{mosimage}செனகல் நாட்டின் தலைநகர் தகாரில் கடந்த இரு நாட்களாக (13-14 மார்ச், 2008) நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (Organisation of The Islamic Conference – OIC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் இஸ்லாமோஃபோபியா மிகவும் தீவிரமாகப் பரவி வருவதால் அதனை முறியடிக்க இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்ற முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் முகமாக டேனிஷ் பத்திரிகைகள் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதையும், போப் இஸ்லாம் வன்முறையால் பரவியது எனக் கருத்து வெளியிட்டுக் கடும் கண்டனங்களுக்கு ஆளானதையும், மேலும் பல்வேறு ஊடகங்கள் இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்துவதையும் கவலையோடு அலசிய இம்மாநாடு, இன்னொரு இஸ்லாமியப் புரட்சி நடத்திக் காட்டுவதற்கான வாய்ப்பாக இந்நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தது.
அமைதி என்ற பதத்தைப் பொருளாகக் கொண்ட இஸ்லாத்தின் பெயரால் சிலர் செய்யும் அறிவீனமானப் பயங்கரவாதச் செயல்கள் இஸ்லாத்திற்கு அவப்பெயர் தேடித் தருகிறது என்ற கருத்தைத் தெரிவித்த மாநாட்டுத் தலைவர்கள், இவற்றை இஸ்லாமிய அரசுகள் ஒடுக்க வேண்டும் என்றும் இஸ்லாத்தின் அமைதிச் செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தீர்மானித்தன.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சிலர் நடத்தும் இஸ்லாத்தையும் இறைத்தூதர் அவர்களையும் இழிவுபடுத்தும் செயல்களை மேற்குலகு அனுமதிக்கக்கூடாது என்ற வேண்டுகோளையும் இம்மாநாடு முன்வைத்தது.