சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 13 மணிநேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிறு (15/4/2007) அதிகாலை 02.30 மணிக்கு BA-143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை இயக்க மறுக்கிறார் என்று தெரியவந்தது.

என்ன காரணத்தால் அவர் இயக்க மறுக்கிறார் என்று விசாரித்தபோது அவர் சரியான தூக்கமின்மையைக் காரணமாகச் சொன்னார். முந்தைய இரவு அவர் தங்கி இருந்த விடுதியில் இரைச்சலாக இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், சரியான தூக்கம் இல்லாமல் விமானத்தை இயக்க முடியாது என்றும் சொல்லி விட்டதாக தெரியவந்தது.

ஒரு விமானத்தை இயக்க முதன்மை விமானி தவிர இன்னொருவரும் இருப்பார். ஆனால் ஒட்டு மொத்த விமானப் பணியாளர்களும் உறக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது வியப்புக்குரியது.

இதனால் வேறு வழியின்றி அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். அதற்கு பதில் வேறு விமானமும் ஏற்பாடு செய்யப்படாததால் அதே விமானம் கிட்டத்தட்ட 13 மணிநேரத் தாமதத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது. இது பற்றி பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி ராதிகா ரெய்சி கூறுகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் பாதுகாப்பு முறைப்படி, பாதுகாப்பை கருத்தில்கொண்டு இம்மாதிரியான நேரங்களில் விமானியை விமானம் ஓட்ட அனுமதிப்பதில்லை என்றார்.

இருப்பினும், அதிக அளவு மது உட்கொண்டு போதை தெளியாததாலாயே விமானி விமானத்தை இயக்க அனுமதிக்கப்படவில்லை என்று இந்தோ ஏசியன் செய்திச் சேவை கூறுகிறது. பன்னாட்டு பயணியர் வான் போக்குவரத்துக் கழக (ICAO) விதிகள் குடிபோதையில் விமானிகள் விமானத்தைச் செலுத்த அனுமதிப்பதில்லை.