பக்தாத்: அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் அருள்மறை குர்ஆனை தமது துப்பாக்கிச்சூடு பயிற்சிக்குப் பயன்படுத்தி புனித குர்ஆனுக்குக் களங்கம் கற்பித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கோபத்திற்கு அஞ்சி மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
துரிதமான அமெரிக்க அதிகாரிகளின் மன்னிப்பு கோரல் இராக்கில் முஸ்லிம்களின் கோபத்தைத் தவிர்க்க எடுத்த ஓர் அவசர நடவடிக்கையாகும்.
அமெரிக்க இராணுவம், ஞாயிறன்று அந்த அமெரிக்க ராணுவ வீரரை அடையாளம் காட்டாமல், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து இராக்கைவிட்டு வெளியேற்றி விட்டதாகக் குறிப்பிட்டது. முஸ்லிம்களின் புனித வேதத்தின் பிரதியில் தோட்டாக்களினால் ஏற்பட்ட துளைகளை பக்தாத்தில் மே 11 அன்று கண்டெடுத்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தினால் பெறப்பட்ட நிழற்படங்களில் புனித வேதத்தில் குறைந்தது 10 தோட்டாத் துளைகள் காணப்பட்டது.
இச்சம்பவம் இராக்கிய இராணுவத்திற்கும் எதிர்பாராத சங்கடமாக அமைந்தது, ஏனெனில் அவர்கள் இராக்கின் அரபுப் பழங்குடியினருடன் நல்லுறவை ஏற்படுத்தி அல்காயிதாவை எதிர்க்க முயன்று வருகின்றனர் (அதில் இது போன்ற சம்பவங்கள் பின்னடைவை ஏற்படுத்தலாம்.) இப்படி நல்லுறவுகள் மூலம் ஆதரவு பெற்றுக் கூட்டுமுயற்சியால் இராக்கில் தொடர்ந்து வரும் வன்முறைகளைக் குறைக்க இயலும் என இராக்கிய இராணுவம் கருதுகிறது.
"எனக்குக் கசப்பான இச்சம்பவம் வேதனையளித்தது, ஆயினும் அமெரிக்க இராணுவத்தினர் உடனடியாக இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் எங்கள் கோபம் தணிந்தது" என்று அரபியப் பழங்குடியினர் குழுவின் தலைவர் ஒருவர் கூறினார்.
அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயல்படும் பழங்குடியினர் இச்சம்மபவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உறவை உடன் முறித்து விடுவோம் என்று அமெரிக்க இராணுவத்தை அச்சுறுத்தியதாகவும் மேலும் அவர் கூறினார்.
கர்னல் பில் புக்னர் எனும் அமெரிக்க இராணுவச் செய்தி தொடர்பாளர் இந்தத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை பற்றி குறிப்பிடுகையில் "இது மிகவும் கவலைக்குரியதும் கேடானதுமாகும்" என்று கூறினார்.
அமெரிக்க இராணுவத்திற்கு இராக்கில் உள்ள இந்தப் பழங்குடியினரின் ஆதரவு மிக இன்றியமையாததாகும். அமெரிக்க இராணுவ வீரரின் இந்த இழிசெயல் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்ததாகவே கருத முடிகிறது.