கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!

Share this:

இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவு படுத்தியும் நடைபெறும் உலகம் தழுவிய ஊடகப் போரின் தளபதிகளில் ஒருவர் நெதர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் என்பவர். இஸ்லாமிய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்ட வில்டர்ஸ்  மீது வழக்கு தொடுக்கும்படி அரசு தரப்பு வழக்குரைஞருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Freedom Party என்ற கட்சியின் தலைவரான வில்டர்ஸ் சென்ற ஆண்டு இஸ்லாமை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தியும் குர்ஆனை ஹிட்லரின் ‘Mein Kampf’ என்ற புத்தகத்துடன் ஒப்பிட்டும் சர்ச்சைக்குரிய ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டிருந்ததோடு தனது இஸ்லாமியக் காழ்ப்பை உலகம் முழுக்கப் பரப்புவதற்காக இணையத்தில் ஒரு தளத்தையும் நடத்தி வந்தார். ‘நெட்வொர்க் சொல்யூஷன்’ என்ற இணையதளங்களைப் பதிவு செய்யும் நிறுவனம் வில்டர்ஸின் கயமைத் தனத்தை அறிந்து, அவரது தளத்தை முடக்கியது. இப்போது, “ஒரு ஜனநாயக அமைப்பில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, கருத்துச் சுதந்திரம் என்பதற்கு ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைவது அவசியமாகிறது” என நெதர்லாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

“இந்தத் தீர்ப்பு, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என வில்டர்ஸ் வர்ணித்தார்.  “பொது விவாதங்களில் பங்கெடுப்பது ஒரு அபாயகரமான நடவடிக்கையாக மாறி விட்டது. பொது விவாதங்களில் கருத்துத் தெரிவிப்பவர்கள் வழக்குகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை உருவாகி விட்டது” என்று அவர் சலித்துக் கொள்கிறார். தன்னை மட்டுமல்லாது, தங்கள் நாடு ‘இஸ்லாமிய மயமாதலை’ எதிர்க்கும் எல்லா டச்சுக் குடிமகன்களையும் இந்தத் தீர்ப்பு பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.  “என் வாயை அடைத்து விட்டால், நமது கலாச்சாரத்திற்கு ஆதரவாக வேறு யார் குரலெழுப்புவார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

முன்னதாக வில்டர்ஸ் தரப்பின் வாதங்களைப் பரிசீலித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, அவரது ‘ஒருதலைப் பட்சமான பொதுப்படை வாதங்கள்’ அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் இயல்பான பேச்சுரிமை சலுகையையும் மீறியது எனத் தெரிவித்தது. “பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்கள் மீதும் அவர்களது நம்பிக்கைகள் மீதும் வில்டர்ஸ் தெரிவித்திருந்த கருத்துகள் வெறுப்புணர்வையும் பாகுபாடுகளையும் தூண்டிவிட்டன என்பதால், அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்ததாக நீதிமன்ற அறிக்கை தெளிவு படுத்தியது. 

 

இஸ்லாமை ஹிட்லரின் நாஜியிசத்துடன் ஒப்பிட்டு, முஸ்லிம்களை அவமதித்ததற்காக வில்டர்ஸ் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது பற்றியும் நீதிமன்றம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது.  சென்ற ஆண்டு வில்டர்ஸ் தெரிவித்த கருத்துகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் நிகழ்ந்தது என்பதால் அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க வாய்ப்பில்லை என அரசு வழக்குரைஞர் அலுவலகம் முடிவு செய்திருந்தது.  அந்த முடிவைத்தான் நீதிமன்ற உத்தரவு மாற்றியிருக்கிறது.  இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அரசு வழக்குரைஞர் தரப்பு, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும், வழக்கு தொடர்பான விசாரணகளை உடனடியாகத் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தது. 

 

வில்டர்ஸ் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த ஜெரார்ட் ஸ்போங் என்ற பிரபல வழக்குரைஞர், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றார். “இது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 

இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து வெறுப்புணர்வை கொட்டிவரும் விட்லர்ஸ் பற்றி நமது தளத்தில் முன்பு வெளியிடப்பட்ட கட்டுரைகளை இந்தச் சுட்டிகளில் காணலாம்.

 

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

 

குர்ஆன் திரிப்புத் திரைப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.