தெஹ்ரான்: முஸ்லிம் நாடுகள் அனைத்தும் தங்களுக்கிடையில் ஒன்றுபடும் பட்சத்தில் மேற்கத்திய அச்சுறுத்தல்களை எளிதில் நிர்மூலமாக்க இயலும் என ஈரானின் முக்கிய தலைவர் ஆயத்துல்லா அலி காம்னயி கூறினார். நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளைப் அச்சுறுத்திக் கீழ்படுத்த முயல்வதாகவும் அவர் கூறினார். ஈரானுக்கு அரசுமுறைப்பயணத்தை மேற்கொண்ட செனகல் அதிபர் அப்துல்லாஹ் வாதுடன் கலந்தாலோசிக்கும் வேளையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் மீதான அநியாய ஆக்ரமிப்புகள் அமெரிக்காவிற்கு எதிராக உலகம் முழுக்கக் கோப அலைகளை உருவாக்கியுள்ளது. இராணுவத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி யதார்த்த வெற்றி அல்ல என்பதைத் தற்போது அவர்கள் புரிந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இப்பிரதேசங்களில் அவர்கள் தோண்டியக் குழிகளில் அவர்களே தற்போது விழுந்துக் கொண்டிருக்கின்றனர்" என காம்னயி கூறினார். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அக்கிரமங்களைத் தடுப்பதற்கான கடமை இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு (Organization of Islamic Conference-OIC) உண்டு எனக் கூறிய அவர், "அவர்கள் அதில் தோல்வியைத் தழுவ மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு" எனவும் கூறினார்.
"முஸ்லிம் நாடுகள், தங்களின் வெற்றி ஏதேனும் ஒரு வல்லாதிக்கச்சக்தியின் தயவைச் சார்ந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான தவறான நம்பிக்கையை விட்டு ஒரு முறை மீண்டு வந்தால் அதனால் பல மகத்தான இலாபங்களை அவர்களால் ஈட்ட இயலும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமுதாயத்தில் நிலவும் சிலக் கருத்து வேறுபாடுகளை மூலதனமாக ஆக்கிச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அழிக்க முனையும் வல்லாதிக்க, ஏகாதிபத்தியச் சக்திகளை அக்கருத்து வேறுபாடுகளை மாற்றி வைத்து வைத்து விட்டு ஓரணியில் நின்றால் மட்டுமே சாதிக்க இயலும் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களான ஷியா முஸ்லிம்கள் மிக நன்றாக உணர்ந்துள்ளனர் என்பதையே காம்னயீயின் மேற்கண்டக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இனியும் இந்தச் சமுதாயத்தைக் கருத்து வேறுபாடுகளின் பெயரைக் கூறி வெகுகாலத்துக்கு பிளவுபடுத்தி ஆள இயலாது என்பதை ஒருகாலத்தில் உலகின் இருபெரும் வல்லரசுகளாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகளையே தன்வசப்படுத்திய இறைமார்க்கம் இஸ்லாம் இந்நவீன காலத்தின் வல்லாதிக்கச் சக்திகளுக்கும் உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.