அமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு!

1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக வரலாற்றில் முதன்முறையாக செறிவு நீக்கிய யுரேனிய (Depleted Uranium) குண்டுகளைப் போர்க்களத்தில் படைகளின் மீதும் இராக்-குவைத் எல்லையில் இருந்த பொதுமக்கள் மீதும் சரமாரியாக வீசின. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடையே புற்றுநோய் மிகப்பரவலாக உள்ளது.

செறிவு நீக்கப்பட்ட யுரேனியத்தால் எவ்வாறு கேடு விளைகிறது என்பதை அறிய அது குறித்த ஒரு சிறு விளக்கம் காண்போம். இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் கதிரியக்கம் கொண்டது. இவற்றில்  யுரேனியம்-235 மற்றும் யுரேனியம்-238 எனும் இரு ஐசோடோப்புகள் உள்ளன. ஐசோடோப்புகள் என்பது ஒரே அணுஎண்ணும் மாறுபட்ட அணுநிறையும் கொண்ட ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுவடிவங்கள். பொதுவாகவே ஐசோடோப்புகள் கதிரியக்கத் தன்மை கொண்டவை.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத் தாதுவைச் சுத்திகரித்து, யுரேனியம்-235 மட்டுமே இருக்குமாறு யுரேனியம்-238 பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கும் முறைக்குச் செறிவூட்டல் என்று பெயர். யுரேனியம்-235 என்னும் தனிமத்தை அணுகுண்டு தயாரிப்பதற்கோ, அணுமின்சாரம் உற்பத்தி செய்யவோ உலகநாடுகள் பயன்படுத்துகின்றன. பிரித்தெடுக்கப்பட்டவுடன் மிஞ்சும் கழிவான யுரேனியம்-238 தனிமம் சரியான முறையில் களையப்பட வேண்டும். சில நாடுகள் கடலுக்கடியில் ஆழ்துளையிட்டு அதில் இக்கழிவுகளைப் புதைக்கின்றன.

இந்த யுரேனியம்-238 மிக உறுதியான உலோகமாகும். போர்முனைகளில் இவற்றை முனைகளில் தாங்கிய ஏவுகணைகள் தாக்கும் போது ஏற்படும் கடும் அழுத்தத்தால் பல உறுதியான நிலத்தடி அரண்கள் (Underground Bunkers)கூட தகர்க்கப்படுகின்றன. US இதனைச் சிறிய அளவு அணுஆயுதத்துடன் பயன்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்படாத ஒரு தகவலாகும்.

இந்த யுரேனியம்-238 ஏவுகணைகள் வெடித்துச் சிதறும் போது ஏற்படும் கடும் வெப்பத்தால், சிறுசிறு துகள்களாகி காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் கலந்து யுரேனியம் ஆக்ஸைடு பொடியாக மாறிக் காற்றில் பரவுகிறது. இந்தத் துகள்கள் மிக லேசாக இருப்பதால், போர்க்களத்திலிருந்து வெகுதூரம் வரைக் காற்றில் மிதந்து பயணிக்க வல்லவை. இவற்றின் கதிரியக்கம் ஆல்ஃபா மற்றும் பீட்டா கதிர்களை உமிழ்கிறது. இவை மனிதர்கள் வசிக்கும் இடங்களை அடையும் போது அவற்றைச் சுவாசிக்கும் மனிதர்களுக்கு முதலில் கடும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நுரையீரலை அடைந்த இத்துகள்கள் சிறிது சிறிதாக இரத்தத்தில் கலந்து நிணநீர் (lymph) மண்டலத்தைத் தாக்குவதுடன், எலும்பு மஜ்ஜையை (bone-marrow) அடைந்து லுக்கேமியா எனும் இரத்தப்புற்று நோய்க்கும், சிறுநீரகப் புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது.

யுரேனியத்தின் அரைவாழ்வுக்காலம் 760 மில்லியன் ஆண்டுகள். அதாவது 10 கிராம் யுரேனியம் கதிரியக்கத்தால் தன் எடையை இழந்து 5 கிராம் ஆவதற்கு 760 மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற வளைகுடாப்போரில் US மற்றும் அதன் நேச நாடுகள் கிட்டத்தட்ட 9,40,000 குண்டுகளை வீசின எனவும் இவற்றில் இருந்த யுரேனியத்தின் எடை சுமார் 3,20,000 டன்கள் எனவும் நம்பப்படுகிறது. இதன்மூலம் போர் நிகழ்ந்த இராக் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்றும் இனி வரும் காலங்களிலும் நிலவும் பேரபாயத்தைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

1991ஆம் ஆண்டு முதல் இராக்கில் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்குறியீடுகள் கிட்டத்தட்ட பத்து மடங்கும் பிறவிக் குறைபாடுகள் ஐந்து மடங்கும் அதிகரித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்த ஆய்வுக்குக் கோரிய முயற்சிக்கு US முட்டுக்கட்டை போடுவதோடு இதற்குத் தாங்கள் வீசிய குண்டுகள் தான் காரணம் என்பதையும் மறுத்துள்ளது.

தற்போது லெபனான் மீது தொடுத்த போரிலும் இஸ்ரேல் செறிவு நீக்கிய யுரேனிய ஏவுகணைகளை வீசியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.