தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – பகுதி 4

தாக்கியவர் இருவர், தாக்குதல் நடந்தது நான்கு இடங்களில்!

கார்கரே கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பு மருத்துவமனையில் நடந்த தாக்குதலைக் குறித்து காவல்துறை கூறுவதற்கு மாற்றமாக காமா மருத்துவமனையிலுள்ள ஊழியர்கள் வேறு விதமாகக் கூறுகின்றனர். “தீவிரவாதிகள் தூய மராத்தி மொழியில் பேசினர்” என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதன் தொடர்ச்சியாகும் இது.

யூனிஃபார்மில் இருந்த மருத்துவமனை செக்யூரிட்டிகளைக் கொன்ற கொலையாளிகள், யூனிஃபார்மில் இல்லாத மற்றொரு நபரையும் கொன்றனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையின் மேல்மாடியில் ஏறினர். லிஃப்ட் ஆபரேட்டர் டிக்கே என்பவர் அவர்களை மேல் மாடிக்குக் கொண்டு சென்றார். சற்று நேரத்தில் சுமார் எட்டு பேரடங்கிய காவல்துறைக் குழு ஒன்று, தீவிரவாதிகளை எதிர்கொள்ள மருத்துவமனை வந்தடைந்தது. அவர்களுக்கும் மேல்மாடிக்கான வழிகாட்டியாக அதே லிஃப்ட் ஆபரேட்டரே உடன் சென்றார்.

காவல்துறையினரில் ஒருவர் இரும்பு போன்ற ஒரு துண்டை எடுத்து டெரஸ்ஸில் எறிந்தார். லிஃப்ட் ஆபரேட்டர் தாமதிக்காமல் கீழே ஓடினார். தொடர்ந்த சுமார் 45 நிமிடங்களுக்கு மேல்மாடியில் துப்பாக்கி சூடும் சப்தம் கேட்டது. A.C.P. ஸ்தானந்த் தத்தாவிற்குக் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை வார்டுகளிலிருந்த நோயாளிகள், விளக்குகளை அணைத்து விட்டு மூச்சையடக்கிப் பிடித்தபடி பயந்து நடுங்கியபடி இருந்தனர். ஆனால், காவல்துறையினர் சற்று நேரத்தில் வெறுங்கையுடன் கீழே இறங்கி வந்தனர். தாக்குதல் நடத்திய கொலையாளிகள் எப்படித் தப்பித்தனர் என்பதைக் குறித்து எவ்வித விவரமும் இல்லை. இதே ஸதானந்த் தத்தாவிற்குத்தான் தீவிரவாதிகளுடனான போராட்டத்தில் காயமேற்பட்டதாகவும் “உடனடியாக காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்” என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின்படி ஸலஸ்கர் காமா மருத்துவமனை வந்தார். கார்கரேவிற்கும் இதுபோன்றதொரு தகவல் கிடைத்திருந்தது.

காமா மருத்துவமனைக்கு அருகில் பணியிலிருந்த துர்குடா என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மொழியினை அடிப்படையாக வைத்து இதே போன்ற, கீழ்க்காணும் செய்தியை டிசம்பர் 2 நாளிட்ட டி.என்.எ என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது:

“காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் துப்பாக்கி சூடு நடப்பதாக மூச்சிரைக்க ஓடியபடி ஒரு சிறுவன் தன்னிடம் வந்து கூறியதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ஆனால், அதனைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்த செயின்ட் சேவியர் கல்லூரி வளாகம் ஒரு ஆளரவமற்ற பகுதியாகும். அதற்குப் பின்பக்கத்தில் வைத்தே கார்கரே கொல்லப்பட்டர்” மெட்ரோ சினிமாவிற்கு அருகில் தீவிரவாதிகளின் மீது கார்கரே துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் காயமேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதாகவும் TV சானல்கள் ஒளிபரப்புச் செய்திருந்தன.

கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டி உட்பட நான்கு இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?. வி.டியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகளுள் வேறு சிலரும் இருந்திருந்தனரா?

நரிமன் ஹவுசிற்கு அருகில் வசிக்கும் ஆனந்த் ராவ் ராணா என்பவர் கூறியதாக, டி.என்.ஏ தினசரி மற்றொரு செய்தி வெளியிட்டது: “தொலைகாட்சியில் கார்கரே கொல்லப்பட்ட செய்தி வெளியான உடன் நரிமன் ஹவுஸிலிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது”. நரிமன் ஹவுஸுக்கென அளவுக்கதிகமாக மாமிசமும் மதுவும் உணவு வகைகளும் அன்றைய தினம் வாங்கிச் சென்றதாக ஒரு வியாபாரியை விசாரித்து அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்திகள் அனைத்தையும் காவல்துறையும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமானது!

1992-93இல் மும்பையில் நடந்தக் கலவரத்தை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையில் கலவரம் மிக மோசமாகத் தொடரக் மிக முக்கியக் காரணமாக, “மும்பை காவல்துறை காவி மயமாகியிருக்கிறது” எனச் சுட்டிக் காண்பிக்கப் பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கலவரத்தில், கீழ்நிலை அதிகாரி – கான்ஸ்டபிள் – முதல் அடிஷனல் கமிஷனர் வரை 31 காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக கமிசன் கண்டுபிடித்தது. மாலேகோன் வழக்கு விசாரணையில் கார்கரே எதிர்கொண்ட பிரச்சனைகளில் காவிமயமாக்கப்பட்ட மும்பைக் காவல்துறையும் ஒன்றாகும். முஸ்லிம் எதிர்ப்புணர்வு கொண்ட அதிகாரி எனப் பெயரெடுத்த ரகுவன்ஷி வகித்த ‘தீவிரவாதத் தடுப்புப் படை’த் (ATS) தலைவர் பதவியைத்தான் கார்கரே ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால், அவரது ATS குழுவில் இருந்தவர்களில் பெரும்பான்மையினரும் ரகுவன்ஷியின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதுமட்டுமல்ல, “ஆர்.எஸ்.எஸின் வெடிகுண்டு உற்பத்தித் தொழிற்சாலை” என கார்கரே கண்டு பிடித்த போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியுடன் ATSக்கும் தொடர்பு இருந்திருந்தது. “இன்று மாலேகோன் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்னல் புரோஹித் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ATSக்குப் பயிற்சியளித்தவர்” என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும்!.

இன்று கார்கரே மறைவிற்குப் பின் மீண்டும் ATSஇன் தலைவராக நியமிக்கப்பட்டு, மாலேகோன் குண்டுவெடிப்பை விசாரிக்கும் ரகுவன்ஷி, கார்கரேக்கு முன்னரும் ATSஇன் தலைவராக இருந்த வேளையில், மும்பை நாக்பாடாவிலுள்ள ATS தலைமையகத்தில் ATS உறுப்பினர்களுக்கு ஒரு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்திருந்தது. அந்த ஒருநாள் பயிற்சி கேம்பில் முதல் வகுப்பெடுத்தது, இதே மாலேகோன் வழக்கின் முதல் குற்றவாளியான கர்னல் புரோஹித். “ஆபரேசன் டெக்னிக்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டர்ஜி” என்பது பாடத்தலைப்பாக இருந்தது. இந்தக் கேம்பிற்கே தலைமையேற்றிருந்தது இப்போது மாலேகோன் வழக்கை விசாரிக்கும் ரகுவன்ஷி. ATS பயிற்சிப் பள்ளியில் வகுப்பெடுத்த மற்றொருவரின் பெயர் கர்னல் எஸ்.எஸ்.ரய்கார். இவர் போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியின் கமாண்டராக இருந்தார்.

மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த கார்கரே, “கர்னல் புரோஹித்தான் குண்டு வெடிப்புக்குக் காரணம்” எனக் கைது செய்ததோடு, போன்ஸாலே இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு எதிராக விசாரணை நடத்தியவேளை,  கமாண்டர் ரய்காரை விசாரணனையில் உட்படுத்தி இருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாயாவிற்குப் புரோஹிதை அறிமுகப்படுத்தியவர் இதே கமாண்டர் ரய்காரேதான்.

ரமேஷ் உபாத்யாயா, புரோஹித் ஆகியோரின் கைதுக்குப் பின், அப்பொழுது ரயில்வே காவல்துறையில் டிஐஜியாக இருந்த ரகுவன்ஷியிடம் கார்கரே இவற்றைக் குறித்து விசாரித்த பொழுது, “பயிற்சி வகுப்பு நடந்தது உண்மைதான். அப்போது புரோஹித் இராணுவ உளவுத்துறையில் வேலை செய்திருந்தார்” என்று அவர் கூறினார். “ATS பயிற்சி கேம்பிற்கு வகுப்பெடுக்கப் புரோஹிதிற்கு அழைப்பு விடுத்தது நான்தான்” என ஒப்புக்கொண்ட ரகுவன்ஷி, “அதற்கு மேல் வேறு சம்பவங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

மும்பை ATSஐ நன்றாக அறிந்திருந்த கார்கரே, மாலேகோன் வழக்கில், அதன் அனைத்து விஷயங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவாறே வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருந்தார். தன்னுடன் இணைந்துச் செயல்பட்ட மற்ற அதிகாரிகள் தவறாகப் புரிந்துக் கொள்ளாமல் இருக்க, அனைத்து விசாரணைகளிலும் குற்றவாளிகளை விசாரிப்பதிலும் நேரடியாக ஈடுபட்டார். வாக்குமூலங்களைத் தயார் செய்வதிலும் நேரடியாக கவனம் செலுத்தி இருந்தார். பப்ளிக் ப்ராசிகியூட்டர் ரோஹிணி ஸாலயனுடன் இடையிடையே கருத்துப்பரிமாற்றம் நடத்திக் கொண்டிருந்தார். ஹிந்துத்துவ இயக்கங்களுடன் தொடர்புடைய அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங்கை ஊடகங்களுக்கு விவரங்கள் வழங்குவதிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாக அடிஷனல் கமிஷனர் சுக்வீர் சிங்கை ATS அதிகாரப்பூர்வச் செய்தியாளராக  நியமித்தார். சுருக்கமாக, காவல்துறையிலுள்ள ஹிந்துத்துவவாதிகளைக் கார்கரே இவ்வழக்கின் அருகிலேயே வரவிடவில்லை.

தேசத்தின் பலப்பாகங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கான ஹிந்துத்துவவாதிகளின் திட்டங்களைக் குறித்தும் கார்கரேக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றைச் சுட்டிக்காண்பித்து, தனது உயர் அதிகாரிகளுக்குக் கார்கரே அறிக்கை சமர்ப்பித்தார். சிமி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற செயல்படும் தொண்டர்கள் சக்தியில்லாத, அதிகாரப்பூர்வமாகத் தங்கள் நிலைபாட்டை வெளிப்படுத்த இயலாத, நாடு முழுவதும் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ள, ஒன்றும் செய்ய இயலா இயக்கங்களைத் தொடர்பு படுத்தி மத்தியப் புலனாய்வுத்துறை புனைந்த கதைகளுக்கு அவை நேர் எதிராக இருந்தன.

அது மட்டுமல்ல, இராணுவப் புலனாய்வு துறையில் அதிகாரியாக இருக்கும்போது கர்னல் புரோஹித் சமர்பித்த ரகசிய தகவல்களின் உண்மைநிலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புரோஹிதின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கார்கரே கொடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் அவரது விசாரணை ஹிந்துத்துவ சக்திகளுக்கும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளின் வலுவான முடிச்சுகளை அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய தினம், சில ஹிந்துத்துவ சக்திகளுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளை நோக்கி மாலேகோன் விசாரணை நீள்வதாகவும் விரைவில் உறுதிப் படுத்தத் தக்க, நம்பகமானக் கூடுதல் விவரம் கிடைக்கப்பெறும் எனவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது இங்கு நினைவு கூரத் தக்கது.

இத்தகைய இக்கட்டான நிலையிலேயே கார்கரேயை நீக்குவதற்காக பாஜக முனைப்புடன் முன் வந்தது. ATSஇன் தலைமைப் பதவியிலிருந்துக் கார்கரேயை நீக்குவதே பாஜகவின் முதல் முயற்சியாக இருந்தது. அவருக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பயணம் செய்யும் மும்பை காவல்துறையிலுள்ள ஒரு டி.ஜி.பியை அப்பதவியில் நியமிப்பதற்கு மேல்மட்டத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலின் துணை கார்கரேக்கு இருந்ததால் உடனடியாக பாஜகவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருப்பினும் அரசியல்வாதிகளின் துர்பிரச்சாரங்களும் கண்டனங்களும் கார்கரேயை வெறுப்படைய வைத்திருந்தன. அவருக்கு எதிரான மோசமான கண்டனங்கள் அவரை மிகவும் வருத்தப்படுத்தியிருந்தன. இதனை ஆர்.ஆர். பாட்டீலிடம் அவர் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டிருந்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – பகுதி 3

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – பகுதி 2

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – பகுதி 1