புற்றுநோய் கண்டறிதலில் முஸ்லிம் ஆராய்ச்சியாளரின் புதிய சாதனை

முனைவர் ஹஸ்னா

ளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரின் தலைநகர் தோஹாவில் இருக்கும் கத்தர் பல்கலைக்கழக கணித மற்றும் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மோமன் ஹஸ்னா அவர்களின்  'ஒரு பொருளின் நிறை அடர்த்தி பிம்பம் காணும் முறை'க்கு (Method for Detecting a Mass density image of an object) அமெரிக்க காப்புரிமைக் கழகம் காப்புரிமை (patent) அளித்துள்ளது.

சிக்காகோவிலிருக்கும் இல்லினாய் தொழில்நுட்பப் பயிலகத்தில் முனைவர் ஹஸ்னா அவர்கள் நடத்திய ஆய்வினை அலசிய அமெரிக்கக் காப்புரிமைக் கழகம் இதற்கான காப்புரிமையை வழங்கியுள்ளது.

அதிக ஆற்றல் கொண்ட X-கதிர்கள் (high energy X-rays) பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான X-கதிர்கள் (conventional X-rays) தெரிவிக்க இயலாத பல தகவல்களை இம்முறை மூலம் கண்டறியலாம். வழக்கமான x கதிர் ஒளிப்படம் திசுக்களின் உள்வாங்கு திறனை (tissue absorption) மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் அதிக ஆற்றல் கொண்ட X-கதிர்கள் திசுக்களின் உள்வாங்கு திறனல்லாது திசுக்களின் ஒளிவிலகல் திறனை (diffraction) அடிப்படையாகக் கொண்டுள்ளதால், முன்னர் சாத்தியப்படாத தோல், மார்பகம், எலும்பிணைப்பு போன்ற மென் திசுக்களின் (soft tissues) புற்று நோய்க்குறியீடுகளை எளிதாக இம்முறை மூலம் காண இயலும். மென் திசுக்கள் புற்று நோய்க்குறியீடுகள் காந்த ஒத்ததிர்வுச் சோதனை (Magnetic Resonance Imaging – MRI) மூலமே இதுவரை கண்டறியப்பட்டு வந்தன.

"இம்முறை மென்திசுக்களின் புற்றுநோய் வளரும்முன் தொடக்க நிலையில் கண்டறிய உதவுமாதலால், சிகிச்சையளித்தல் முறையைத் திட்டமிடுவது மிக எளிதாக இருக்கும்" என  முனைவர் ஹஸ்னா கூறினார்.

இவரது ஆய்வுகளைப் பற்றி மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: http://www.mhasnah.com/

தகவல்: அபூஷைமா