குழந்தைகளைக் கொல்லப் பணிக்கப்பட்டதால் பிரித்தானியப் படைவீரர் தற்கொலை!

{mosimage}இராக்கில் ராணுவ வேலைக்காகப் பணிக்கப்பட்ட 19 வயதான பிரித்தானிய ராணுவ வீரர் ஜேசன் செல்ஸீ அதிக அளவு வலிநீக்கி மாத்திரைகளை உட்கொண்டு தம் வாழ்வை முடித்துக் கொண்டார். இதற்கு அவர் கூறிய காரணம், பிரித்தானிய ராணுவம் கிளர்ச்சியாளர்களோடு குழந்தைகளையும் இராக்கில் கொல்லச் சொல்லி நிர்ப்பந்தித்தது தான் என அவரது பெற்றோர் இண்டிபெண்டன்ட்  பத்திரிக்கையிடம் தெரிவித்தனர்.

இராக்கில் பணியாற்றிவரும் பிரித்தானியப் படைவீரர்களில் 2003லிருந்து இதுவரை 115 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள்.

தமக்கு இராக்கில் பணிபுரியும் ஆணை வந்தது முதல் இதனை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜேசன், தன்னைத் தானே மணிக்கட்டில் அறுத்துக் கொண்டு துன்புறுத்தியிருக்கிறார். இதற்கு முன் அவர் ஜெர்மனியிலும் சைப்ரசிலும் ராணுவப்பணி ஆற்றி இருந்திருக்கிறார். 

மேலும் இவரைக் குறை கூறியும் அவருடன் பணிபுரியும் சகவீரர்கள் எள்ளியிருந்திருக்கின்றனர்.

இராக் பணிக்கு முன்பு அவரிடம் பிரித்தானிய ராணுவத் தலைமையகம் இராக்கில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ராணுவத்தை எதிர்ப்பவர் 2 வயது குழந்தைகளாக இருந்தாலும் தயங்காமல் சுட்டுக் கொல்லவேண்டும்; ஏனெனில் 2 வயது குழந்தைகளும் அங்கே தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவர் எனக் கட்டளை பிறப்பித்துள்ளது. 2 வயது குழந்தைகள் எப்படித் தற்கொலைத் தாக்குதல் நடத்துவர் எனக்குழம்பிய அவர் மேன்மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னைத் தானே முடித்துக் கொண்டு விட்டார். இதனை அவர் இறக்குமுன் தன் தாயிடம் இப்படிப் பிஞ்சுக் குழந்தைகளை எல்லாம் என்னால் கொல்ல இயலாது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்த ராணுவச் செய்தித் தொடர்பாளர் செல்ஸீ குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

இதற்குச் சற்றே சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் பிரித்தானியப் பாதுகாப்புத் துறை இதுவரை இராக்கில் பணியாற்றிய 1541 படைவீரர்கள் மனநலம் தொடர்பான குறைபாடுகளால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 727 பேர் இது போல் பாதிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தது. இது இராக்கில் தற்போது இருக்கும் மொத்த பிரித்தானியப் படைவீரர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடாகும்.

ஜேசன் தவிர மேலும் 5 வீரர்கள் இதுவரை இராக் / ஆப்கானிஸ்தானில் பணியாற்றியதால் தற்கொலை செய்துள்ளார்கள். அவர்களின் விபரம்:

ஜூலை 2004 – பிரைவேட். கேரி போஸ்வெல் (20)

அக்டோபர் 2004 – ஸ்டாஃப் சார்ஜண்ட். டெனிஸ் ரோஸ் (34)

டிசம்பர் 2004 – சார்ஜண்ட். பால் கன்னாலி (33)

அக்டோபர் 2005 – கேப்டன். கென் மாஸ்டர்ஸ் (40)

மார்ச் 2006 – கார்ப்பரல். மார்க் கிரிட்ஜ் (25)