குர்ஆன் திரிப்புத் திரைப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு!

குர்ஆன் வசனங்களை பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு படுத்தி நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர் என்பவர் தயாரித்து வெளியிடவிருக்கும் திரைப்படத்தை தடை செய்யக் கோரி நெதர்லாந்து இஸ்லாமிய அமைப்பான The Islamic Federation என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்திரைப்படம் தடை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்க வல்லுனர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளதைப் பற்றி நெதர்லாந்து நீதிமன்றம் இம்மாத இறுதியில் முடிவு செய்யும்.

வில்டர் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் சமீபத்திய பயங்கரவாத நிகழ்வுகளை குர்ஆன் வசனங்களுடன் தொடர்பு படுத்தியிருப்பதாகவும், முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரில் ஒரு உருவப்படத்தை காட்டுவதுடன் அத்திரைப்படம் முடிவுறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்திரைப்படத்தை ஒளிபரப்ப மறுத்து விட்டதால் வில்டர் இதை இணையம் மூலமாக வெளியிடலாம் என்றும் தெரிகிறது.

இத்திரைப்படம் வெளியிடப்பட்டால் உலகெங்கிலுமிருந்து பெரும் எதிர்ப்புகளை அது உருவாக்கும் என்றும் முஸ்லிம் நாடுகளுடனான  நெதர்லாந்தின் உறவுகளை அது கடுமையாகப் பாதிக்கும் என்றும் நெதர்லாந்து அரசு அஞ்சுகிறது.  ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளன. பல முஸ்லிம் நாடுகளில் பொருளங்காடிகள் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டப் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டன.

நெதர்லாந்தின் அரசியல் சாசன சட்டப்படி ஒரு திரைப்படம் வெளியிடப்படுமுன் அதை தடை செய்வது இயலாது என்பதால்  அத்திரைப்படத்தை கைவிடும்படி அரசு வில்டரை கேட்டுக்கொண்டது. நெதர்லாந்தின் நீதித்துறை அமைச்சரும் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் வில்டரை சந்தித்து இத்திரைப்படத்தினால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெதர்லாந்து சந்திக்க நேரும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.  ஆனால் அரசாங்கத்தின் இந்த முயற்சி பலனளிக்காததால் ‘இத்திரைப்படத்திற்கும் நெதர்லாந்து அரசாங்கக் கொள்கைகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை’ என அரசு தரப்பிலிருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. 


நெதர்லாந்தில் இயங்கி வரும் இனப்பிரிவினைக்கு எதிரான சில அமைப்புகளும் இத்திரைப்படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.  அந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் இந்த விவகாரத்திற்கு அமைதியான, புத்திசாலித்தனமான அணுகுமுறைகளின் மூலமாக தீர்வு காண முயன்று வருகின்றனர்.  வில்டர் போன்ற மூன்றாந்தர அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என அவர்கள் முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.