திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-3)

பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை!” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட வில்லை! ஆணும் பெண்ணும் உணர்வால் சமமானவர்கள்! உடலால் வெவ்வேறானவர்கள் என்று சமத்துவத்தை அறிவுப்பூர்வமாக அணுகிய மார்க்கம் இஸ்லாம்!

“……கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு…..”(அல்குர்ஆன் 2:228)

என பெண்களுக்கு ஆன்மா என ஒன்று உண்டு என்பதையே ஏற்றுக் கொள்ளத் தயங்கி அவர்களை மனிதப் பிறவியாகவே மதிக்காத காலகட்டத்தில் பெண்ணுரிமையை உலகிற்கு பிரகடனப்படுத்தியது இஸ்லாம்.

இந்த உரிமைப்பிரகடனம் நடத்தப்பட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்த பின்னரும், பெண்களின் மீதான தாக்குதலும், அவர்களின் உரிமைகளை கபளீகரம் செய்வதும் இன்று சர்வசாதாரணமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இன்றும் பெண் விடுதலைக்காக ஒருபுறம் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பல்வேறு தரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் பெண் விடுதலை என்ற முழக்கத்தோடு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் தலைமையில் ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றது. சென்றவாரம் சென்னை காட்டாங்குளத்தூரிலுள்ள SRM இஞ்சினியரிங் கல்லூரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு கனிமொழி பேசிய பேச்சு இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

Related imageசென்னை, ஏப். 3: தமிழகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய ஆண்களிடம் பெண்கள் வரதட்சிணை கேட்கும் நிலை ஏற்படும் என கவிஞர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியது:

 

உலகில் ஆண்களை விட பெண்கள் 4 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறார்கள். இருப்பினும் சொத்துகளில் 1 சதவீதம் மட்டுமே பெண்களின் பெயரில் உள்ளன. இந்த வேறுபாடு மறைய வேண்டும் என்றால் சமூகத்தில் பெண்களின் நிலை மேம்பட வேண்டும்.

 

மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் இவ்வாறு பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். திருமணத்துக்கு ஆண்களிடம் பெண்கள் வரதட்சிணை வாங்கும் நிலை ஏற்படலாம். குழந்தைகள் இறப்பதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அபாயகரமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும்.

 

சமூகத்தில் பெண்களுக்கு உள்ள உரிமைகளை கற்பிப்பதே உண்மையான பெண் கல்வியாக இருக்கும். பெண்களின் நிலை மேம்பட வேண்டும் என்பது ஆண்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070402144733&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

 

வரதட்சணை எனும் மிகப்பெரிய கொடுமை சமூகத்தில் தலை விரித்தாடுவதையும், அதனால் பெண் சமுதாயத்தின் மீது அநியாயம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால சூழலில் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி கனிமொழியின் எதிர்பார்ப்பு இப்பேச்சில் வெளிப்பட்டிருக்கின்றது.

திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஒரு பெண்ணை ஓர் ஆண் கைப்பிடிக்க வேண்டுமெனில் பெண் பக்கமிருந்து கொட்டப்ப்பட வேண்டிய இலட்சங்களே இன்றைய பெண் சமூகத்தின் மீது நடத்தப்படும் கொடுமைகளில் பெரிய பங்கு வகிக்கின்றது. இதனை உணர்ந்தே அதற்கு எதிரான ஓர் நிலைக்கு இங்கு கனிமொழி கனவு காண்கின்றார்.

ஆனால் இஸ்லாம் இதனை 1400 வருடங்களுக்கு முன்பே சட்டமாக கூறி நடைமுறைப் படுத்தியுள்ளதை அனைவரும் வசதியாக மறந்து விடுகின்றனர். அல்லது சமூகத்தில் அது மறைக்கப் படுகின்றது.

பெண்ணென்பவள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் எந்திரம், போகப்பொருள், ஆண்களின் பாலியல் வடிகால் என்ற நிலைகளை மாற்றி, திருமணம் அல்லாத எந்த உறவின் மூலமும் அவளின் பெண்மையை அனுபவிக்கும் உரிமை இல்லை என்றது மட்டுமின்றி மஹர் என்ற மணக் கொடையை ஆண்கள் பெண்களுக்கு அவர்கள் கேட்கும் அளவிற்கு வழங்கி ஈடுகட்டச் சொல்லும் எதார்த்தமான மார்க்கம் இஸ்லாம்!

“நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.” (அல்குர்ஆன் 004:004)

என்று பெண்மையை இஸ்லாம் மேன்மை படுத்துகிறது!

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பலாத்காரத்திற்கு இஸ்லாம் வழங்கும் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமூகம், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனையே சரியான தீர்வு என்ற நிலைக்கு வந்துள்ளது.

இதனைப்போன்றே, பெண்களை திருமணம் புரிய ஆண்கள் வரதட்சணை(மஹர்) கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் நடக்கும் எனக் கனவு காணும் கனிமொழி போன்றவர்களின் காலம்தாழ்ந்த எண்ணங்களுக்கேற்ப 1400 வருடங்களுக்கு முன்பே அதனை இஸ்லாம் சட்டமாக வகுத்து வைத்தது அது ஒரு வாழ்க்கை நெறி தான் என்பதற்கான மற்றுமோர் தெளிவான சான்றாகும்.

இப்படியாகப் பெண்களின் அவலநிலையை குறுகிய காலத்தில் முற்றிலும் மாற்றி உயர்வடையச் செய்த இஸ்லாமிய வழிகாட்டல்கள் எக்காலத்திற்கும் மனித வாழ்விற்குப் பொருத்தமானதே என்பதை சமூகம் விரைவில் கண்டு கொள்ளும்.

– N.  ஜமாலுத்தீன்