அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள உறுதிமொழி!

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
சில இயக்கங்கள் தங்கள் தொண்டர்களிடம் "அல்லாஹ்விடம் செய்யும் பைஅத் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம்" என்று கூறி பைஅத் வாங்கிக் கொள்கிறார்கள். பின்பு அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற நினைத்தால் அவர் முன்பு செய்த சத்தியத்தைச் சொல்லி பயமுறுத்துகிறார்கள். 
 
உதாரணமாக:
 
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் தொழுகையை விடமாட்டேன், நான் பொய் சொல்ல மாட்டேன், நான் டிவி பார்க்க மாட்டேன், நான் இந்த இயக்கத்திலிருந்து விலக மாட்டேன், இயக்கத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் நான் வருவேன் இப்படிப் பல உறுதிமொழிகள்.

சில சமயங்களில் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் விடுபட நேரிடும்; அப்போது நாம் குற்றவாளி ஆகிவிடுகிறோம். மேலே கண்டவாறு சத்தியம் செய்யலாமா? இப்படி செய்யக் கூடாது என்றால் முன்பு செய்தவர்களின் நிலை என்ன?

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தருக. (மின்னஞ்சல் மூலம் சகோதரர் அப்துல்லாஹ் முஃபீஸ்)
 

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்…

யா அல்லாஹ்! நான்
1. தொழுகையை விட மாட்டேன்.
2. பொய் சொல்ல மாட்டேன்.
3. தீயவற்றைப் பார்க்க மாட்டேன்.
4. இஸ்லாத்திலிருந்து விலக மாட்டேன்
5. இஸ்லாத்துக்காக உழைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விட மாட்டேன்.
 

என்பன போன்ற சத்தியங்களை எல்லாம் உள்ளடக்கியதுதான் "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்; வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ" என்ற உறுதிமொழியாகும்.

ஒவ்வொரு தொழுகை அழைப்பிற்குப் பதில் சொல்லி இறைஞ்சும்போது,

 

"ரழீத்து பில்லாஹி ரப்பன், வ பி முஹம்மதின் ரஸூலன், வ பில் இஸ்லாமி தீனா" (முஸ்லிம்)

 

என்ற உறுதிமொழியையும் சேர்த்தே சொல்கிறோம்.
 

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை (அல்லாஹ்வின்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் இடையேயான பைஅத் என்னும் உறுதிமொழிகளாகும். அல்லாஹ், அவன் அனுப்பிய இறைத்தூதர், இஸ்லாம் ஆகிய மூன்றைத் தவிர "இயக்கம்" என்ற நான்காவதற்கு நம் உறுதிமொழியில் இடமில்லை.

இதில் எந்த இயக்கத்துக்கும் அதன் தலைவர் என்ற மனிதனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. செல்லாத பைஅத்துக்குப் பரிகாரம் ஏதுமில்லை.
 

சரி, அப்படியெனின் முன்பு செய்தவர்களின் நிலை என்ன?


''முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கேட்டான். ''அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்.'' என்று அவர் (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் 020:051,052)

 

முஸ்லிம்களே!
 

முன் செய்தவர்களின் நிலை என்ன? என்று குழம்பி விடாமல் நீங்கள் அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்!


''உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்'' (அல்குர்ஆன் 005:089)
 

(முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)