ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஹிந்துப் பெண்மணி

அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றிருக்கும் பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார். 40 வயதான இந்தப் பெண்மணி சங் பரிவார அமைப்புகளின் வெளிநாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குஜராத் நிலநடுக்க நிவாரண நிதி திரட்டியபோது அதன் தேசிய ஒருங்கிணைப்பாளராக இவர் செயல்பட்டிருக்கிறார்.

 

சோனாலின் தந்தை ரமேஷ் ஷா, ‘பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள்‘ (Overseas Friends of the Bharatiya Janata Party – OFBJP) என்ற அமைப்பில் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். 2004 பாராளுமன்றத் தேர்தலின்போது அத்வானிக்காக காந்தி நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டிருந்தார். நாடெங்கிலும் கலவரங்களை விதைத்துச் சென்ற அத்வானியின் ர(த்)த யாத்திரையிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

 

சோனாலின் சகோதரர் அமித், சகோதரி ரூபால் ஆகியோர் தற்போது அஹமதாபாத்தில்இண்டிகார்ப்ஸ்என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். ‘இந்தியாவின் மிக முக்கியமான சவால்களை முன்னணியில் நின்று எதிர்கொள்ளத் திறமைமிக்க இந்திய இளைஞர்களைத் தயார்படுத்துவதுதான் இந்தச் சேவை அமைப்பின் நோக்கம் என அதன் இணையத் தளம் அறிவிக்கிறது. இந்துத்துவ, சங்பரிவார அமைப்புகள் அப்பாவி இந்து இளைஞர்களை எதற்கு தயார்படுத்துகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகும்.

 

இண்டிகார்ப்ஸ்அமைப்பு பற்றி ஒரு நாளிதழின் நிருபர் பேட்டிக்காகச் சென்றபோது, சோனாலின் சகோதரர் அமித், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவிற்கு திரும்பினேன்என்று சொல்ல ஆரம்பித்து, அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டார். அவரது சகோதரி ரூபாலும் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. “எதுவாக இருந்தாலும் சோனாலை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள் என்று பட்டென்று பேச்சை முறித்துக் கொண்டார்.

 

இண்டிகார்ப்ஸ் நிறுவனத்தின் தொண்டூழியர்களும் அந்த அமைப்புப் பற்றி யாருடனும் எதுவும் பேசக்கூடாது என அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒரு சேவை நிறுவனத்தின் செயல்பாடுகளில் இத்தனை ஒளிவுமறைவுகள் இருப்பது பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை விளைவிப்பதாக இருக்கிறது.

 

சங்பரிவார அமைப்புகளின் உலகளாவிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆர்எஸ்எஸ் மூத்தத் தொண்டர் ஒருவர், சோனாலின் தந்தை ரமேஷ் மட்டுமே பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்று தெரிவித்தார். “அவர் OFBJP அமைப்பில் பணியாற்றினார். மேலும் ஏகல் வித்யாலயா போன்ற திட்டங்களுக்கும் ஆதரவளித்தார்என்று அந்தத் தொண்டர் தெரிவித்தார். ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில்  ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

 

ரமேஷ் ஷாவின் குடும்பம் குஜராத் மாநிலத்தில் சபர்கந்தா என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால் சோனால் ஷா மும்பையில் பிறந்தவர். ரமேஷ் ஷா 1970இல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவரின் மனைவியும் மகள்கள் சோனால், ரூபால் ஆகியோரும் நியூயார்க் சென்று அவருடன் இணைந்து கொண்டனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் ஹூஸ்டன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். சோனால் கோல்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும், பிறகு அமெரிக்க நிதியமைச்சகத்திலும் பணியாற்றியிருக்கிறார். அவர் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

வி.ஹெச்.பி. அமெரிக்கா (VHPA)வின் ஊடகச் செயலர் ஷ்யாம் திவாரியிடம் சோனாலைக் குறித்து சண்டே எக்ஸ்ப்ரஸ் நிருபர் கேட்டபோது, “அவர் அமெரிக்காவில் இயங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்தான். ஆனால் அவரது உறுப்பினர் கார்டு புதுப்பிக்கப் படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். பிரச்சினை என்று வந்தால், “அவர் இப்போது எங்களவர் இல்லை” என்று சொல்லிச் சமாளிப்பது சங் பரிவாருக்குப் புதிதல்ல என்பது 1948 நாதுராம் கோட்சேயிலிருந்து 2008 ப்ராக்யா சிங் வரை அறுபது ஆண்டு காலமாக உறுதி செய்யப் பட்ட பரிவாரின் நடைமுறை உத்தியே என்பது மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்தான்.

-oOo-

தகவல் : ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்

தழுவல் : சலாஹுத்தீன்