அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

மனநோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர் டிம் நோ!
Share this:

‘அமைதியை நிலை நாட்ட ஒரு போர்’ என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.

ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு உணர்வதிர்ச்சி (post-traumatic stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND Corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டு, கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது” என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார். பெண்டகனிடம் இத்தகவல்கள் பற்றிய ஆய்வறிக்கை ஏதும் இல்லாததே இது பற்றின ஆய்வில் RAND இறங்கத் தூண்டியது என்று கூறினார்.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:

– கொடூரச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

– தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்

– குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல்

– விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல்

இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:

— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி
— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை
— விலைமதிப்பற்ற மனித உயிர்கள், படுகொலைகள், (ம)ரணங்கள், தெறிக்கும் இரத்தம் உருவாக்கும் நோய் ( நன்றி: RAND ஆய்வறிக்கை)

 

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.
 
 போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. (இந்நோயின் மூலம் ஏற்படும் அறிகுறிகள் இடப்புற பெட்டிச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.)
 
 RAND அளித்துள்ள அறிக்கையின் முடிவில் படைவீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக பெண்டகன் செய்ய முன்வர வேண்டுமென்றும் அவர்களது உடல்நலம் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தாமதம் ஆகும் பட்சத்தில் படைவீரர்களிடையே தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மன நோயினால் ஆர்வம் குன்றி பணிபுரியும் அமெரிக்கப் படைவீரர்களின் தரம் குறைந்த பங்களிப்பினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.
 
டிம் நோ என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள Veterans Affairs ஒப்புக் கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில புள்ளிவிபரங்கள் கீழேயுள்ள பெட்டிச்செய்தியில் காண்க.

அமெரிக்காவின் Veterans Affairs அறிக்கை

– 19 % அல்லது 320,000 அமெரிக்கப் படைவீரர்கள் PTSD நோயினால் அவதியுறுகின்றனர்.
– 7 % வீரர்கள் மன அழுத்தம் முற்றியதால் மூளையில் சேதம் ஏற்பட்டுள்ளது
– 43 % தலையில் ஏற்பட்டுள்ள வேதனை காரணமாக மருத்துவர்களால் பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்.
– 53 % PTSD மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுறுபவர்கள் (கடந்த வருடம் மட்டும்)

 

 

RAND அறிக்கை பற்றிய சிறு குறிப்பு: கலிஃபோர்னியா சமூக நல அறக்கொடை சார்பில் RAND உடல்நலத்துறை மற்றும் RAND தேசிய பாதுகாப்பு ஆய்வுத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த அறிக்கைக்கு கண்ணுக்குப் புலப்படா போர்க்காயங்கள்: உளவியல் மற்றும் புலன் உணர்வு, அதன் விளைவுகள், மற்றும் மீட்புப்பணிக்கான சேவைகள் (“Invisible Wounds of War: Psychological and Cognitive Injuries, Their Consequences, and Services to Assist Recovery.”) என்று பெயர். கடுமையான உழைப்பில் 25 ஆய்வாளர்கள் குழுவின் மூலம் கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையே மேலே நாம் குறிப்பிட்டுள்ள RAND அறிக்கை ஆகும்.
 
அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள் இன்று அமைதியிழந்து அவதிக்குள்ளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய “அமைதியை நிலை நாட்டும்(?) போர்” அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன. இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் கட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.
 
 – அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.