மிஸ்டு கால்…

Share this:

ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில அரேபியர்கள், பாகிஸ்தானியர் மற்றும் சாலைப் பணியாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த சிலரை மட்டுமே காண முடிந்தது.

ஸவூதியிலிருந்து சில மாதங்களுக்கு முன் இங்கு துபை வந்த எனக்கு இந்த நாட்டின் வித்தியாசமான சூழ்நிலை, ஸவூதியில் நான் இருந்ததோடு ஒப்பிடும்போது ஒரு மனக்குறையைதான் ஏற்படுத்தியது.

விடிகாலை நேரத்தில் ‘பஃஜ்ர் தொழுகை’ என்பதை விட மற்ற விஷயங்களில் இங்குள்ள முஸ்லிம்கள் அதிகமாக ஆர்வமாக இருப்பதைப் போன்றதொரு உணர்வு. அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவதும் அதே நேரத்தில் பள்ளிவாசலோடு கூடிய ஒரு பந்தத்தையும் அவசியமான தொழுகையையும் அலட்சியம் செய்து வாழ்வது என்ற நிலை மனதுக்கு ஒரு வித வேதனையை அளித்தது.

ஜமாத்துக்களின் இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு மக்கள் ஆதரவு அளிக்காமல் நிலையற்ற உலகில் அதன் சிற்றின்பங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பது, இலக்கற்று வாழ்வது தவறு என்று எப்போது உணர்வார்கள் என்றும் அடிக்கடி யோசிப்பேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும்! என்ன அஹ்மத் பாய் நல்லா இருக்கீங்களா?”” என்ற அன்வரின் குரல் கேட்டு என் சிந்தனை தடைபட்டது.

“வ அலைக்கும் ஸலாம்! அல்ஹம்துலில்லாஹ்! நல்லா இருக்கிறேன் அன்வர். நீங்க எப்படி இருக்கீங்க?”

“அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கிறேன் அஹ்மத் பாய்!”

பஃஜ்ர் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளியில் வர எத்தனிக்கையில் அன்வர், என்னிடம் ஏதோ பேச விரும்பியே நெருங்கியதாகத் தோன்றியது. காலையில் பாங்கு சப்தம் கேட்டு பள்ளிக்கு வந்தால் அங்கு முன் வரிசையில் அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் மிகச் சிலரில் அன்வரும் ஒருவன். வயதில் சிறியவன் என்றாலும் நான் அவனை வாங்க போங்க என்றழைப்பதைக் கண்டு அவன் சங்கோஜப்பட்டு நெளிவதையும் அடிக்கடி நான் ரசிப்பேன்.

“சொல்லுங்க அன்வர் ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம் பாய்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அன்வருடைய மொபைலில் மிஸ்டு கால் வந்தது. அன்வர் அதை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பேச எத்தனித்தான்.

“யாரோ மிஸ்டுகால் கொடுக்கிறாங்க போலிருக்கே அன்வர்? இந்த நேரத்திலே ஏதும் பிரச்சினையில்லையே?” நான் ஆர்வமாக கேட்டேன்.

“ஒண்ணுமில்லை அஹ்மத் பாய்! ஊரில இருந்து என் மனைவி அஸ்மா தான்!” என்றான் அன்வர் புன்முறுவலுடன். “நான் பஜ்ருக்கு எழுந்தவுடன் தினமும் ஊருக்கு தொழ எழுப்பும் விதமாக மனைவிக்கு மிஸ்டுகால் செய்துடுவேன். அதற்கு பதில் மிஸ்டுகால் வந்திருக்கு! பல நேரங்களில் நாங்க இப்படித்தான் பேசிக்குவோம்” என்றான் அன்வர்.

அவர்களின் மெளன பரிபாஷனைகளைக் கண்டு ஒரு கணம் நான் ஸ்தம்பித்தேன்.

அன்வர் ஒரு அரபி வீட்டில் வேலை பார்க்கிறான். பொதுவாகவே, அரபிவீடுகளில் வேலை செய்வோரின் புலம்பல்கள் ‘அவங்க வீட்ல கிழவன் நல்லவன், கிழவி சரியில்ல… எங்க வீட்ல கிழவி நல்லவ ஆனா கிழவன் மகா லொள்ளு பிடிச்சவன்’ என்பது போல் நீளும்.

‘அந்த அம்மா இருக்கே அது மண்டய சூடாக்கிடுது, வண்டிய மெதுவா ஓட்டினா என்னா தூங்கிறயா ‘ஹம்மார்’ (கழுதை) ன்னு கத்துது, வேகமா ஓட்டுனா என்னா கொல்லறதா முடிவு கட்டிட்டியா கல்ப் (நாய்)ன்னு கொலைக்கிது’. என்பது போன்றவை தான் புலம்பல்களில் பிரதான விஷயமாக இருக்கும்.

இதை எல்லாம் அவ்வப்போது கேட்கும்போது அல்லாஹ் நம்மை அந்த சூழ்நிலையில் வைக்காமல் நல்ல பணியில், குடும்பத்துடன் இங்கே இருக்க வாய்ப்பு அளித்ததற்கு நான் நன்றி கூறிக்கொள்வேன்.

அன்வர் அவன் அரபி முதலாளியைப் பற்றி எந்த குறையையும் யாரிடமும் கூறாமல் இருந்ததற்கு, அவனுடைய ஈமானின் உறுதி காரணமாக இருக்குமோ என்றெல்லாம் கூட எண்ணுவேன்.

அன்வர்  ஃபஜ்ர் தொழுகைக்கு தவறாமல் வருவதைக் காணும்போது, தொழுகை முடிந்தவுடன் காரில் அரபியின் பிள்ளைகளை மதரஸாக்களில் விடிகாலையில் கொண்டு செல்வதால்தான் இப்படி தவறாமல் வர முடிகிறதோ என்று கூட ஆரம்பத்தில் எண்ணியிருந்தேன்.

ஆனால் நாளாக நாளாக அவ்வப்போது அவனுடைய பேச்சுக்களும் வார்த்தைகளும் அது தவறு என்பதையும் பணியின் சுமைகளையும் தாண்டிய இறையச்சம் அவனிடம் உள்ளதையும் எனக்கு உணர்த்தியது.

இப்படித்தான் ஒருநாள் எனக்கு சில ஸிடி-க்களைக் கொடுத்து என் ஆஃபிஸில் வைத்திருக்கச் சொல்லியும் அவருடைய நண்பர் ஒருவர் என் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போகும் போது வந்து வாங்கக் கொள்வார் என்றும் கூறியிருந்தான் அன்வர்.

அப்போது நான் “அன்வர்… இது?” என முடிக்கும் முன்னரே, “பாய்! இது இஸ்லாமிய ஸீடிக்கள் தான் பாய், தொழுகையின் அவசியம், தொழும் முறைகள், மறுமை வாழ்வு, முஸ்லீம் கடமைகள் போன்ற ஸீடிக்கள் பாய்! நம்ம ஆசாத் இந்த வாரம் லீவுல ஊருக்கு போறான். அதான் ஊருக்கு கொடுத்தனுப்புறேன்” என்று என்னிடம் கூறியிருந்தான்.

அல்ஹம்துலில்லாஹ்! இவனைப் போலவே எல்லா இளைஞர்களும், தம் குடும்பத்துக்கு இது போன்ற நல்ல விஷயங்களை அனுப்பி தானும் இதை கடைபிடிச்சா எவ்வளவு நன்றாக இருக்கும் – அந்த நேரம் முதலே அன்வர் என் பார்வையில் உயர்ந்து விட்டிருந்தான்.

அதற்கும் முத்தாய்ப்பாய் தனது மனைவியை பிரிந்திருந்தாலும் இங்கு இருந்து, பஃஜ்ர் தொழுகைக்கு தானும் எழுந்து தன் மனைவியின் தொழுகைக்கான நினைவுறுத்தலுக்காக அவளுக்கு “மிஸ்டுகால்” தர அங்கிருந்து அவன் மனைவியும் பதில் மிஸ்கால் தரும் அந்த எளிமையான விதம்…அல்ஹம்துலில்லாஹ்!

நம்மில் பலர் அநாவசியமாக எப்படியெல்லாமோ எதற்கெல்லாமோ மிஸ்டுகால், SMS, சாட் என்று மொபைலை பயன்படுத்த அன்வரை போல் உபயோகிப்பவர் எத்தனைபேர்…..அதன் மூலம் தமது மறுமை எனும் நிலையான வாழ்க்கைக்கு உறக்கத்தினை களைந்து உரமிடுபவர் எத்தனைபேர்?

வாழ்க்கைப் பயணத்தில் முக்கியக் கட்டமான வாலிபப்பருவத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாக இப்படி குடும்பத்தைப் பிரிந்து வாழுபவர்கள், குர்ஆனில் (66:6) அல்லாஹ்வின் “உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துகொள்ளுங்கள்” எனும் கூற்றை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் உண்மையில் கணவன் மனைவி அன்பு மட்டும் அதிகரிக்காது, மறுமையின் சேமிப்பும் நன்மைகளும் அதிகரிக்கும் என்பதாக மனதில் பட்டது.

“பாய்…பாய்….என்ன ஆச்சு எங்கே இருக்கீங்க? என்ற அவன் குரல் கேட்டு மீண்டும் என் மன சிந்தனையிலிருந்து விடுபட்டேன்.

“என்ன பாய் ஆழமா சிந்தனையிலே போய்ட்டீங்க?”

“இல்ல அன்வர், இப்படி தினமும் நீங்க மிஸ்டுகால் கொடுக்கிறீங்களா?”

“ஆமாம், நான் இங்கு வந்ததும் கிடைச்ச முதல் சம்பளத்தில இரண்டு அஜான் கிளாக் வாங்கினேன், ஒண்ணு ஊருக்கு கொடுத்து அனுப்பிட்டேன். ஒண்ணை இங்க வச்சிருக்கிறேன். அதில ஊரின் பஃஜ்ர் நேரத்தை கணக்கிட்டு அலார்ம் செட் பண்ணியிருக்கிறேன். அஸ்மாவும் அப்படிதான் இங்குள்ள பஃஜ்ர் நேரத்தை கணக்கிட்டு அலார்ம் செட் பண்ணியிருக்கிறாள்.”

“இன்னொரு விஷயம் பாய்… இங்கு சரியா தூக்கம் வராமல் அலாரம் அடிக்கும் முன்னரே எழுந்து அதை ஆஃப் செய்யர நிலைதான் அதிகம்னு சொல்லணும். சில நேரம் நான் முந்திக்குவேன் சில நேரம் ‘அஸ்மா’ முந்திக்குவா…. சில நேரம் பாதி ராத்திரியில மிஸ்டு கால் வரும். அப்ப இது தஹஜ்ஜுத் தொழ என்று புரிந்து கொண்டு தஹஜ்ஜுத் தொழுது கொள்வோம், சில நாட்கள் நஃபிலான நோன்புகள் வைத்துக் கொள்வோம்.”

“ஊரிலே நான் இருக்கும்போது நான் முந்தி எழுந்தா அவளை எழுப்பி விடுவேன், அவள் எழுந்தா என்னை எழுப்பிவிடுவாள், அப்புறம் இங்கு வரவேண்டிய சூழ்நிலை குடும்ப பாரம். வாப்பா உடம்புக்கு ஆகாம உழைக்க முடியாம வீட்டில இருந்துட்டாங்க தம்பி படிக்கணும், தங்கச்சிக்கு நல்ல இடம் அமையணும்னு முடிவு செய்து படிப்பை மூட்டை கட்டி வேலைக்கு போற நிலை, அம்மாவுக்கும் வயசு ஆகி மூட்டு வலி மயக்கம்னு மிகவும் கடுமையான குடும்ப சூழ்நிலை”

“அதோட, இரண்டு குழந்தைங்க ஆனதும் சம்பாத்தியம் பத்தல. கடன் வேறு இருந்தது….. அதான் 4 வருஷமா இங்க வந்து இருக்கேன், என்னோட ஷேக் நல்லவரு! வருஷா வருஷம் ஸ்கூல் லீவுல இரண்டு மாசம் வெளியூருக்கு போய்டுவாங்க…. அதிர்ஷ்டவசமா எனக்கும் வருஷம் ஒருமுறை ஊருக்கு போக அல்லாஹ் உதவியால லீவு டிக்கட் பணம் கொடுத்துடுவாங்க.

“அல்ஹம்துலில்லாஹ்… சம்பளம் குறைவுதான்னாலும்… அல்லாஹ்வுடைய பரக்கத்….. அஸ்மாகிட்டயும் ஏதும் ஆடம்பரம் வீண் விரயம் இல்ல ஒரளவுக்கு நிம்மதியா வண்டி ஒடுது…. இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. அதை மட்டும் அடைச்சிட்டா ஏதாவது ஒரு தொழில் செய்துகொண்டு ஊரிலேயே பிழைத்துக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ்!”

“நீங்க என்னமோ கேட்டீங்க நான் என் கதையையே சொல்ல ஆரம்பிச்சிட்டேன்….ஆக தினம் தவறாமல் நாங்க மிஸ்டுகால் கொடுத்துக்குவோம். ரொம்ப தேவைப்பட்டாலொழிய போன் பேசமாட்டோம். என்னோட சம்பளத்தில எல்லாம் அடிக்கடி போன் செய்து மனைவியிடம் பேசறது நடக்குமா பாய்” என்றான் சற்று கூச்சத்துடன்.

“அன்வர் இன்னொரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?”

“இல்லங்க பாய் சும்மா கேளுங்க!”

நான் பேச வாய் திறந்தபோது பழக்கமான குரல் குறுக்கிட்டது.

“அஸ்ஸலாமு அலைக்கும்!” தொழுது முடித்த பின்னும் சிலநிமிடங்கள் குர் ஆன் ஒதி தர்ஜுமாவோடு சில வசனங்கள் படித்துவிட்டு வீட்டுக்கு போகும் பழக்கமுடைய பிலால் பாயின் குரல்தான் அது!

“வ அலைக்கும் அஸ்ஸலாம்….”

“என்ன அஹ்மத் பாய், என்ன அன்வர், இன்னும் வீட்டுக்கு போகாம வண்டிகிட்ட நின்னுகிட்டு என்ன பேசிகிட்டிருக்கீங்க, எல்லாம் நல்ல செய்திதானே…..?”

“அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் நல்ல செய்திதான், நீங்க நல்லா இருக்கீங்களா?”

“அல்ஹம்துலில்லாஹ்… உங்க துவா பரக்கத்தால அல்லாஹ்வுடைய அருளால நல்லா இருக்கிறேன்.” பதில் சொல்லிக்கொண்டே வேகமாக அவர் வண்டியின் பக்கம் விரைந்தார் பிலால் பாய்.

எப்போதுமே அவருக்கு அவசரம்தான். நேரத்தை வீணாக்கும் பழக்கமில்லாதவர். அதேநேரம் கிடைக்கும் அரிய நேரத்திலும் குர்ஆன், ஹதீஸ் என்று பயனுள்ளதாகக் கழிப்பவர். பாக்கெட்டிலும் சிறிய சைஸ் குர்ஆன் எப்போதும் இருக்கும், கையில் இருக்கும் பைகளிலும் ஏதேனும் இஸ்லாமிய புத்தகங்கள். எங்கு நேரம் கிடைத்தாலும் அதை எடுத்து படிக்கத் துவங்கிவிடுவார், அது டாக்டருக்கு காத்திருக்கும் இடமாக இருந்தாலும், அல்லது சலூனில் கூட்டம் இருந்தாலும், அங்குள்ள கண்ட பத்திரிகைகளுக்குப் பதிலாக போகும்போதே கையில் எடுத்து சென்று விடும் பழக்கமுடையவர். பயணத்திலும், பேங்கில் என்று எங்கு காத்திருக்க நேர்ந்தாலும் அவர் இப்படிதான் நேரத்தை பயன்படுத்திக் கொள்வார்.

“ஏன் பிலால்பாய்… எந்த நேரமும் இப்படி படிச்சுகிட்டே இருக்கிறீங்களே… உங்களுக்கு தலைவலிக்கலயா?” என்று ஒருநாள் நான் தமாஷாக கேட்டு விட்டேன்.

“அஹ்மத்பாய்! ஒரு மூமீன் பேசினால் நல்லத பேசட்டும்… அல்லது மெளனமாக இருக்கட்டும்னு நபி(ஸல்) அவங்க சொல்லியிருக்காங்கல்ல. அதான் கண்டதையெல்லாம் பேசாமலும், பார்க்காமலும், கேட்காமலும் இருக்க இது ஒரு நல்ல வழியா எனக்குப்படுது… அது மட்டுமல்ல நிறைய விஷயத்தை புரியறது ஒரு நன்மை அதே போல் மறுமையில் இதற்கு அல்லாஹ்கிட்ட மிகப் பெரிய நன்மையும் இருக்கு. ஒரு ஒரு எழுத்துக்கு பத்து நன்மை அப்படின்னா கணக்கு போடுங்க… உலகத்தில நாம எவ்வளவு சம்பாதிப்போம் என்பதும் அதால எவ்வளவு பயன் என்பதையும் விட மறுமைக்கும் அதிகமாக சம்பாதிக்கிற வழி இது தான்…. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்து பாருங்க! அல்லாஹ் தவ்ஃபீக் செய்வான்னு சொல்லிக்கொண்ட அப்போதும் இப்படித்தான் ஓடிவிட்டார்.

பிலால்பாய் விடைபெற்றதால் விடுபட்ட எங்கள் சம்பாஷனைகளைத் தொடர்ந்தோம்.

“அன்வர் உங்க கிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்னு நினைக்கிறேன்,….. அதுக்கு முன்ன நீங்க ஏதோ விஷயம் இருக்குன்னு சொன்னீங்களே சொல்லுங்க..”

“ஒண்ணுமில்ல அஹ்மத்பாய் இந்த லீவுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு, இந்த முறை வீட்டுக்கு வரும்போது தங்கச்சிக்கு ஒரு இடத்தில பார்த்து கல்யாணம் முடித்துட்டு போயுடுப்பான்னு அம்மாவும் அப்பாவும் ரொம்ப வற்புறுத்துறாங்க”

“கல்யாணம்னா, அதை நம்ம மக்கள் சிரமமா ஆக்கி வச்சிருக்காங்க, கல்யாணத்தை நடத்திப் பாரு வீட்டை கட்டிப்பாருன்னுகூட பழமொழியை சாதாரணமா சொல்லி இதை நியாயப்படுத்துறாங்க. கல்யாணம் அதுவும் பெண்ணுடைய கல்யாணம் அப்படின்னு சொன்னாலே அது நம்ம நாட்டு நடைமுறைல விதி விலக்கா அங்கொண்ணும் இங்கொண்ணும்னு தவிர, எல்லாமே சிரமமான நிர்ப்பந்தங்களுக்கு தள்ளப்பட்ட நிலையிலதான் இருக்கு இல்லையா? இத்தனைக்கும் மத்தியில இப்பத்தான் பல முஸ்லிம் இளைஞர்கள் நபிவழி திருமணம்னு, வரதட்சனை வீண்விரயம் ஏதும் இல்லாம சுன்னத்தான முறையில கல்யாணம் செய்ய முன் வந்திருக்காங்க…

“என் தங்கச்சியும், கல்யாணம் செஞ்சா ஐவேளை தொழக்கூடிய, வரதட்சனை வாங்காமல் நபிவழியில் திருமணம் செய்யக்கூடிய மாப்பிள்ளையைதான் கல்யாணம் செய்வேன்னு, பல இடங்களில சொந்தத்தையும் கூட வேண்டாம்னு சொல்லிகிட்டு இத்தனை நாட்களை கடத்திகிட்டு இருந்தாள். இப்ப ஒரே நேரத்தில மூன்று இடத்தில இருந்து அவளை பெண் கேட்டு வந்திருக்கிறாங்க. இரண்டு பேர் நம்ம நாட்டில இருக்கிறாங்க. மூன்றாவது மாப்பிள்ளை ஸவூதியிலே வேலை. திருமணத்துக்கு அப்புறம் தங்கச்சியை ஸவூதிக்கு அழைத்துக் கொள்வார்கள் என்று சொல்லி இருக்கிறாங்களாம். ஒண்ணும் புரியல நான் நாட்டுக்குப் போய் பார்த்துதான் ஒரு முடிவுக்கு வரணும். எல்லாம் நல்ல விதமா நடக்கிறதுக்கு துவா செய்யுங்க. அதோட எனக்கு ஒரு உதவியும் தேவை உங்ககிட்ட….”

என்று தொடர்ந்த அன்வர் தயங்கி நிறுத்தினான்.

“தயங்காம சொல்லுங்க அன்வர் என்னால முடிந்ததை செய்வேன் இன்ஷாஅல்லாஹ்..”

“ஊரில இருக்க இரண்டு மாப்பிள்ளங்க விஷயத்தில ஊரில போய் பார்த்தா தெரிஞ்சிக்கலாம்….. ஆனால் ஸவூதியில இருக்க மாப்பிள்ள.. அதன் மூலமா அங்கே செல்ல கூடிய வாய்ப்பு உம்ரா ஹஜ் இப்படி பல நன்மைகள் ஒவ்வொரு தொழுகைக்கும் பல்லாயிரக்கணக்கில் நன்மை கிடைக்கிற பள்ளிகள் இருக்கும் புனித மக்கா மதீனா போன்ற பள்ளிகளில் தொழ என் தங்கச்சிக்கு கிடைக்கும் பாக்கியம்னு… எதையுமே நம்ப முடியலே.. அதே நேரத்தில் பையனைப் பற்றி அதிகம் ஏதும் விபரம் இல்லை நல்ல பையன் நல்ல கம்பனியில் அக்கவுண்டண்ட் போன்ற விபரங்கள்தான் இருக்கு.

“தங்கச்சி நஸீமாவும் ஸவூதியிலிருக்கும் மாப்பிள்ளையை இஸ்லாமிய நாடு மக்கா மதீனா என்று நன்மைகளை அதிகமாக்கலாம் என்ற அடிப்படையில் ஆசைப்படுவதாக தெரிகிறது என்று அம்மா சொன்னாங்க. நீங்க துபைக்கு வருவதற்கு முன்னாலெ, ஸவூதிலே பல வருஷம் இருந்தீங்க, உங்க சொந்தக்காரங்களும் அங்க இருக்கிறாங்க கொஞ்சம் பையனப் பத்தி விசாரித்து எனக்கு விபரம் தந்தீங்கன்னா எனக்கு முடிவு எடுக்க நல்லா இருக்கும்” என்று முடித்தான் அன்வர்

“அவ்வளவுதானே? இன்ஷா அல்லாஹ் பையன் பேரும் விலாசம் நம்பர் கொடுங்க முயற்சித்து பார்ப்போம். ஆனாலும் இது சாதாரண விஷயமில்லை. மிகவும் பொறுப்பான விஷயம். ஜாக்கிரதையாகத்தான் கருத்து சொல்லணும்!”

பேசிக்கொண்டிருக்கையில் எனது மொபைல் ஒலியெழுப்பியது. மிஸ்டு கால்… அதுவும் வீட்டிலிருந்து தான்! தொழுதுவிட்டு உடனே வீட்டுக்கு சீக்கிரம் வாங்கன்னு சொல்லியும் நின்று பேசிக் கொண்டிருந்ததால் போன் வந்திருக்கிறது.

“அதுசரி அஹ்மத் பாய்! நீங்க என்னமோ கேட்கணும்னு சொன்னீங்களே?” அன்வர் கேட்டவாறே தனது பர்ஸில் ஏதோ தேடினான்.

“ஒண்ணுமில்ல…அன்வர் பாய்! என் கடைசி மகனுக்கு நான் உங்களை போன்ற இறையச்சமுடைய குடும்பத்தில பெண் எடுக்கலாமான்னு திடீரென்று ஒரு எண்ணம் வந்தது…. ஆனால் ஒருவர் பெண் கேட்கும் இடத்தில பெண் பேசுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை… நீங்கள் விரும்பினா அந்த நம்பரை என்னிடம் கொடுங்க இல்லன்னா வேற யாரிடமாவது கொடுங்க..” என்றேன்.

“என்னங்க பாய் நீங்க..உங்களை எவ்வளவு நம்பி நான் விசாரிச்சு சொல்லுங்கன்னு சொல்றேன். ஆனா நீங்களே இப்படி தயங்கலாமா? அதோட உங்களுக்கு கல்யாணம் ஆகாத ஒரு மகன் இருப்பது எனக்கு தெரியாது அஹ்மத் பாய், திருமணம் அல்லாஹ்வினால் நிச்சயக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் இன்ஷா அல்லாஹ்.. அவன் நாடியதே நடக்கும்…இது இம்மை.. இங்கே நாம் நாடியது எல்லாம் நடப்பது இல்லை. அல்லாஹ் நாடினாலே தவிர, ஆனால் மறுமையில் சொர்க்கத்தில் நாம் நாடுவதையெல்லாம் அல்லாஹ் நடத்தி தர வாக்களித்துள்ளான்…இல்லையா பாய்?” என்று சொல்லிக்கொண்டே ஒரு சீட்டை கையில் கொடுக்க நீட்டினான் அன்வர்.

அதை நான் கையில் வாங்க கை நீட்டும்போது என் மொபைல் போனில் மீண்டும் ஒரு மிஸ்டுகால் வந்தது.

என் சட்டைப் பையில் இருந்த மொபைலை வெளியில் எடுத்து உற்று நோக்கினேன். அட! என் மகன் நஜீர் அஹ்மத் தான்! ஸவூதியிலிருந்து ‘வரதட்சணை ஒரு கொடுமை’ எனும் தலைப்பில் அவன் ஆற்றிய உரை டி.வி.யில் இன்று முதல் முறையாக ஒளிபரப்பாக இருக்கிறது காலையில் பார்க்க தவறாதீர்கள், உங்கள் நினைவுறுத்தலுக்காக வேண்டி காலையில் நான் மிஸ்டுகால் தருவேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

ஜெத்தா இஸ்லாமிய அழைப்பகத்தில் ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சியில் நஜீர் முதன் முறையாக ‘வரதட்சணை ஒரு கொடுமை’ எனும் தலைப்பில் அவன் பேசியது டி.வி.யில் ஃபஜ்ர் நேர நிகழ்ச்சியாக அந்நூர் டி.வியில் ஒளிபரப்பாக இருந்தது

ஒருவேளை இதுக்குத்தான் வீட்டிலே இருந்தும் மிஸ்கால் வந்ததோ…என்று லேசாக குழம்பினேன்.

“சரி அன்வர் இன்னிக்கு தான் முதல் முதல்ல எங்க கடைசி மகன் நஜீர் அஹ்மதுடைய பேச்சு அந்நூர் டீவியில் இப்ப 6.30க்கு காட்டப்போறாங்க நான் வரேன் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்!”

“அஹ்மத் பாய் உங்கள் கையில் இருக்கும் சீட்டில் இருப்பதுதான் அந்த ஸவூதி பையனுடைய நம்பர்… மறந்துடாதீங்க!”

சீட்டை வாங்கி பெயரையும் நம்பரையும் உன்னிப்பாக பார்த்தபோது ஏதோ ஒன்று சிலீர் என்று உறைத்தது. சீட்டில் இருந்த பெயர்………நஜீர் அஹ்மத் S/O மன்ஸூர் அஹ்மத். பெயரும் எண்ணும் என் மகனுடையது தான்.

“யா அல்லாஹ்!” என்றேன் என்னையும் அறியாமல்.

அன்வரை ஒருக்கணம் மெளனமாக பார்த்து விட்டு “அன்வர்.. தயவு செஞ்சு இந்த சீட்டைப் பிடிங்க, இந்தப் பையனின் நடத்தை பற்றி நானே எதுவும் சொல்ல முடியாது” என்றேன்

“ஏன் அஹமத் பாய்… என்ன ஆச்சு?” என்றார் அன்வர் ஒன்றும் புரியாமல், அஹமத் பாய்க்கு ஏதோ மனசங்கடம் ஏற்படுத்தி விட்டோமோ என்ற தவிப்பு அவர் கண்களில் தெரிந்தது.

“அன்வர், இந்த பையன்… என்னுடைய மகன் நஜீர் அஹ்மது தான்.  இந்த சீட்டில் எழுதியுள்ள இவரின் வாப்பா மன்ஸூர் அஹ்மத் நான் தான். பொதுவாக என்னை அஹ்மத் என்று அழைப்பார்கள் என்பதால் நீங்களும் கவனிக்கவில்லை” என்றபடி கார் கதவைத் திறந்தேன்.

அன்வர் ஒரு வித இனம்புரியாத பேரதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

விக்கித்து நின்றிருந்த அன்வருடைய மொபைலில் மீண்டும் தொடர்ந்து மிஸ்டுகால்கள் வட்டமிட்டன. ஊரிலிருந்து அஸ்மா தான் போல. ஏதாவது மிக முக்கியமான செய்தியாக இருந்தால் தான் இப்படி தொடர் மிஸ்டுகால்கள் வரும்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அதே மொபைலில் உடன் ஊருக்கு டயல் செய்தான் அன்வர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா” என்றவாறு காரின் பின்புறமாக சற்றுத் தள்ளி நின்று சென்றாலும் அவன் பேசுவது எனக்குத் தெளிவாகவே கேட்டது.

“வ அலைக்கும் ஸலாம்…”

“என்ன விஷயம் அஸ்மா… வாப்பா அம்மா நீங்க எல்லொரும் நல்லா இருக்கீங்க இல்ல…”என்றான் லேசான பதற்றத்துடன்..

“அல்ஹம்துலில்லாஹ்…. ஒண்ணுமில்லேங்க… அந்த ஸவூதி மாப்பிள்ளையுடைய இஸ்லாமிய நிகழ்ச்சி அந்நூர் டிவியில இன்னிக்கு வருதாம் அதான் உங்களுக்கு சொல்ல போன் செய்தேன். பார்த்துட்டு போன் செய்யுங்க. நான் வைக்கிறேன் உடம்பை பத்திரமா பாத்துக்கங்க. அஸ்ஸலாமு அலைக்கும்.” என்றவாறு முடித்தாள் அஸ்மா.

“வ அலைக்கும் அஸ்ஸலாம்” என்று பதில் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்த அன்வர் ஓட்டமும் நடையுமாக என்னை நோக்கி வருவது காரின் பின் பார்வைக்கான கண்ணாடியில் தெரிந்தது.  காரை ரிவர்ஸ்ஸில் எடுத்துக் கொண்டிருந்த என்னை மறித்து அருகில் வந்த அன்வர், “அஹ்மத் பாய்…உங்க மனசை பாதிக்கிற மாதிரி ஏதும் செஞ்சிட்டனான்னு புரியல…”என்றான்.

“சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அன்வர், என் மகனுடைய நிகழ்ச்சி முதல் முறையா டி.வி, மூலம் இன்னிக்கு உலகம் முழுவதும் பரவ அல்லாஹ் வாய்ப்பளித்திருக்கான். அந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாதேன்னுதான் அவசரமா போகிறேன். வேற ஒண்ணுமில்லை…” என்றேன்.

“இல்லே.. இந்த சீட்டால உங்களுக்கு ஏதும் மனக்கஷ்டம்…” என்று தயங்கிய அன்வர் வார்த்தைகளை முடிக்கும் முன் அவனை இடைமறித்தேன்.

“அன்வர் நீங்க செய்றது மிகவும் சரியான காரியம். உங்க தங்கச்சியோட வாழ்க்கை விஷயமாக முடிவு எடுக்க நீங்க செய்தது மிகவும் அவசியமானது. ஆனா என் மகனை பற்றி நானே முடிவு சொல்றதைவிட அடுத்தவங்க சொல்வது தான் சரின்னு எனக்கு பட்டது… நீங்க இன்னும் வேற யார் மூலமாவது விசாரித்து பொறுமையா முடிவு செய்யுங்க, என்னுடைய முறை அதுக்கு அப்புறம்தான். அல்லாஹ் நாடியதே நடக்கும்னு உங்களுக்கு நான் சொல்ல தேவையில்ல…நல்லது மறுபடி சந்திப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்” என்றவாறு கியர் மாற்றி வண்டியை நகர்த்தினேன்.

இந்த சீட்டை இனி அடுத்தவருக்குத் தருவதா வேண்டாமா? இனி அதன் அவசியம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல், தன் கையில் உள்ள சீட்டைக் கசக்கி அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் எறிந்தான். அஹ்மத் பாயிடம் தான் கண்ட நற்குணமும் நல்லொழுக்கமும் அவர் மகனிடத்தில் கண்டிப்பாக இருக்கும் என்ற உறுதியான எண்ணத்திலும் உற்சாகம் பொங்கும் மனதுடனும் தன் அறையை நோக்கி நடைபோட்டான்.

ஃபஜர் தொழுகைக்கான நேரம் முடிந்து ஆரம்பமாகும் பிரகாசமான விடியலுக்கான அறிகுறிகள் விண்ணில் பளிச்சிடத் தொடங்கின.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.