ஷரியா சட்டக்கூறுகள் தென் தாய்லாந்தில் அறிமுகம்

தென் தாய்லாந்தில் நிலவிவரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அப்பகுதியில் இஸ்லாமிய ஷரியா சட்டக் கூறுகளை நடைமுறைப் படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் புரட்சி மூலம் ஆட்சி அமைந்தபின் பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. சரயூத் சுலனோந்த், தென் தாய்லாந்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் யாலா, நராத்திவாத் மற்றும் பட்டானி மாகாணங்களில் இஸ்லாமிய ஷரியா சட்டக்கூறுகளை அறிமுகப்படுத்தப் போவதாய் கூறியுள்ளார்.

உலகின் பல முஸ்லிம் நாடுகளிலிருக்கும் தாய்லாந்தின் தூதர்களிடையே பாங்காக்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், நம்பகமான நீதித்துறையை நிறுவும் நோக்கில், இஸ்லாமிய ஷரியா கூறுகளை உள்ளடக்கிய நீதி அமைப்பை நிறுவுவதில் தமது அரசு முனைப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே மணமுறிவு உள்ளிட்ட உரிமையியல் விவகாரங்களில் ஷரியாவின் பல கூறுகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், மேலும் பலவற்றை முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அறிமுகப்படுத்துவதைக் குறித்து குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

தாய்லாந்தின் தென்பகுதியில் நடக்கும் கிளர்ச்சி சர்வதேசப் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டுள்ளது எனும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்த போதிலும், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் இஸ்லாத்தின் பெயரைத் தவறாக மக்களிடையே பயன்படுத்தி ஆதரவு தேடி வருவதாகக் கூறினார்.

இதுவரை கிட்டத்தட்ட 1800 அப்பாவி மக்களைப் பலி கொண்டுள்ள தென் தாய்லாந்துக் கிளர்ச்சியை ஒடுக்க முந்தைய அரசு மனிதத் தன்மையற்ற முறையில் கொடூரமாக நடந்து கொண்டது. இதனால் அரசு மீதான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கவே செய்தது. ஆனால் தற்போது புதிய அரசு பதவியேற்ற பின் அந்நாட்டின் பிரதமர் மன்னிப்புக் கேட்டு நல்லெண்ண நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.

தற்போது சாதாரணக் குடிமக்களைத் துன்புறுத்தாமல் கிளர்ச்சி செய்வோரைக் கண்டறிய தமது அரசு முயலும் என்று அவர் உறுதியளித்தார். எனினும் நல்லெண்ண நடவடிக்கைகளை உதாசீனப் படுத்தி குழப்பங்களும் உயிரிழப்பும் விளைவிக்க எண்ணுவோர் மீது சட்டம் கடுமையாகப் பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி அனுதாபம் தேடும் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தவே தற்போது ஷரியா சட்டக்கூறுகளை அவர் பயன்படுத்த உள்ளார் எனத் தெரிகிறது.