இஸ்ரேலின் தொடரும் காட்டு தர்பார்

தாக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் எந்த உலக நியதிக்கும் கட்டுப்படாமல் அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்களின் மேல் தாக்குதல் நடத்திவருவது அறிந்ததே. இப்போது பாலஸ்தீன மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசு அமைந்து அதன் பிரதமராக இஸ்மாயில் ஹனியா பொறுப்பேற்றிருப்பது அறிந்த செய்தியே.

இஸ்ரேலிய ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனப் பிரதமர் அலுவலகத்தைக் குறி வைத்து குண்டுகள் வீசியது. இதில் அவரது அலுவலகம் பெருமளவு சேதமடைந்தது.

பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் ஒரு இஸ்ரேலிய ராணுவவீரர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த ராணுவ வீரரை மீட்பதற்காக இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் உல்மர்ட் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனில் இருக்கும் ஒரே விமான நிலையமான காஸா பன்னாட்டு விமான நிலையத்தை இஸ்ரேலிய ரானுவம் கைப்பற்றியுள்ளது. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சண்டை நடந்து வருவதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவப் போவதாக பெரும் குரலெழுப்பும் அமெரிக்கா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் முக்கிய தலைவர் அலுவலகத்தைத் தாக்கிய சம்பவத்தைக் குறித்து இதுவரை எந்த ஓர் அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அபூஷைமா (நன்றி: கல்ஃப் நியூஸ்)