நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டு விட்டது. ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜைஸ் வங்கி (Jaiz Bank plc) தனது மூன்று கிளைகளுடன் நைஜீரிய மக்களுக்கு வட்டியில்லா வங்கிச் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இது ஒன்றும் இலகுவாக நடந்து விடவில்லை. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவிடாத போராட்டங்களின் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பலவிதமான சவால்கள், எதிர்ப்புகள் மற்றும் ஊடகங்களின் எதிர்மறைப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை இஸ்லாமிய வங்கித் தரப்பு சந்தித்துள்ளது.
முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் பெருமளவில் வாழ்ந்து வரும் நாடு நைஜீரியா. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 55% ஆன முஸ்லிம்கள் பெரும்பாலும் நாட்டின் வடபகுதியிலும் 40% ஆன கிருஸ்துவர்கள் பெரும்பாலும் தென்பகுதியிலும் வசிக்கின்றனர். எஞ்சிய 5% நாத்திகர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்னைகள் இருந்தபோதிலும் பொதுவாக எல்லாத் தரப்பினரும் நல்லிணக்கத்துடனே வாழ்கின்றனர்.
2003 ஏப்ரலில் ஜைஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் ஒரு முதலீட்டு நிறுவனம் நைஜீரியாவில் பதிவு செய்யப்பட்டது. ஒரு இஸ்லாமிய வங்கியைத் துவக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அப்போது நைஜீரியாவில் ஒரு வங்கியைத் துவக்குவதற்குக் குறைந்த பட்ச முதலீடாக 2 பில்லியன் நைரா (சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தேவைப்படும். ஜைஸ் வங்கி நிறுவனர்கள் இந்த முதலீட்டைத் திரட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்று நைஜீரிய பங்குச் சந்தையை அனுகினார்கள். இஸ்லாமிய வங்கித் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முன்வந்தனர். விரைவிலேயே போதுமானத் தொகையைச் சேகரித்த ஜைஸ் வங்கியினர் 2004ஆம் ஆண்டில் வங்கியைத் துவக்கத் தயாராகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒரு பெரும் சவாலைச் சந்திக்க நேர்ந்தது.
நைஜீரிய மத்திய வங்கி, வங்கிகளுக்கான விதிமுறைகளைச் சீர்திருத்திப் புதிய விதிமுறைகளை அறிமுகப் படுத்தியது. அதன்படி வங்கிகளைத் துவக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச முதலீடு 12 மடங்கிற்கு மேல் அதிகரிக்கப்பட்டு 25 பில்லியன் நைரா (சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என அறிவிக்கப்பட்டது. மனம் தளராத ஜைஸ் வங்கி நிர்வாகத்தினர் மீண்டும் 2006இல் பங்குச் சந்தைக்குச் சென்றனர். இந்த முறை தேவையானத் தொகையைத் திரட்ட சிறிது காலம் பிடித்தது.
ஜூன் 2009இல் நைஜீரிய மத்திய வங்கியின் ஆளுநராக சனுசி லமிடோ நியமிக்கப்பட்டார். இவர் வங்கித்துறையில் பழுத்த அனுபவமுடையவர். உலக அளவில் பல விருதுகளைப் பெற்றவர். கடந்த ஆண்டு டைம்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருந்த ‘உலகின் அதிக செல்வாக்கு மிக்க முதல் 100 நபர்கள்’ பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. வங்கித்துறை மட்டுமல்லாது ஷரீஆ மற்றும் இஸ்லாமியக் கல்வியிலும் பட்டம் பெற்றவர் சனுசி.
“வட்டி அடிப்படையிலான மரபு வங்கி முறையில் உள்ள கோளாறுகளை சமீபத்திய உலகளாவிய பொருளாதாரச் சரிவு வெளிப்படுத்தி விட்டது. எனவே இஸ்லாமிய வங்கி முறையை ஒரு மாற்றுப் பொருளாதார நடைமுறையாக உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் மூலமே மில்லியன் கணக்கான நைஜீரிய மக்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்” |
சனுசி பதவியேற்ற சில மாதங்களில் ஒரு மாநாட்டில் பேசும்போது இஸ்லாமிய வங்கியியலைப் பற்றி சில கருத்துகளைத் தெரிவித்தார். “வட்டி அடிப்படையிலான மரபு வங்கி முறையில் உள்ள கோளாறுகளை சமீபத்திய உலகளாவிய பொருளாதாரச் சரிவு வெளிப்படுத்தி விட்டது. எனவே இஸ்லாமிய வங்கி முறையை ஒரு மாற்றுப் பொருளாதார நடைமுறையாக உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் மூலமே மில்லியன் கணக்கான நைஜீரிய மக்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்” என்று சொன்ன அவர் நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கிகளை அறிமுகப்படுத்த நைஜீரிய மத்திய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அறிவித்தார்.
மரபுமுறை வங்கிகள் உலக அளவில் பெரும் பிரச்னைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இஸ்லாமிய வங்கிகள் நைஜீரிய மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகின்றன. எனவே நைஜீரியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் அவசியம் தேவை. |
சனுசியின் இந்த அறிவிப்பு நைஜீரியாவில் பெரும் பூகம்பத்தையே தோற்றுவித்தது. நாட்டின் இரண்டாம் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வந்த கிருஸ்துவர்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் சில கிருஸ்துவ அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். பெரும்பான்மையான ஊடகங்களும் இஸ்லாமிய வங்கிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கின. மத்திய வங்கியின் ஆளுநர் முஸ்லிம்களுக்கு மட்டும் சாதகமாக நடந்துகொள்கிறார் எனவும் பிரச்னைக்குத் தூபமிடப்பட்டது. ‘ஜைஸ் வங்கிக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிய வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்யவில்லை என்றால் மத்திய வங்கி மீது வழக்குத் தொடுப்போம்’ என்றும் ஒருங்கிணைந்த கிருஸ்துவ அமைப்புகள் மிரட்டின. அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த நைஜீரிய மத்திய வங்கி ‘மரபுமுறை வங்கிகள் உலக அளவில் பெரும் பிரச்னைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இஸ்லாமிய வங்கிகள் நைஜீரிய மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகின்றன. எனவே நைஜீரியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் அவசியம் தேவை’ என தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.
இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து நைஜீரிய முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டி இஸ்லாமிய வங்கித் திட்டத்திற்கு பக்கபலமாக நின்றனர். அவர்களின் விடாமுயற்சிக்கும் போராட்டத்திற்கும் உரிய பலன் இப்போது கிடைத்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!
உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் நிதி சார்ந்த துறைகளுள் இஸ்லாமிய நிதித்துறையும் ஒன்று. இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் இது எதிர்காலத்தில் ஆண்டிற்கு 15 முதல் 20 சதவீதம்வரை வளர்ச்சி அடையும் வாய்ப்பு இருக்கிறது எனவும் ‘ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ எனும் தணிக்கை நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.
இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறையில் உள்ளன. இந்தியா போன்ற மேலும் பல நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளைத் துவக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நைஜீரிய இஸ்லாமிய வங்கியைப் பற்றிய தகவல் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.
– சலாஹுத்தீன்