இஸ்ரேலைத் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் – ஐநா பலஸ்தீனத் தூதர்

ஐக்கிய நாடுகள் சபை: பலஸ்தீன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச ஒழுங்குகளுக்கு எதிராக சட்ட விரோதமாக ஆக்ரமித்துக் கொடூரமாக பொதுமக்களை கொலை செய்வதைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலைத் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் பிரதிநிதி ரியாத் மன்சூர் கோரிக்கை வைத்தார்.

நேற்று பலஸ்தீனின் காஸா பகுதியில் 18 அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் கூட்டமாகக் கொலை செய்ததைக் குறித்து விவாதம் செய்ய அவசரமாக கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் பொழுது மன்சூர் இவ்வாறு கோரினார்.

"மரணமும், கலகங்களும் காஸா பகுதி மக்களுக்கு நாள்தோறும் வாழ்க்கையின் அங்கங்களாக மாறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் தெளிவாக, யுத்த விதி முறைகளை மீறி அநியாயமாக மனிதத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. சர்வதேசநீதிமன்றத்தில் உலகசட்டதிட்டங்களின் முன்னிலையில் அவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்" என்று மன்சூர் தொடர்ந்து பேசினார்.

அதே நேரம் காஸாவிலுள்ள பைத் ஹனூனில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்த தவறு என இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் பைத் ஹனூனில் நடத்திய கொலைகளைக் குறித்து உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் என அரபு லீக், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC, அணிசேரா நாடுகள் போன்றவை கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு சபை இதனைக் குறித்து சர்ச்சை செய்யக் கூடியது.

காஸாவில் உடனடியாக துப்பாக்கிச்சூடு நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அதனைக் கண்காணிக்க ஐநா பாதுகாப்புப்படையை அங்கு நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கோரிக்கை வைத்தது. இதற்கிடையில், இஸ்ரேலின் அக்கிரமங்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்ற வைக்கப்பட்டிருந்த தீர்மானத்தில் சில மாற்றங்கள் செய்வதற்காக அது மாற்றி வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எப்பொழுதும் போல் அமெரிக்கா வீட்டோ செய்யும் என்று கருதப்படுகிறது. இஸ்ரேலின் அநியாயங்களை கண்டிக்கும் ஐநா தீர்மானங்கள் அனைத்தையும் எல்லா நேரங்களிலும் அமெரிக்கா வீட்டோ செய்து இஸ்ரேல் செய்யும் அக்கிரமங்களுக்கு துணையாக இருந்து கொண்டே வந்துள்ளது.

இஸ்ரேல் காஸா பகுதியில் 18 அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொலை செய்த செயலை சவூதி அரேபியா, கத்தர், பஹ்ரைன் போன்ற வளைகுடா அரபு நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. பலஸ்தீனின் தற்போதைய நிலையைக் குறித்து சர்ச்சை செய்ய வரும் நவம்பர் 18 அன்று OIC இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூடுகின்றது.

இதற்கிடையில் பலஸ்தீனுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய பொருளாதாரத் தடையை நீக்குவதற்கு தயார் எனில் பிரதமர் பதவியைத் துறக்கவும் தான் தயார் என பலஸ்தீன மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. இஸ்மாயில் ஹனியா அறிவித்திருக்கிறார்.