ்கஸ் மட்டுமா? முக்கியமான மற்றொரு நகரம் இருக்கிறதே. அலெப்போ! அதை அவர் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராதவரை எதிரிகள் வடக்கிலிருந்து உள்நுழையும் அபாயம் இருந்தது. ஆனால் அலெப்போவை வளைப்பது சுலபமா என்ன? மோஸுலில் இருந்து ஸைஃபுத்தீன் ஓடி வந்து குமுஷ்திஜினுடன் இணைவார். கூட்டுச் சேர்ந்து எதிர்த்து நிற்பார்கள். அவர்களுடைய வலையில் இளம் மன்னர் ஸாலிஹ் சிக்கியுள்ளதால் அங்குள்ள படையினரும் குடிமக்களும் அவருக்கு ஆதரவாக நிற்பார்கள். அந்தச் சிக்கல்களை எல்லாம் ஸலாஹுத்தீன் அறியாமலில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அவை தமக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்; தமது குறிக்கோளை ஊனப்படுத்தும் என்பதே அவருக்குள் கேள்வியாக இருந்தது.

அலெப்போவிலும் மோஸுலிலும் ஆட்சியில் வீற்றிருந்தவர்கள் நூருத்தீனின் இரத்த உறவுகள்; ஸெங்கி குலத்தவர்கள், அவர்கள் ஸலாஹுத்தீனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தாம் நூருத்தீனின் ஆன்மிக, கருத்தியல் வாரிசு என்று அவர் கோரிய உரிமைகளையெல்லாம் அவர்களும் நூரியா எனப்படும் நூருத்தீனின் மம்லூக்குகளும் நிராகரித்து ஒதுக்கினர். ’தன் எஜமானனிடமே குரைக்கிறது அந்த நாய்’ என்று திட்டுமளவிற்கு ஸலாஹுத்தீன் மீது அவர்களுக்கு மிகவும் கீழ்த்தரமான வெறுப்பு மேலோங்கியிருந்தது.

முதற்கட்ட நடவடிக்கையாக ஸலாஹுத்தீன் இளம் மன்னர் ஸாலிஹுக்குக் கடிதம் எழுதினார். தம் தூதுவர்கள் மூலம் அதை அலெப்போவிற்கு அனுப்பினார். ஸாலிஹைச் சூழ்ந்திருந்தவர்களின் திட்டத்தை ஒளிவு மறைவின்றிக் குறிப்பிட்டது அக்கடிதம்.

‘மரணமடைந்த என் எசமானனுக்கு எனது கடமையை நிறைவற்றவும் தங்களுக்கு சேவையாற்றவுமே நான் எகிப்திலிருந்து வந்திருக்கிறேன். தற்சமயம் உங்களைச் சூழ்ந்துள்ள ஆலோசகர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று நான் வேண்டுகிறேன். அவர்கள் உங்கள் தகுதிக்குரிய மரியாதையை அளிக்கவில்லை. என்பதோடன்றி, அவர்களுடைய சுயலாபத்திற்காக உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்’

ஸலாஹுத்தீனை விரோதியாகக் கருதும் அதிகார பலமுள்ளவர்கள் அலெப்போவின் அரசவையில் வீற்றிருக்கும்போது, அக்கடிதம் எந்தளவு சிறுவர் ஸாலிஹிடம் எடுபடும், மாற்றத்தை ஏற்படுத்தும்? ஸலாஹுத்தீனின் வழிகாட்டுதலின்படி நடக்க அச்சமயம் அவருக்கு வாய்ப்பும் இல்லை; பக்குவமும் போதவில்லை. அவரது சார்பாகப் பதில் கடிதம் ஒன்றை எழுதி எடுத்துக்கொண்டு அலெப்போவிலிருந்து தூதுக்குழு ஒன்று புறப்பட்டு வந்து டமாஸ்கஸில் ஸலாஹுத்தீனைச் சந்தித்தது. அதைத் தலைமை தாங்கிவந்த தளபதி குத்புத்தீன் யநால் இப்னு ஹஸன் (Qutb ad-Din Yanal ibn Hassan). ஷிர்குஹ்வின் இறுதி எகிப்துப் பயணத்தில் அவருடைய படையில் இணைந்திருந்தவர். ஸலாஹுத்தீனுக்கு நன்கு பரிச்சயமானவர். அவருக்கு ஸலாஹுத்தீனிடம் ஏற்கெனவே முன்பகை. எகிப்தில் அவர் வஸீராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து அங்கிருந்து வெளியேறி வந்துவிட்டார்.

‘நூருத்தீனின் மகனுக்கு நீ பாதுகாவலனா? உரிமையா கோருகிறாய்? நிராகரிக்கப்பட்டது. இந்தா பிடி’ என்று அக்கடிதத்தை அளித்தார்.

‘சிரியாவை அபகரித்து ஆக்கிரமிக்க வந்திருக்கிறாய். எமது உதவியைக்கொண்டு நீ எகிப்தைக் கைப்பற்றினாய். அதன் மாளிகைகளை எங்களது முயற்சிகளைக்கொண்டு ஆக்கிரமித்தாய். உனது தகுதிக்கு மீறி, எல்லை கடந்து விட்டாய். நீ எகிப்தைக் கைப்பற்ற உனக்கு உதவிய வாள்கள் எங்கள் கைகளில் இன்னும் பத்திரமாக உள்ளன. ஃபாத்திமீக்களின் கோட்டைகளைக் கைப்பற்ற நீ பயன்படுத்திய ஈட்டிகள், எங்கள் தோள்களில் தயாராக உள்ளன. உன்னிடம் சேவையாற்றாமல் பதவியைத் துறந்த அதிகாரிகள் சிரியாவிலிருந்து உன்னை விரட்டியடிப்பார்கள். உனது ஆணவம் எல்லை மீறிவிட்டது. நீ…! நூருத்தீனின் ஓர் ஊழியன் என்பதன்றி யார்தான் நீ? அவருடைய மகனைப் பாதுகாக்க, உன்னைப் போன்றவர் யாருக்குத் தேவை? நீ எகிப்துக்குத் திரும்பிச் செல்’

குத்புத்தீன் இப்னு ஹஸன் இவற்றைப் படித்துக் காட்டும்போது ஸலாஹுத்தீன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். பதிலேதும் கூறவில்லை. பிறகு அவரிடம் மென்மையாக, “நான் இங்கு வந்துள்ளது முஸ்லிம்களை மீண்டும் ஒன்றிணைக்க, அவர்களது எல்லைகளைப் பராமரிக்க, நூருத்தீனின் மகனைப் பொறுப்பேற்க, எல்லை மீறுபவர்களின் அக்கிரமத்தை எதிர்க்க என்பதை நீ அறிய வேண்டும்” என்றார்.

“ஹஹ்! நீ வந்திருப்பது ஆட்சியைப் பிடிக்க. நாங்கள் உன்னைப் பின்பற்ற மாட்டோம்”

ஸலாஹுத்தீன் பொறுமையடன் தம் ஊழியர்களிடம் திரும்பி அவரை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அரசுத் தூதர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை முறிக்கும் அளவிற்குச் சென்ற அந்தச் சந்திப்பில் ஸலாஹுத்தீனின் பெருந்தன்மையினால் தளபதியின் உயிர் பிழைத்தது. ஆனால் அந்நிகழ்வு ஸலாஹுத்தீனுக்கு அலெப்போவைப் பற்றிய கவலையை அதிகரித்தது. அது அவர் எழுதிய இரு கடிதங்களில் பிரதிபலித்தது.

இப்னு நஜா, குத்புத்தீன் அல்-நிஷாபூரி எனும் இருவர் ஸலாஹுத்தீனின் ஆன்மிக வளர்ச்சியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் ஸலாஹுத்தீன். இப்னு நஜாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘எனது நடவடிக்கைகள் நாடுகளைக் கைப்பற்றி எனக்கான இராஜாங்கத்தை விரிவாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஜிஹாதின் கொடியை உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு’ என்று குறிப்பிட்டு, ‘அந்த ஜிஹாதை நிறைவேற்றுவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள்’ பற்றிக் குற்றம் சாட்டியிருந்தார். குத்புத்தீன் அல்-நிஷாபூரிக்கு எழுதிய மடலில் ‘தம்மை எதிர்ப்பவர்களின் குறுகிய மனப்பான்மை’ குறித்துத் தம் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவையன்றி, அரசியல் நகர்வாக மற்றொரு முக்கிய காரியம் செய்தார் ஸலாஹுத்தீன். அது பக்தாதில் உள்ள அப்பாஸிய கலீஃபாவுக்கு அனுப்பிய மடல்கள். காரணம் ஜிஹாதுக்கு கலீஃபாவின் தலையசைப்பும் ஆதரவும் முக்கியமாகத் தேவைப்பட்டன. மட்டுமின்றி, இதர முஸ்லிம் ஆட்சியாளர்களை அவர் தம் தலைமையின் கீழ் கொண்டுவர கலீஃபாவின் அங்கீகாரம் வெகு அவசியமானதாகவும் இருந்தது. காழீ அல்-ஃபாதில்தாம் அக்கடிதங்களைச் சிறப்பாக எழுதித் தந்தார்.

தம் பணியாளிடம் அதைக் கொடுத்தனுப்பிய ஸலாஹுத்தீன், “கலீஃபாவுக்கு முகமன் கூறவும்; அவருக்காக பிரார்த்தனைகள் செய்து தொடங்கவும்; நிகழ்வுகளை உண்மையாக, மிகைப்படுத்தாமல் குறிப்பிடவும். எவ்வளவு கூறினாலும் தெரிவிக்க வேண்டிய சங்கதிகள் அவற்றைவிட வெகு அதிகம் உள்ளன. ஆகவே சுருக்கமாகத் தெரிவிக்கவும். இதனால் கலீஃபாவுக்கு அயற்சி இன்றி மகிழ்ச்சி ஏற்படும்” என்று சில அறிவுரைகளை வழங்கினார். சில பக்கங்கள் நீளும் அளவுள்ள அவரது முதல் கடிதத்தின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.

ஸலாஹுத்தீனாகிய தாம் இதுவரை சாதித்தது, எகிப்து, யெமன், மக்ரிபு பகுதிகளைக் கைப்பற்றியது; தாமும் தந்தையும் சிற்றப்பா ஷிர்குஹ்வும் ஷிஆக்களை ஒழித்தது; வலிமை மிக்க பைஸாந்திய சக்கரவர்த்தியைத் தாம் எதிர்த்தது, அவர் இப்போது தம்மிடம் சமாதானத்தை விரும்புவது; சிசுலிப் படையைத் தோற்கடித்து விரட்டியது; போர் ஆயுதங்களுக்குத் தேவையான உலோகங்களையும் கட்டைகளையும் பெற இத்தாலியின் ஜெனோவா, பீஸா, வெனிஸ் நகரங்களுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தியது ஆகியனவற்றை அக்கடிதத்தில் விவரித்திருந்தார்.

இஸ்லாத்தின் கொள்கைகளிலிருந்து விலகி வழி தவறியுள்ளவர்களுக்கு சவால் விடுத்து அவர்களது கருத்து முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும், இஸ்லாத்தை லெவண்த்தில் முன்னெடுத்துச் செல்லவும் தாமே தகுதி வாய்ந்தவர், நூருத்தீனை அடுத்து அவற்றைத் தொடரத் தம்மால் மட்டுமே முடியும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஜெருசலத்தை மீட்கும் திறன் தம்மையன்றி சிரியாவில் வேறு யாருக்கும் இல்லை என்ற பிரகடனமும் அதை மீட்பேன் என்ற வாக்குறுதியும் இருந்தன. தூரம், கடுமையான நிலப்பரப்பு போன்ற காரணங்களால் எகிப்திலிருந்து ஜிஹாதை முன்னெடுப்பதில் உள்ள சிரமத்தையும் புதிய குதிரைகளும் படையினருக்கான பொருட்களும் சிரியாவில் ஏராளம் கிடைப்பதன் அனுகூலத்தையும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இளம் மன்னர் அஸ்-ஸாலிஹின் பாதுகாவலராகவும் அதற்குரிய அனைத்துத் தகுதிகளும் உடையவராகவும் ஸலாஹுத்தீன் தம்மை முன்நிறுத்தினார். அப்பாஸிய கிலாஃபதைப் பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார். எகிப்து, யெமன், மக்ரிபு, சிரியா, நூருத்தீன் வசம் இருந்த பகுதிகள், கலீஃபாவின் உத்தரவுப்படி தாம் தம் வாளினால் கைப்பற்றிய இடங்கள் ஆகிய அனைத்தின் ஆட்சியையும் தம் வசம் அளிக்கக் கோரினார்.

சிரியாவில் தாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள், அஸாஸியர்களின் அச்சுறுத்தல், அவர்களால் விளையக்கூடிய அபாயம். தாம் சிரியா வந்தடைந்ததால் பரங்கியர்களிடம் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றம் ஆகியனவற்றைத் தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு கடிதத்தில், பரங்கியர்கள் உதவி கோரி அவர்களுடைய நாட்டினருக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்; மெய்ச்சிலுவையின் புனிதத்தை மீட்டுச் செயல்படுத்த இயேசுநாதரின் புனிதக் கல்லறையில் பிரார்த்தனை நிகழ்த்துகின்றனர். கிறிஸ்தவர்களின் புனித மகான்கள் அவர்களுடைய தலைவர்களிடம் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு என்று எச்சரிக்கின்றார்கள்; பதாகைகளில் புனிதர்களின் படங்களையும் தகவல்களையும் பதித்து ஏந்தித் தங்களது வாதத்துக்கு நியாயம் சேர்க்கிறார்கள்; ஐரோப்பாவில் அரசர்களும் தலைவர்களும் புனித பூமியில் இக்கட்டான நிலையில் உள்ள தங்களின் சகோதரர்களுக்கு உதவ, போர் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்று எதிர்வரவிருக்கும் அபாயத்தைத் தெரிவித்து எச்சரித்திருந்தார்.

oOo

1, ஜமாதுல் அவ்வல் ஹி. 570 / 28 நவம்பர் கி.பி. 1174.

ஸலாஹுத்தீன் அய்யூபி தம்முடைய தம்பி ஸைஃபுல் இஸ்லாம் துக்தகீனிடம் டமாஸ்கஸின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அலெப்போவை நோக்கிப் படையுடன் கிளம்பினார். வழியில் ஹும்ஸு நகரை அடைந்தது படை. அங்கே அந்நகரின் வெளியே முகாமிட்டது. அந்நேரத்தில் ஸலாஹுத்தீனைத் தலைவராக அங்கீகரித்துத் தகவல் அனுப்பியிருந்தார் அப்பாஸிய கலீஃபா. எகிப்து, மக்ரிபு, நுபியா, மேற்கு அரபியா, ஃபலஸ்தீன், அஸ்-ஸாலிஹின் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களைத் தவிர சிரியாவின் இதர பகுதிகள் அனைத்திற்கும் இஸ்லாத்தின் தலையாய அதிகாரத்தின் ஒப்புதலுடன் தலைவரானார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.

(தொடரும்)


Share this: