இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு


இம்மண்ணில் ஒரு மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் கட்டி உயர்த்துவதற்காக எல்லாம் வல்ல ரஹ்மான் எளிதாக்கி வைத்த ஃபார்முலாதான் சமூக ஒற்றுமை என்றால் அது மிகையல்ல.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகவும் அவர்கள் ஏற்றெடுத்த இலட்சியத்தின் வெற்றியுமே சமூக ஒற்றுமையாகும்.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த இஸ்லாமிய சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருப்பதும் இதே சமூக ஒற்றுமைதான்!

இப்படிப்பட்ட சூழலில் இன்று ஒரு சிறு கூட்டம் இஸ்லாமியர்களிடையே காணப்படும் பிளவுகளை நீக்கி இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என்று இயங்கிக் கொண்டிருப்பதும் இக்கட்டுரையின் தலைப்பு பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் இதனை அலச ஆரம்பித்தோமானால் ஆழமான விஷயங்கள் நம் அறிவின் எல்லையை தொடும்.

இந்த பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் இந்த இஸ்லாமிய சமுதாயத்தை ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்ற வலுவான ஐந்து தூண்களின் மீது உறுதியாக நிலை நிறுத்தியுள்ளான். இந்த சாம்ராஜ்ஜியம் எப்படிக் கட்டிக் காக்கப்பட வேண்டும்? எப்படி ஆட்சி செய்யப்படல் வேண்டும்? எதனை எடுத்துக்கொள்ளவேண்டும்? எதனை நிராகரிக்க வேண்டும் என்ற திட்டமான வரையறையுடன் கூடிய ஒரு நேர்வழிகாட்டுதலை, அல்ஃபுர்கான் என்ற வேதத்தை இறைவன் இறக்கினான்.

لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ


“(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்”
(அல்குர்ஆன் 59:21).

அதன்படி மகத்தான இந்த இறைமறையின் ஒளிவெள்ளம் உலகெங்கும் பரவித்துவங்கியது. இறைவனுடைய ஹிதாயத் யாருடைய இதயத்தை எல்லாம் ஊடுருவியதோ அங்கெல்லாம் அறிவு ஒளி வெள்ளமாகப் பாய்ந்து இன்று வானுயர்ந்து நிற்கிறது.

இதற்கிடையில் உருமாறி தடம்மாறிய மதங்கள் எல்லாம் காலத்தின் மீது காலூன்றி நிற்க இயலாமல் தடுமாறி நிலைகெட்டு நிர்க்கதியின்றி அருகில் சுடர் விட்டுக்கொண்டிருக்கும் இஸ்லாத்தை காழ்ப்புணர்வோடு நோக்க ஆரம்பித்தன. இந்த இஸ்லாத்தை வேரடி மண்ணோடு இவ்வுலகில் இருந்து துடைத்தெறிய வழிதேடி நிற்கின்றன. அவரவரர் மதத்தினை மாறுபட்ட குரலோடு பரஸ்பரம் எதிர்த்துக்கொள்ளும் எவரும், இஸ்லாம் என்று வந்து விட்டால் ஓரணியில் நின்று எதிர்க்கத் திரள்கின்றனர்.

புத்த மதத்தையும் ஜைன மதத்தையும் புதைகுழியில் இட்டு மூடிவிட்டு, “நாங்கள் இஸ்லாத்தை விட்டு விடுவோமா என்ன?” என்று கொக்கரிக்கும் கும்பல் ஒருபுறம். யஹூதிகளையே எமலோகத்திற்கு அனுப்பிவிட்டு, அவர்களில் எஞ்சியவர்களை எங்கள் மடியில் வைத்து தாலாட்டிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மிஸைல் பயிற்சி கொடுத்து கைப்பாவை ஆக்குவோம் என்று ஆர்ப்பரிக்கும் கூட்டம் மறுபுறம்.

எவர் எப்படிக் கூக்குரல் இட்டாலும் இஸ்லாமிய சமூகத்தை நோக்கிப் பெரிதாகத் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் கால்பதித்துள்ள புதிய தலைமுறைச் சமுதாயம் இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

உலகம் முழுவதும் பரவி வரும் புதிய ஜாஹிலியாக் கூட்டத்தை அழிக்க இறைவன் போதுமானவன் என்பதில் ஐயமில்லைதான். ஆனாலும் இதில் முஸ்லிம்களின் பங்கு என்ன? (பலதெய்வ வழிபாடு, வட்டிக்கும் வட்டி வாங்கும் ஈனத்தொழில், பெண் சிசுக்கொலை, மதுவும் மங்கையும் கூடிய களியாட்டங்கள், இத்யாதி, இத்யாதி அனாச்சாரங்களைக் கொண்டதொரு சமூகத்திற்கு ஜாஹிலியா என்று பெயர்)

1428 வருடங்களுக்கு முன் அரபு மண்ணில் வேரூன்றி இருந்த ஜாஹிலியத்தை நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்த ஒரு சிறு கூட்டத்தினரை வைத்து, சுக்குநூறாக உடைத்தெறிந்த வரலாற்று உண்மை நம் சமகால இளம்தலைமுறைக்குத் தரும் பாடம்தான் என்ன?

إِنَّ اللّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالإِنجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللّهِ فَاسْتَبْشِرُواْ بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُم بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

“(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும் இன்ஜீலிலும் குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்” (அல்குர்ஆன் 9:111).

மேற்கண்ட இறைவசனம் இதற்குப் பதிலளிக்கிறது. இது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்கப்பட்ட வாக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒற்றுமையைக் கொண்டுவரும் அந்த எழுச்சியை அன்று நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதாவில் உரையாற்றியபோது தம் இருவிரல்களைக் காட்டி “இறைமறையையும் இறைத்தூதரின் வழியையும் பற்றிப் பிடித்துக் கொள்ளும் காலம்வரை நீங்கள் துக்கப்படவேண்டியதில்லை” என்று அவர்கள் அன்று சொன்ன கருத்தை, தனது இறப்பு வரையிலும் ஒவ்வொரு முஸ்லிமும் மறந்துவிடக்கூடாது.

சரி. இக்கருத்தை உலக மார்க்க அறிஞர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லிக்கொண்டிருப்பதை சமுதாயம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. “அறிந்து” கொண்ட நாம் “புரிந்து” கொண்டோமா என்றால் இல்லை!

ஒரே ஊருக்குச் செல்வதற்காக காத்திருக்கும் நிழற்குடையினுள் நிற்கும் பயணிகளாய் முஸ்லிம்கள், சென்று சேரவேண்டிய தெளிவான நேர்வழி எது என்று தெரிந்த பிறகும் சென்று சேர்வதற்கான வாகனம் வந்திருந்தும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் ஒற்றுமையில்லாத காரணத்தினால் தனித்தனியே பிரிந்து நிற்கின்றனர். ஓர் இறைவன், ஒரு மறை என்ற இந்த ஒருமைப்பாடும் கொண்ட இலட்சியமும் நிறைவேற வேண்டுமெனில் சமூக ஓட்டத்திலிருந்து மனிதர்கள் பிரிந்து நிற்பதில் பயனில்லை.

“ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் உங்களைப் படைத்தோம்” (அல்குர்ஆன் 4:1) என்று படைப்பாளனே சாட்சியம் நல்கும்போது இந்தச் சமூகத்தை, தேசியம் என்ற பெயரால், மொழியெனும் பெயரால், நிறம் / இனம் என்ற பெயரால், ஏழை/பணக்காரன் என்ற பெயரால், படித்தவன்/பாமரன் என்ற பெயரால் துண்டு துண்டாக்கப்பட்டு துவம்சம் ஆக்குபவர்கள் அசத்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டோராகத்தான் இருக்க முடியும்.

இவ்வாறு துவம்சம் செய்யப்பட்ட சமுதாயமே சர்வதேச அளவில் தனது சொந்த மண்ணில் கூட உறுதியாகக் கால்பதித்து ஊன்றி நிற்கவியலாமல் அல்லாடி அவநம்பிக்கைக்கு உள்ளாகிக் கொண்டு வருவதைக் காணமுடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் தன்னகத்தே கொள்ளும் ஒருங்கிணைப்பிற்குப் பெயர் போன இஸ்லாமிய அடிப்படைகளை, ஒரு தனி முஸ்லிம் நடைமுறைப்படுத்தாதன் விளைவு? அத்தனை வளங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு இன்று எதிரிகளிடமே போய் சொந்தத் தேவைக்கு கெஞ்ச வேண்டியுள்ளது. இதன் விளைவாகவே இறைவனின் சாபம் இறங்கிவிட்டதோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

கூட்டாகத் தொழும் தொழுகையில்கூட ஒருவருக்கொருவர் இடையில் இடமில்லாதவாறு நெருக்கமாகத் தோளோடு தோள் சேர்த்து நிற்க வலியுறுத்தும் இஸ்லாம், “ஷைத்தானின் சூழ்ச்சி உங்களிடையே உள்ள இடைவெளியில்தான் பிறக்கும்” என்பதை நேரிடையாகச் சொல்கிறதே? இறைவனுக்கு வணக்கம் என்பதைத் தனித்து செய்யாமல் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதிலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் இறைவன் சொல்ல வரும் செய்தி என்ன என்பது புரியவில்லையா?

அதேபோல் மிதமிஞ்சியிருப்பவனுக்கும் கால்வயிறு காணாதவனுக்கும் இடையில் உள்ள இடைவெளியை ஜகாத் கொண்டு நிரப்ப இஸ்லாம் வலியுறுத்தவில்லையா? இதைவிட ஒரு சமநிலைச் சமூகத்தை உலகில எங்கே சென்று தேட முடியும்?

குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட இடத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை உடையிலும்கூட காட்டவிடாமல் கஃபத்துல்லாஹ்வை வலம் வரச் செய்யவைத்து இஸ்லாம் கூற வரும் செய்தி என்ன என்று புரியவில்லையா?

நான் தனித்துத் தொழுதாலும், இறைவனுக்கு மட்டுமே என் நன்றிகளைக் காணிக்கையாக செலுத்தினாலும், இறைவனுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடுவதில்லை. மாறாக இறைவன் நாடியிருக்கும் இந்த அமைப்பு, சமூகத்தில் கூட்டமைப்பை ஏற்படுத்தவே என்பதை சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு புரியும்.

சாந்தியும் சமாதானத்தையும் வலியுறுத்தும் இஸ்லாம் அதே தரத்தில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒருங்கே முன்வைக்கிறது. உலகத்தைத் துறந்து, உற்றாரையும் உறவினர்களையும் நீங்கி, நாட்டையும் மக்களையும் புறக்கணித்து, ருசிப்பதையும் புசிப்பதையும் வெறுத்து, வனாந்திரத்தில் வெற்றுச் சிந்தனையுடன் தியானம் என்ற பெயரில் முக்தி பெறலாம் என்பதைத் தரைமட்டமாக்குகிறது இஸ்லாம்.

“நீங்கள் ஒரே சங்கமாக (ஒற்றுமையாக) இருந்து கொள்ளுங்கள். உங்களிடையே ஏற்படும் பிளவுகள் குறித்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) சமூகத்தை நோக்கி எச்சரிக்கும் ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தைப்பற்றி இறைவன் “நோன்பு எனக்குரியது. அதற்குரிய பிரதிபலனை நல்குபவன் நானே!” என்கிறான். ஒருமனிதன் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனிப்பட்டு நிற்பதை தடுக்கும் வகையில் நோன்பின் மாதமும், தொழுகைகள் போன்ற இன்னபிற அமல்களும் சமூகத்தில் கூட்டுறவு ஏற்படுத்தும் விதமாகவும், அதைக் கடைபிடிக்கும் மனிதனுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் நன்மைகளை இறைவன் வாரிவழங்கி ஆர்வமூட்டுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இணையும் விசுவாசிகளை அரஃபா மைதானத்தில் ஒன்று படுத்தி அழகு பார்க்கும் இறைவனின் வல்லமையைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இபாதத் (அமல்கள்) முறைகளில் இறைவன் கொடுக்கும் இந்தப் பயிற்சி அத்துடன் முடிந்து விட்டுக் கலைந்து விடுவதற்கல்ல. மாறாக, அதனை உலக வாழ்க்கையில் ஒவ்வொரு முஸ்லிமும் கடைபிடித்து சமூக பிணைப்பிலேயே கலந்திட வேண்டும் என்பதற்காகத்தான்.

“ஒரு கூட்டத்தாரைக்கொண்டு இன்னொரு கூட்டத்தாரை அல்லாஹ் அழிக்காவிட்டால், பூமியில் குழப்பத்தால் சீர்குலைந்து போயிருக்கும்” (அல்குர்ஆன் 2:251).

அது நன்மையைச் செய்பவனுக்கு சமூக ஒற்றுமை ஏற்படுவது போன்று தீமையைச் செய்பவனும் அவர்களுக்குள்ளாகவே ஒரு சமூக ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு அதைச் செய்கிறான் என்பதை இவ்வசனம் உணர்த்தவில்லையா? இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், ஜாதியின் பெயரால் ஒருவன் அவனது சமூகத்தினை ஒன்றிணைக்கமுடியும் என்றால் இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஓரிறைக்கொள்கை ஒன்றே என்ற அணியில் உலகம் முழுவதும் ஒரே சித்தாந்தம் பேசும் இஸ்லாத்தினை நோக்கி எவ்வளவு எளிதில் மக்கள் ஒன்றினைய முடியும் என்று சிந்தித்துப்பாருங்கள்.

சிறு சிறு விஷயங்களில் எல்லாம் அடித்துக்கொண்டு பிணக்கு செய்துகொள்வர் என்ற தற்போதைய முஸ்லிம்களின் யதார்த்த பலவீனத்தை அறிந்த காரணத்தினாலேயே ஆதிக்கச் சக்திகள் சுலபமாய் தங்கள் காய்களை நகர்த்தி வெற்றி காண்கின்றன. ஒரு புள்ளிவிபரப்படி மேற்கத்திய நாடுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இளம்தலைமுறையினருக்கு முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுருவிக் குழப்பம் விளைவிக்கும் இப்படிப்பட்ட ஊடுருவல்கள் ஒரு பாடமாகவே கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று இஸ்லாமிய சமூகம் துயில் கலைந்து எச்சரிக்கை அடைந்து விழித்துக்கொள்ளவில்லையெனில் பிற்காலத்தில் வரும் புதிய தலைமுறை இஸ்லாமிய சமுதாயம் அடையவிருக்கும் நஷ்டங்கள் அத்தனையும் நம் தலையில் வந்து இறங்கும் என்ற எச்சரிக்கையோடு,

அல்லாஹூ அக்பர்; அல்லாஹூ அக்பர்; அஷ்ஹது அன்லாயிலா இல்லல்லாஹ்; வ அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறிக்கொண்டு,

சிதறிச்செல்லும் சமுதாய உடன்பிறப்புக்களே! பிரிந்து போய் விடாதீர்கள்! இறைவனிடமிருந்து வந்த அழைப்பை உணர்ந்து கொண்டு ஓரணியில் திரண்டு விடுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.


ஆக்கம்: சகோதரர் கோவை இறைதாசன்.


2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் கோவை இறைதாசன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்


2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.