அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

Share this:

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?’ (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப் பட்ட புகைப் படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!

அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளைக் கட்டுவதையும், புனர் நிர்மாணம் செய்வதையும் செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்?

அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!

….oOo….


பல்பீர் சிங் : கடந்த 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனித நேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.

மும்பாய்க்குப் பிறகு ‘சிவசேனா’ வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர்மீடியட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீர்சிங் ‘அந்த’ இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.

பானிபட்டில் இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பு ஊட்டப் பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். “பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்” என்கிற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.

1990-ல் அத்வானியின் ரத யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரத யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமாணம் எடுக்கிறார் பல்பீர் சிங்.

சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை’ யின் துணைத் தலைவராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெருங்கக் கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.

அங்கு சோனிப் பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான் தாரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.

டிசம்பர் – 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத் தலைவர் கட்டுக் கோப்புடன் இருக்கும்படிக் கூறி தடுத்து விட்டார்.

இந் நிலையில் கரசேவகர்களுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன்று, இரண்டு, … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை!!!) என்று முழங்க அந்த நாசகாரக் கும்பலுடன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.

அதற்குப் பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக் கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.

இந் நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், “இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே” என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங், பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. “இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்” என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ் வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.

அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:

நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்’.

இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.

ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

சோனிபட்டில் நடந்தது என்ன?

ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.

‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே, இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்புப் பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் – என்று மவ்லானா குறிப்பிட்டார்கள்.

உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனை தான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை, “என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன்!” என்று பதிலளித்தார்.

புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன் மல்லானாவைச் சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி “உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள்!” என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார். சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் – யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப் பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.

உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்தனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.

இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் – முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் – முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.

தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச் சம்பவங்களை மக்களிடம் எடுத்துக் கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்’ என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சில நாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.

முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.

முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயாரிடம், “இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை? முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே? அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும், தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும், தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழக்கம் போல் எரிக்கக் கூடாது; ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது; மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது. அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது.

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையால் அழுது கொண்டிருந்தார். ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்திக் கொன்றுவிட்டாயே! நீ எல்லாம் ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமாஅத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன். எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் “இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்” மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம். இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானாவிடம் தெரிவித்தார்.

“அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப் பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு “முஹம்மது ஆமிர்” என்று பெயரிட்டார்கள்.”

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: “அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்” என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

“அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6 – 2004 க்குள்- இந்தப் பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.”

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவருக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணனுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். குழந்தைகள் மீது என் மனைவி காட்டிய அன்பினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன். என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் “நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள்; என் சகோதரரோ மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்”.

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் உங்கள் பிள்ளைகளை, தன் பிள்ளைகளைப் போன்று கவனித்துக் கொள்வாள் என்றேன். ஊராரைப் பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது. மௌலானா அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்ற வயதான ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷமாக வாழந்து வருகிறோம். (சுப்ஹானல்லாஹ்! ஈமானில் உறுதியிருந்தால் இன்றும் ஸஹாபாக்களின் மலைக்க வைக்கும் தியாகங்களை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதை முஹம்மது ஆமிர் உணர்த்தி விட்டார்)

கேள்வி : நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கூற விரும்புவதென்ன?

பதில் :

1. முஸ்லிம்கள் தமது வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

2. மனிதகுலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கப் பட்ட அடைக்கலப் பொருளாகக் கருதி இஸ்லாத்தை முழு மனித சமுதாயத்திற்கும் சேர்த்து வைக்க வேண்டும்.

3. ஒரு சில இஸ்லாமிய விரோதிகளை பார்த்து மற்ற மக்களையும் அவ்வாறு எடை போடாதீர்கள். அவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தை மேற்கொள்ளாதீர்கள்.

4. பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட சிவசேனா, பஜ்ரங்தள் மற்றுமுள்ள ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் யார்? குர்ஆன் என்பது என்ன? மஸ்ஜித்தின் மகத்துவம் என்ன? போன்ற விபரங்கள் உண்மையான முறையில் தெரிந்திருக்குமேயானால் நிலைமையே வேறு ஒவ்வொரு ஹிந்து சகோதரரும் பள்ளியை கட்டும் எண்ணம் கொண்டிருப்பார். பள்ளியை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லாது போயிருக்கும்; இது அனுபவப்பூர்வமான உண்மை.

5. பால் தாக்கரே, வினய் கட்டியார், உமா பாரதி, அசோக்சிங் கால் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை நிலை தெரிந்திருக்குமேயானால் நிச்சயமாக அத் தலைவர்களில் ஒவ்வொருவரும் தமது சொந்தப்பணத்தில் பாபர் மஸ்ஜிதை நிர்மாணிப்பதை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாகக் கருதியிருப்பர்.

6. நாட்டில் முஸ்லிம் விரோதிகளாக வலம் வருபவர்கள் 100 கோடி ஹிந்துக்களில் ஒரு இலட்சம் கூட இருக்க மாட்டார்கள். ஒரு இலட்சம் என்பதே அதிகம் தான் 99 கோடியே 99 இலட்சம் மக்கள் என் தந்தையைப் போன்று மனித நேய நண்பர்களாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை உளமாற நேசிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

என் தந்தை (ஃபித்ரத்) படைப்பால் முஸ்லிமாக இருக்க வில்லையா? முஸ்லிம்கள் அவருக்கு தீனை எடுத்துரைக்காததினால் நிராகரிப்பிலேயே இறந்துவிட்டார். இது என் மீதும் என் தந்தை மீதும் முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் அநீதியல்லவா?

பாபர் மஸ்ஜிதை இடித்த என்னைவிட அநியாயக்காரர்கள் யாருமிருக்க முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால் என்னை விட கொடுமைக் காரர்கள் யார் தெரியுமா? முஸ்லிம்கள் தான்; அழைப்புப் பணியில் அவர்களின் அலட்சியம், என் பிரியமான தந்தையை நரகிற்கு தள்ளிவிட்டது.

7. “இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி அறியாத காரணத்தினால் தான் பாபர் மஸ்ஜிதை இடித்துள்ளனர்’ என்று மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

ஆம்! நாங்கள் அறியாமையால் தான் இந்த அநியாயத்தை கையாண்டோம். ஆனால் முஸ்லிம்கள் அறிந்து கொண்டே அம் மக்கள் நரகம் செல்லக் காரணிகளாக இருக்கின்றனர்.

என் தந்தை நிராகரிப்பில் மரணித்துவிட்டார் என்ற எண்ணம் இரவில் ஏற்பட்டுவிட்டால் என் தூக்கம் பறந்துவிடும் வாரக் கணக்கில் தூக்கம் வராது தூக்க மாத்திரை சாப்பிடும் நிலைக்கு தள்ளப் படுவேன்.

இந்த வேதனையை, வலியை முஸ்லிம்கள் உணர வேண்டுமே!

நன்றி: மனாருல் ஹுதா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.