வர்ஜீனியா பல்கலை படுகொலை: முஸ்லிம் மாணவரின் தியாகச் செயல்

{mosimage}உலகையும் அமெரிக்காவையும் ஒருசேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வர்ஜீனியா நுட்பியல் பல்கலைக்கழக படுகொலைகள் தொடர்பாக தொடர்ந்து வரும் செய்திகள் கொலையாளி சோ கொலைக்கான காரணங்கள் என்ன என்பன குறித்து தெரிவிக்கின்றன. கொலையாளி சோ சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளாலேயே சமூகத்தின் மீது கோபம் கொண்டு இந்தக் கொடூர கொலைகள் செய்ததாக அவன் அனுப்பிய வீடியோவில் தெரிவித்திருக்கிறான்.

இதற்கிடையே இந்த கோரமான படுகொலைகளில் ஒரு முஸ்லிம் மாணவர் தன்னுடைய சக மாணவரைக் காக்கப் புரிந்த தியாகச் செயல் இன்றைய நியூயார்க்டைம்ஸ் செய்திகளில் வெளிவந்தது மனதை உருக்குவதாக உள்ளது. இச்செய்தியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ராண்டி டைமண்ட் என்ற கட்டுமானப் பொறியியல் துறைப் பேராசிரியர் கூறும்போது, "32 வயதான மாணவர் வலீத் ஷாலான் தன் உயிரைத் தந்து இன்னொரு மாணவரின் உயிரைக் காத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

"ஏப்ரல் 16 அன்று கண்மூடித்தனமாக மாணவன் சோ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் போது அதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த வலீத் ஷாலான் தரையில் கிடந்தாலும் அருகிலிருந்த குண்டடி படாத இன்னொரு சக மாணவரை இறந்து விட்டது போல  நடிக்குமாறு கூறினார். இதற்கிடையே உயிர்பிழைத்தவர் எவரேனும் இருந்தால் அவரையும் தீர்த்துக்கட்ட அந்த அறைக்கு மீண்டும் வந்த சோ இறந்துவிட்டது போல் நடித்த மாணவரைச் சுட எத்தனிக்கும் வேளையில் அவனது கவனத்தை ஷாலான் வேண்டுமென்றே ஈர்த்தார். இதனால் சோவின் துப்பாக்கியிலிருந்து மேலும் பல குண்டுகள் பாய்ந்து இரத்த வெள்ளத்தில் ஷாலான் பிணமானார். இதற்குள் சோ அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்" என்று உயிர் பிழைத்த மாணவன் நடுக்கத்துடன் தம்மிடம் கூறியதாக டைமண்ட் கூறி இருக்கிறார்.

சமூக அக்கறை உடைய மிகச் சிறந்த நல்ல மனிதராக ஷாலான் இருந்தார் என ராண்டி புகழாரம் சூட்டினார். அதோடு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர் சங்கத்தின் மூலம் நல்ல பணிகளை ஆற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த துயர நிகழ்வில் இறந்த ஷாலான் திருமணம் ஆனவர்; எகிப்தைச் சேர்ந்தவர். இவர் தன் மனைவியையும் ஒரு வயது மகனையும் அமெரிக்கா அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

{mosimage}இந்த துப்பாக்கிசூடு நடத்திய சோ அனுப்பி உள்ள வீடியோவில் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளால் தான் சினம் அடைந்துள்ளதாகவும் தான் ஒருவேளை கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதற்கு சமூகமே பொறுப்பு என்றும் கூறியிருக்கிறான். தான் இயேசுவைப் போல் மரணித்து அதன்மூலம் சமூகத்தில் விழிப்புணர்வு அடையச் செய்யப் போவதாகவும் தெரிவித்திருக்கிறான்.