அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்!

இந்தியாவின் 'அக்னி-3' ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஆசியப் பகுதியின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நம்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

அக்னி-3 ஏவுகணை சோதனையை, இந்தியா நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் மிரட்டல் தொனியுடன் கூடிய கருத்து தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை செய்யும் போது, இது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆசிய நாடுகள் இடையே ஒப்பந்தம் உள்ளது. பாக்., இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்தியா நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பாக பாகிஸ்தானுக்கோ, பிறநாடுகளுக்கோ தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதே போல, இந்த ஏவுகணையின் தன்மை குறித்தும் தகவல்கள் இல்லை.

ஆசிய நாடுகளின் ஒப்பந்தங்களையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா, பாக்., உள்ளிட்ட எல்லா நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தும்.

அணு குண்டு உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை இந்தியாவும் நிச்சயமாக கடைப்பிடிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.

இதற்கிடையே இந்தியாவுடனான அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான அமெரிக்காவின் ஒப்பந்தம் முறிவு பெறும் என தன் பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்த வரை இந்தியா பேராசை பிடித்த நாடாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் தொடர இயலாது. எனவே இது விரைவில் முறிக்கப்பெறும் என்று அவர் கூறினார்.

அக்னி-3 சோதனை வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் 'இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளது. அணுஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியும் அமெரிக்கா செய்யக்கூடாது; அதி தொலைவு வரை அணுஆயுதத்தைத் தாங்கிச் சென்று தாக்கவல்ல ஏவுகணைச் சோதனை மூலம் இந்தியா தன் அணுஆயுத நோக்கை நன்கு வெளிக்காட்டியுள்ளது' என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.