வர்ஜீனியா பல்கலை துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் இறந்த சம்பவ அதிர்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளும் முன்னரேயே அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவில் ஒரு பொறியாளர் தன் மேலாளரைப் பிணயக் கைதியாக வைத்திருந்து பின் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமான நாஸாவின் ஹியூஸ்டன் நகரில் இருக்கும் ஜான்ஸன் விண்வெளி மையத்தில் ஒப்பந்தப் பொறியாளராகப் பணிபுரியும் 60 வயதாகும் வில்லியம் பிலிப்ஸ் தன்னுடைய மேலாளரான டேவிட் பெவர்லி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் பெவர்லி உட்பட இன்னும் ஒரு பணியாளரை பிணையக் கைதிகளாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டத்தில் பிலிப்ஸ், பெவர்லியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இது சாதாரண பணி நிமித்தமான தகராறு என்றும் அதனால் கோபத்தின் உச்சக்கட்டத்தில் பிலிப்ஸ், பெவர்லியைச் சுட்டுவிட்டார் என்றும் நாஸா நிறுவனம் தெரிவித்தாலும் காவல் துறை வேறு சில விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டுள்ளது.
1. அதி பாதுகாப்பு நிறைந்த இடமான ஜான்சன் விண்வெளி மையத்தில் ஒப்பந்தப் பணியாளரான பிலிப்ஸ் துப்பாக்கியைக் கொண்டு செல்ல முடிந்தது எவ்வாறு?
2. குற்றவாளி பிலிப்ஸ் அமைதியானவர் என்றும் வம்புதும்புக்குப் போகாதவர் என்றும் சொல்லப்படும் போது இது சாதாரண பணி நிமித்தமான தகராறு எனச் சொல்லமுடியுமா?
3. ஜான்சன் விண்வெளி மையத் தலைவர் கோட்ஸ், கொலையாளி பிலிப்ஸ் நன்னடத்தை மிக்க ஊழியர் (Ideal Employee) என்று சான்றுரைத்தது எப்படி?
4. வர்ஜீனியா துப்பாக்கிச்சூடு நடந்த பின்னும் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்படவில்லை?