கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் - முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது
Share this:

பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025):   உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது கும்பமேளாவிற்கு செல்ல காத்திருக்கும் இந்துக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உத்தரபிரதேச மாநிலத்தின் புகழ் பெற்ற நகரம் அலஹாபாத்.  பாஜக-வின் ஆட்சியில் இந்நகரம் பிரயாக்ராஜ் (Prayagraj) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். பிரயாக்ராஜ் நகரத்தில் எதிர்வரும் ஜனவரி 13 துவங்கி பிப்ரவரி 26 வரை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வெடிகுண்டு செய்தி இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து மிரட்டல் விடுத்த பயங்கரவாதி நாசர் பதானைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 04 ஜனவரி 2025 சனிக்கிழமையன்று ஷாஹீத்கஞ்ச் பஞ்சாயத்தில் கடும் சோதனை நடந்தது. இதில் பவானிபூர் காவல்துறையுடன் இணைந்து உத்தரபிரதேச காவல்துறையினரால் ஆயுஷ் குமார் ஜெய்ஸ்வால் (Ayush Kumar Jaiswal) என்ற இந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  இவர் பீகார் மாநிலம் பூர்னியாவை சேர்ந்தவர்.

“உ.பியில் இந்து- முஸ்லிம் கலவரம் ஏற்படுத்தவும், முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காகவும் “நாசர் பதான்” என்ற முஸ்லிம் பெயரை போலியாக உருவாக்கி அதைக் கொண்டு, பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்; இதில் இந்து பக்தர்கள் கொல்லப்படுவார்கள் என்று சமூக ஊடகங்களில் பரவலாக மிரட்டல் விடுத்தேன்” என காவல்துறையினரின் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார் ஆயுஷ்குமார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறிது நேரத்திலேயே ஆயுஷ்குமார் நேபாளம் சென்றதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். “நேபாளத்தில் ஆயுஷ் எங்கு சென்றார், அங்கு யாரைச் சந்தித்தார் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேய ஷர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து பவானிபூர் காவல்துறை உயர் அதிகாரியான சுனில் குமார் கூறுகையில், “உ.பி காவல்துறை மற்றும் பவானிபூர் போலீஸாரின் கூட்டு முயற்சிக்குப் பிறகு முஸ்லிம் பெயரில் மிரட்டல் விடுத்த ஆயுஷ் குமார் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார்.  விசாரணையில் ஆயுஷ்குமார் மனநலம் குன்றியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இருப்பினும் சமீபத்தில் அவரைத் தொடர்பு கொண்டோர் மற்றும் அவரது மிரட்டலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)

  • சத்தியமார்க்கம்.காம்

Share this: