படக் கருவியும் படைக் கலனே!

Share this:

 த்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே.  அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில்   வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின்  மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!
மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; – இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல;  மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின்  அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது.  ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர்.  1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா  நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன்.  குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து  நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய்.  “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்”  தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார்.  தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”

தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய்.  “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!

விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.

“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது”  என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.

இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!

கட்டுரை: இப்னு ஹம்துன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.