இந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா?

Share this:

புதுடெல்லி : மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற ஐபிஎஸ் காவல்துறை உயர் அலுவலரான இந்திய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த திரு. ஃபிரான்ஸிஸ் ஜெ. அரான்ஹா டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமானத்தளத்தில் கடந்த வியாழக்கிழமை (24/08/2006) கைது செய்யப்பட்டார். இவ்வாறு இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டது பெரிய விவாதமாக மாறுகிறது. அமெரிக்காவிற்காக உளவு வேலைப்பார்த்திருந்த அரான்ஹா அமெரிக்காவிற்கு தப்பி ஓட முனைந்த பொழுது கைது செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஐ.ஜி தரத்தில் இந்திய உளவுத்துறையில் பணியிலிருந்த இவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த தூதரகக் கடவுச்சீட்டை விடுத்து தன் சொந்தக் கடவுச்சீட்டின் மூலம் அமெரிக்காவிற்கு கிளம்பும் பொழுது தான் இந்திய அரசின் பிடியில் சிக்கினார்.

சில நாட்களாகவே இவரது நடவடிக்கைகளைச் சந்தேகக்கண் கொண்டு தான் அரசு கண்காணித்து வந்தது. வாஷிங்டன் இந்தியத் தூதரகத்தில் உயர்நிலை அலுவலராகப் பணியாற்றிவந்த இவர் இந்தியா திரும்பிய உடன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார். இதற்கு அவர் கூறிய காரணங்களை இந்திய அரசு நம்ப மறுத்து, அவரது விருப்ப ஓய்வுக்கான மனுவை நிராகரித்தது.

{mosimage} இதனிடையே இவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முயலலாம் என ஐயுற்ற அரசு நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமானத் தளங்களுக்கு இவரைக் குறித்த விபரங்களை அளித்து விழிப்புடன் கண்காணிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தது. எனவே தான் இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் தன் சொந்த கடவுச்சீட்டு மூலம் தப்ப முயன்ற திரு. அரான்ஹாவைத் தடுக்கமுடிந்தது.

அவரது சொந்தக் கடவுச்சீட்டில் பன்னாட்டு நிதி நிறுவனமான IMF-ன் பணி ஆணைக்கான முத்திரையும் அமெரிக்கக் குடிபுகல் ஆணையும் வழங்கப்பட்டிருந்தது. இது அரசுக்கு மேலும் வியப்பை அளித்துள்ளது. அரசின் மிக முக்கியப் பணியில் பல அரசு ரகசியங்கள் தெரிந்த திரு அரான்ஹா போன்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியில் சேர அரசின் முறையான அனுமதி பெற வேண்டும். இருப்பினும் இவரை விமானதளத்தில் தடுத்து நிறுத்தியதைக் குறித்து " ஐ.எம்.எஃபில் பணியிலிருக்க எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அமெரிக்காவிற்கு கிளம்பியதைத் தடுப்பது மட்டுமே நோக்கமாக இருந்ததாக" அரசு விளக்கமளித்துள்ளது.

ஆனால் அதே நேரம் திரு. அரான்ஹா தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததும், ஒருவர் பணிச்சட்டத்தை (Service Act) மீறியதற்காக அரசு இத்தனை கடுமையான நடவடிக்கை எடுப்பது அபூர்வமான சம்பவமாக இருப்பதும் அமெரிக்காவிற்காக உளவு பணி பார்த்த மற்றொருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா தப்பி செல்ல முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க காரணமாகிறது.

இதற்கு முன் இந்திய அரசின் மற்றொரு உளவுப்பிரிவான RAW-வில் பணியாற்றித் தற்போது நேபாளம் வழியாக அமெரிக்கக் கடவுச்சீட்டின் மூலம் அமெரிக்காவுக்குத் தப்பியோடி தலை மறைவாக இருப்பதாக நம்பப்படும் ரபீந்தர் சிங் கதையை எவரும் மறந்திருக்க இயலாது. இவர் அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் கைக்கூலியாகச் செயல்பட்டார் என அவர் குறித்த விசாரணைகளில் பின்னர் தெரிய வந்தது. ஆனால் இன்றுவரை அமெரிக்க உளவுத்துறை இதனை மறுத்து வருவதும் வியப்புக்குரியதன்று.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.