புதுடெல்லி: 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற காண்டஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலின் போது தீவிரவாதி மசூத் அஸர் இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக அப்போதைய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவின் செவ்வி இந்திய நாடளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
1999ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான வாஜ்பேயியும் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் தனக்கு விடுத்த மிரட்டலினாலேயே தீவிரவாதியை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானதாக பரூக் அப்துல்லா முன்னதாக ஒரு பிரபலப் பத்திரிக்கைக்கு அளித்திருந்த செவ்வியில் கூறியிருந்தார்.
தற்போது மக்களவை உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி இந்தப்பிரச்சனையைக் கிளப்பினார். அப்போது அவர் பரூக் அப்துல்லாவின் கூற்றிலிருந்து கூறுகையில் 1999ல் பிரதமர் வாஜ்பேயியும் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வர தீவிரவாதிகளான மசூத் அசரையும் முஷ்தாக் சர்கரையும் விடுவிக்கத் தமது விருப்பத்திற்கு மாறாக அழுத்தம் கொடுத்ததாகவும் மறுத்தால் தேஜகூட்டணியில் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சியை நீக்கிவிடப் போவதாக மிரட்டியதாகவும் எடுத்துரைத்தார்.
இதையடுத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் அமளியால் நெடுநேரம் குழப்பம் நீடித்தது. பாஜக உறுப்பினர்கள் மக்களவை மையமண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களும் மைய மண்டபத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி அடக்கி வைத்தார். எனினும், குழப்பத்தை அடக்க முடியாத சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, அவையை வேறுவழியின்றி மாலை 4 மணி வரை ஒத்தி வைத்தார்.
முன்னதாக திரு மிஸ்திரி, தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொண்டது முந்தைய பாஜக அரசு தான் என்பதற்கு இதுவே சான்று எனக் குறிப்பிட்டார்.
பாஜகவின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த மதன்லால் குரானா, உமாபாரதி போன்ற தலைவர்கள் அத்வானியின் மீதும் வாஜ்பேயியின் மீதும் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியது நினைவு கூரத்தக்கது.