தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி மக்கள் வியந்தனர்.
தென்காசியில் பிரசித்திபெற்றது காசி விஸ்வநாதர் கோயிலாகும். இக்கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று ஜனவரி 04 ஆம் தேதி, 2025 காலையில் கோயிலுக்குள் வந்த ஒரு மர்ம நபர் கையில் 10 லிட்டர் கேனில் பெட்ரோல் கொண்டுவந்துள்ளார். கோயில் முக்கிய பகுதியான கோபுரவாசல் முன்பு திடீரென பெட்ரோல் கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை முழுவதுமாகக் கொட்டி தீ வைத்தார். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இந்த பயங்கரச் செயலைக் கண்டு, கோயிலில் இருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். கோயிலில் மள மளவென்று தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
தீ கங்குகள் பரவுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே, தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதி கோயிலுக்குள் செல்ல முயன்றார். இது அப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரை கோயிலுக்குள் செல்ல விடாமல் பொதுமக்கள் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட பயங்கரவாதியை தென்காசி காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அத்துடன், தீ வைத்து சேதத்தை விளைவித்தவர், ஏதேனும் உள்நாடு அல்லது வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவரா? அப்பகுதியில் பெரும் மதக்கலவரம் நடத்துவதற்காக இந்த தீவிரவாதத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து நடத்தினர்.
காவல்துறை விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த பாலன் (31) என்பது தெரியவந்தது.
பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவரின் பெயர் மற்றும் பின்னணி தெரிந்தபின் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை அறிவித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெளிவான திட்டத்துடன் கோயிலுக்குள் நுழைந்து பொறுமையாக பெட்ரோலை பரவவிட்டு எரித்து கோயிலில் பெரும் பயங்கரவாதச் செயலைச் செய்தவர் எப்படி பிடிபட்டவுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆனார் என்ற அப்பகுதி மக்களின் கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.
பயங்கரவாதியிடம் விசாரணை செய்தபின் காவல்துறையினர் கூறும்போது, ‘ஆனந்தபாலன் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். ‘நான்தான் சிவன் என்றும், நான்தான் கோயிலில் உள்ளேன்’ என்றும் கூறுகிறார். யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தீ வைத்ததாக தெரியவில்லை. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர். தீ வைக்கப்பட்ட இடத்தை தென்காசி டி.எஸ்.பி. தமிழ் இனியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீடியோ செய்திகள், நன்றி: https://www.thanthitv.com/news/tamilnadu/tenkasi-kasiviswanathartemple-thanthitv-311504
https://www.kamadenu.in/news/crime/94899-youth-poured-petrol-and-set-fire-in-front-of-the-kashi-vishwanath-temple.html