பெய்ரூட்: "ஹிஸ்புல்லாவின் அக்கிரமங்களுக்கும் கூட்டுக்கொலைகளுக்கும் இடையே கடந்த முப்பது ஆண்டுகளாக லெபனான் மக்கள் துன்பம் அனுபவித்து வருகின்றனர் என்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சேபம் கேட்டு நாங்கள் பெருமை கொள்கின்றோம்" என ஹிஸ்புல்லாஹ் அதற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
போர் வெறியரும் சர்வதேசத் தீவிரவாதத்தின் ஆணிவேருமான ஒரு நாட்டின் தலைவர் எம்மை ஆட்சேபிப்பது, எங்களின் தற்காப்புப் போராட்டம் அவர்களிடையே பீதியைக் கிளப்புகின்றது என்பதற்கான அங்கீகாரமாகும் என ஹிஸ்புல்லாஹ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
"போராட்டத்திற்கான எங்களின் வழி சரியான திசையில் பயணிக்கின்றது என்பதற்கான ஆதாரங்களே இத்தகைய சர்வதேச தீவிரவாதிகளின் ஆட்சேபணைகளாம்!" எனவும் அவ்வறிக்கைக் கூறுகின்றது.
1983 ஏப்ரல் மாதம் பெய்ரூட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலின் நினைவுச்சடங்கில் பங்கேற்றுப் பேசும் பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஹிஸ்புல்லாஹ்வை கடுமையான மொழியில் சாடியிருந்தார். பெய்ரூட் தாக்குதல் முதல் அனேக முறை அமெரிக்கர்களும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஹிஸ்புல்லாஹ்வின் தீவிரவாதத்திற்கு இரையாகி உள்ளனர் என புஷ் கூறியிருந்தார். லெபனானின் உறுதியற்ற அரசியல்நிலைக்கு ஹிஸ்புல்லாஹ் மட்டுமே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கான பதிலடியாக ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட கருத்தினை ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிரான ஆட்சேபம், மத்திய கிழக்கின் வரலாற்றில் முதன் முறையாக இஸ்ரேலைத் தோல்வியுறச் செய்த ஹிஸ்புல்லாஹ்வைத் தனிமைப்படுத்தும் முயற்சி எனக் கருதப்படுகிறது.