திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.


இஸ்லாம் என்பது உலகளாவிய வாழ்க்கை நெறி – மார்க்கம் – என்பதைஉம்மத்தன் வாஹிதா – ஒருங்கிணைந்த இஸ்லாமிய உலகம்என்று குறிப்பிடப் படுகிறது. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப் பட்ட (சமுதாயங்களுள்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டு விலக்குகிறீர்கள் (அல்குர் ஆன் 3 :110).


1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் சிலை வணக்கம் செய்பவர்களாகவும் தனிமனிதனை வணங்குபவர்களாகவும் கொலைவெறி பிடித்தவர்களாகவும் அநாதைகளின் சொத்தையும் வட்டியையும் உண்பவர்களாகவும் பெண்களை இழிவுபடுத்துபவர்களாகவும் தீயொழுக்கமுடையோர்களாக, சீர்கெட்ட நிலையில் இருந்தனர். இதற்குக் காரணம் அறியாமையும் சரியான வழிகாட்டுதலும் இல்லாததே.

அந்தச் சீர்கெட்ட சமுதாயத்தைச் சீர்படுத்த அவர்களிலிருந்தே ஒரு நபியை – ரசூல் (ஸல்) அவர்களை – முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவும் அவர்கள் மூலமாக திருமறையாம்குர்ஆனை‘(சட்ட புத்தகத்தை)யும் இறைவன் அருளினான். திருக்குர்ஆனிலுள்ள அனைத்துச் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மக்களின் ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையில் வெற்றிகண்ட சமுதாயம் தான்திருக்குர்ஆனிய சமுதாயம்அதாவதுதலை சிறந்த சமுதாயம்” (The best community).

ஆன்மீக வாழ்க்கை:


பல தெய்வங்களையும் சிலைகளையும், தனி மனிதனையும் வணங்கியவர்கள் அவற்றை விட்டுவிட்டுஓர் இறைக் கொள்கையை ஏற்றனர்.

1. “லாயிலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்என்ற கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதை ஏற்றுக் கொண்டனர்.
2.
தொழுகையைத் தவறாது நிறைவேற்றினர்.
3.
ரமளானில் நோன்பு நோற்றனர்.
4.
ஜக்காத் கொடுப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தனர்.
5.
ஹஜ் செய்தனர்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை ஏற்று ஈமானில் உறுதியாக இருந்தனர். தனி மனித வழிபாட்டைத் தரைமட்டமாக்கிய நமதுதிருமறைச் சமுதாயம்“. ஓர் அரசனுக்கு சிரம்பணிதல் என்ன? அவனுக்கு எழுந்து கூட நிற்கக்கூடாது என்று திருமறை கட்டளையிட்டபடி ஏற்று நடந்தது திருமறைச் சமுதாயம்.

சமூக வாழ்க்கை:


மது அருந்தத் தடை வந்த போது, அடியோடு விட்டொழித்து இறைவன் கட்டளையை ஏற்று நடந்தனர். திருக்குர்ஆனிய சமுதாயமே இன்று மதுவை அடியோடு ஒழித்து,அதை அருந்தாத மிகப் பெரிய சமுதாயமாக உலகில் திகழ்கிறது. விபச்சாரத்தில் ஈடுபடுவதை பேரின்பமாகக் கருதியவர்கள் அதை அடியோடு விட்டுவிட்டு, பெண்களைப் பெரிதும் மதிக்கக் கூடியவர்களாகவும் பாதுகாப்பாளர்களாகவும் மாறிவிட்டனர்.

குர்ஆன் பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது. பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் அரபியர்களின் போக்கை அழித்து, குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு வழங்கியது. பெண்களுக்குப் பாதுகாப்பான (ஹிஜாப்) ஆடை வழங்கி அவர்களை கௌரவித்தது.

மற்றவர்கள் பொருளைக் கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள் ஜக்காத், சதக்கா போன்றவற்றை வாரி வழங்கி ஏழைகளுக்கும் தேவை என்று வந்தவர்களுக்கும் உதவுபவர்களாக மாறிவிட்டனர். தமக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு வழங்கி இன்பம் கண்டனர். அடிமைகளை விடுவித்து அவர்களை உற்ற சகோதரர்களாக நடத்தினர். குலம் கோத்திர ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்ந்தவர்கள், இறைவன் முன் அனைவரும் சமம் என்று தோளோடு தோள் சேர்த்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


தீண்டாமை குல வேற்றுமையின் உச்சத்திலிருந்த மக்களின் தீண்டாமைப் பண்பை வேரோடு அறுத்து, சாதி, குலம், நிறம்,மொழி, இனம், தேசம் போன்றவற்றால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயமே நமது திருமறைச் சமுதாயம். நபி(ஸல்) அவர்களின் தலைமையில் சட்ட புத்தகமாம் குர்ஆனைப் பின்பற்றி சமூக ஒற்றுமையுடன் பலதுறைகளில் வளர்ச்சிப் பாதையில் செல்ல திருமறைச் சமுதாயம் உறுதுணையாக இருந்தது.

குடும்ப வாழ்க்கை:


அன்பான, அமைதியான,ஆடம்பரமற்ற அறநெறி வாழ்கையே குர்ஆனிய சமுதாயத்தின் குடும்ப வாழ்க்கை. உறவினர்களைப் பேணுதல், அண்டைவீட்டாருடன் பெருந்தன்மயாக நடந்து கொள்ளல், வந்தவர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளல்,பெரியவர்களை மதித்தல், கோள்,புறம், அவதூறு, பொய் ஆகியவற்றைத் தவிர்த்து, தீமையை ஒழித்து, அன்பு, ஒழுக்கம் பேணி மேன்மையாக வாழ வழிகாட்டுகிறது நமது திருமறை. ஒவ்வொரு உறவிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து சீரான சிறந்த வாழ்கை வாழ்வதே நமது திருமறைச் சமுதாயம்.

பொருளாதார வாழ்க்கை:


வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி திருமறை கூறியபடி வட்டியில்லா நிதிமுறையை பின்பற்றி வாழ்ந்தனர் திருமறைச் சமுதாயத்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற நியாயமான முறையில் பொருள் தேடினர். சரியான அளவு நிறுவையில், ஒளிவு மறைவின்றி மோசடியற்ற தொழில் செய்தனர். தானதர்மங்கள் செய்து கலப்பற்ற தூய்மையான பொருளாதார வாழ்க்கையை பின்பற்றினர் திருமறைச் சமுதாயத்தினர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் திருமறை ஒரே சட்டத்தையே வழங்கியுள்ளது. நமது தூதர் நபி(ஸல்) அவர்களும் சட்டத்தில் பாகுபாடு காட்டுவதை எள்ளளவும் அனுமதிக்கவில்லை. சம நீதி, சம உரிமை, தண்டனைகள், நிர்வாகம், ஒழுங்கு, கட்டுப்பாடு, யுத்தம், சமாதானம், ஒப்பந்தம்,முஸ்லிம் அல்லாதோர் பாதுகாப்பு அனைத்தும் ஷரீயத்திற்கு உட்பட்டது. மேலே கூறிய அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்பட்டதே திருமறைச் சமுதாயம்.

இவ்வுலக வாழ்விற்காக பகலில் உழைத்து, ஐவேளைத் தொழுகைகளைக் கடைபிடித்து, இரவில் அதிகம் இறைவனை நினைவு கூர்ந்து, மறுமை வாழ்விற்காக உழைத்து, இறைவனின் அருள் சேர்ப்பதற்காக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்தான் திருமறைச் சமுதாயத்தார்.

சம நிலைக் கொள்கை, தனித்தன்மையான பண்பு, ஒருங்கிணைந்த நோக்கு, சிறந்த சிந்தனை, சமத்துவம், சிறந்த தரம், நற்போதனைகள் அனைத்தும் திருமறைச் சமுதாயத்தின் அடையாளங்களாகும். மார்க்கம், சமுதாயம் ஆகிய இரட்டைப் பண்புகளைக் கொண்ட, ஆண்டவனால் வடிவமைக்கப் பட்ட, நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிய, தனது மதிப்பற்ற கொள்கை கோட்பாடுகளால் உலகின் அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க வெற்றிகண்டு உலகம் முழுவதும் பரவி நிற்கும் மிகப் பெரிய சமுதாயமே நமது திருக் குர்ஆன் உருவாக்கியதிருமறைச் சமுதாயம்அது, “தலை சிறந்த முதன்மையான சமுதாயம்“.


ஆக்கம்: சகோதரி சாராபேகம் எம்.ஏ


2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரி சாரா பேகம் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்


2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.