கத்தரில் நடைபெற்ற ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்!

தோஹா: தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (Indo Qatar Islamic Council) இணைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று (21-04-2015) மாலை தோஹா – கத்தரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊடகத்துறையில் ஆர்வமுடையோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜெ.எஸ் ரிஃபாயீ மற்றும் த.மு.மு.க செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சமூக மேம்பாட்டில் ஊடகங்களின் கடமை, ஊடகங்களில் மக்களின் பங்கு தொடர்பான தலைப்புகளில் விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் ஊடகப் பேரவை கடந்த 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை, ஆற்றியுள்ள பணிகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை தொகுத்து அளிக்கப்பட்டன.

ஏழை எளியோருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை அளிக்கும் வட்டியில்லா பொருளாதாரத் திட்டமான “ஜனசேவா” பற்றிய அறிமுக உரை நிகழ்ச்சியினூடே நிகழ்த்தப்பட்டது.

உரைகளைத் தொடர்ந்து கேள்வி-பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியுடன் கருத்தரங்கம் சிறப்பாக நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டோரிடம் காணப்பட்ட உற்சாகமும், வரவேற்பும் நேர்மையான மாற்று ஊடகத்தின் அவசியத்தையும் பறைசாற்றியது.

தமிழ் ஊடகப் பேரவை (TMF) சார்பாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு மற்றும் குறும்படங்கள் வெளியிடும் நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்