தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் (தஷஹ்ஹுதில்) விரல் அசைக்கலாமா?

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


தொழுகையில் – அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைப்பதற்கும், அசைக்காமல் இருப்பதற்கும் ஆதாரம் இருக்கின்றதா? விளக்கவும் இன்ஷா அல்லாஹ். (மின்னஞ்சல் வழியாக, சகோதரர் முஹம்மத் ஹாஜா நஜ்முத்தீன்)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…


தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைப்பது குறித்து நான்கு வகையான கருத்துகள் உள்ளன.

1. ஓர் இடத்தில் விரலை உயர்த்தித் தாழ்த்திவிட வேண்டும்.


2. விரலை நீட்ட வேண்டும்.

3. விரலை அசைக்கக்கூடாது.

4. விரலை அசைக்க வேண்டும்.

இவ்வாறு நான்கு கருத்துகளில் எது நபிவழிக்கு நெருக்கமானது என்பதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

1. ஓர் இடத்தில் விரலை உயர்த்தித் தாழ்த்திவிட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக எந்த நபிமொழியும் இல்லை! அதோடு சிலர் தஷஹ்ஹுதில் அத்தஹிய்யாத்து ஓதும் போது அஷ்ஹது அன்லாயிலாஹ எனும் போது விரலை உயர்த்தி இல்லல்லாஹு எனும் போது தாழ்த்துகின்றனர் இதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை!

2. விரலை நீட்ட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்வோம்.

“நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது, விரலால் சைகை செய்வார்கள். விரலை அசைக்க மாட்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அபூதாவூத், நஸயீ நூல்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் நான்காவது அறிவிப்பாளர் ஸியாத் என்பவர் பலவீனமானவர். (அதோடு, இதில் தொழுகையில் என்று குறிப்பிடவில்லை என்ற சர்ச்சையும் உள்ளது) என்பதால் விரலை நீட்டி வைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரப்பூர்வமான நபிமொழி எதுவும் இல்லை!


3. விரலை அசைக்கக்கூடாது என்பதற்கும் மேற்கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களின் அறிவிப்பையே ஆதாரமாகக் கொள்வதால் பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் விரலை அசைக்கக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாது.


4. விரலை அசைக்க வேண்டும்:


(அ) ”இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் பார்த்தேன்… என்று வர்ணித்து… நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன்னங் கையை இடது தொடையிலும். முழங்காலிலும் வைத்தார்கள். தமது வலது முன்னங்கையை வலது தொடையிலும், முழங்காலிலும் வைத்தார்கள். பின்னர் தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு கட்டை விரலையும், நடு விரலையும் இணைத்து வளையம்போல் அமைத்து, ஆள்காட்டி விரலை உயர்த்தி அதனால் (யாரையோ) அழைப்பது போல் அசைப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்று வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நஸயீ, அஹ்மத், தாரிமீ)


(ஆ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து(ப் படுக்க) வைப்பார்கள். தமது இடக் கையை இடது கால் முழங்காலின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (ஆட்காட்டி) விரலால் சைகை செய்வார்கள். என்று அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)


(இ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெரு விரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள். என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)


இதே கருத்தில் மேலும் சில நபிமொழிகள் உள்ளன. ஆ, இ வரிசையில் குறிப்பிட்டுள்ள அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்களில் ”நபி (ஸல்) அவர்கள் விரலால் சைகை செய்வார்கள்” என்பதற்கு ”நபி (ஸல்) அவர்கள் யாரையோ அழைப்பது போல் ஆட்காட்டி விரலை அசைப்பதை நான் பார்த்திருக்றேன்” என்ற வாஇல் (ரலி) அவர்களின் அறிவிப்பு விளக்கமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலால் இஷாரா – சைகை செய்வார்கள் என்றக் கருத்து, யாரையோ அழைப்பது போல் ஆட்காட்டி விரலை அசைப்பார்கள் என்றக் கருத்துக்கு முரண்பட்டதல்ல. ”நபி (ஸல்) அவர்கள் விரலை அசைப்பார்கள்” என்று வலுவான அறிவிப்பு உள்ளதால், தொழுகையில் தஷஹ்ஹுதில் (அத்தஹிய்யாத் இருப்பில்) விரலை அசைப்பது நபிவழி என்பது தெளிவு!


2ல், அபூதாவூத், நஸயீ நூல்களில் இடம்பெறும் விரலால் சைகை செய்வார்கள், விரலை அசைக்க மாட்டார்கள் என்ற அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களின் அறிவிப்பு வலுவற்றதாக இருப்பதாலும் – முஸ்லிம், நஸயீ, அஹ்மத் நூற்களில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களின் ஸஹீஹான அறிவிப்பில் விரலால் சைகை செய்வார்கள் என்ற வாசகம் மட்டுமே உள்ளது. விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் இல்லை என்பதால் தொழுகையில் தஷஹ்ஹுதில் (அத்தஹிய்யாத் இருப்பில்) விரலை அசைக்கக்கூடாது எனத் தடை செய்ய எவ்வித நபிவழி ஆதாரமும் இல்லை!


(இறைவன் மிக்க அறிந்தவன்)