வளர்ந்து வரும் இஸ்லாமியப் பொருளியல்!

இலண்டன்: இன்றைய அளவில் உலகில் 100 நாடுகளில் இஸ்லாமியப் பொருளியலும் வங்கியியலும் நடைமுறையில் இருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த செல்வ மதிப்பு கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்களாகும். அது மட்டுமன்று; இது ஆண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு வளர்ச்சி பெற்று வருகிறது. இது மேலும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வளைகுடா நிதி நிறுவனமான கல்ஃப் ஃபைனான்ஸ் ஹவுஸ் மற்றும் கல்ஃப் எனர்ஜி நிறுவனங்களின் தலைவர் திரு இஸாம் ஜனாஹி தெரிவிக்கிறார். இதை அவர் பிஸினஸ் வீக் பத்திரிகை நடத்திய 10வது முதன்மை மேலாண்மை அலுவலர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் உலகின் வியாபாரச் சூழலில் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. ஒரு நிறுவனம் மட்டுமே சந்தையில் கோலோச்சிய காலம் எல்லாம் முடிந்து விட்டது. அதேவேளை இந்த சவால்களுக்கு ஈடுகொடுத்து இஸ்லாமிய வங்கியியல் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய முதலீடுகளின் செல்வ மதிப்பு 500 பில்லியன் டாலர் அளவைத் தொடும். இஸ்லாமிய வங்கியியல் உண்மையில் சமூகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதேவேளை முறையாக புத்திக் கூர்மையுடன் முதலீடு செய்தால் அதிக இலாபம் ஈட்டித் தரவல்லது. வழக்கமான வங்கியியலோ வட்டியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இதனை உணர்ந்து கொண்டு தான் பிரபல வங்கிகள் இஸ்லாமிய வங்கியியலை நிறுவி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் முதலீட்டை ஈர்த்துப் பெரும் வெற்றி ஈட்டி வருகின்றன. இவ்வாறு திரு ஜனாஹி கூறினார். ஜோர்டான், எகிப்து, கத்தர், சவூதி அரேபியா போன்ற நாடுகளின் இஸ்லாமியப் பொருளியல் முதலீடுகள் எவ்வாறு அதிக இலாபம் ஈட்டித் தந்தன என்று அவர் புள்ளிவிபரங்களுடன் நிரூபித்தார்.

இது ஒரு புறமிருக்க, இலண்டன் நகரில் இருக்கும் Securities Investment Institute (SII) எனும் பொருளியல் முதலீடுகள் துறையில் நிபுணத்துவம் கற்பிக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரூத் மார்ட்டின் என்பவர் “இஸ்லாமியப் பொருளியலையும் வங்கியியலையும் மறந்து இனி எந்தப் பொருளாதார நிபுணரும் இருக்க இயலாது. இந்தத் துறை அவ்வளவு அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் நிறுவனத்தில் இஸ்லாமியப் பொருளியலுக்காகவே சிறப்பு உயர்கல்விப் பிரிவைத் துவக்கி அதில் பட்டமும் பட்டயமும் வழங்கி வருகிறோம்” என்று கூறினார்.

IFQ (Islamic Financial Qualification) எனப்படும் இந்தப் பட்டயத்தில் தேர்ச்சி பெற பொதுவான பொருளியலிலும் இஸ்லாமியப் பொருளியலிலும் நல்ல அனுபவமும் அறிவும் தேவை. இதற்காக உருவாக்கப் பட்ட பாடத்திட்டத்தில் ஷரியாவுக்கு ஒத்துப்போகும் முதலீடுகள் குறித்து விரிவாக விளக்கப் பட்டுள்ளன. இதற்காக ஷரியாவிலும் சில பகுதிகள் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டம் நவம்பர் 2006 முதல் பிரிட்டனில் தேர்ச்சி பெறுவோர்க்கு வழங்கப்படும். இதற்காகப் பிரத்தியேகமான கணினித் தேர்வுகள் தயாரிக்கப் பட்டுள்ளன. மார்ச் 2007 முதல் உலகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று திரு மார்ட்டின் தெரிவித்தார்.

உலக அளவில் இஸ்லாமிய வங்கியியலில் ஏற்கனவே முதன்மை இடத்தை வகிக்கும் பிரிட்டன் இந்தப் பாடத்திட்டம் அமலுக்கு வந்தால் இத்துறையில் முன்னோடியாகும் என்பதில் ஐயமில்லை.

பிரிட்டிஷ் நிதி அமைச்சர் கார்டன் பிரவுன் இஸ்லாமிய வங்கியியலில் பிரிட்டன் முன்மாதிரியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் நாட்டின் நிதிநிலை நல்ல வளர்ச்சி அடையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

HSBC எனப்படும் வங்கி நிறுவனம் தன் இஸ்லாமியப் பிரிவில் தான் மிக அதிக இலாபம் ஈட்டியுள்ளது என்பது தனித் தகவல். இதைத் தொடர்ந்து சிட்டிகுரூப், டாய்ஷ்சே வங்கி, UBS போன்ற நிதி நிறுவனங்கள் இஸ்லாமிய முதலீட்டுப் பிரிவை வலுப்படுத்தி வருகின்றன. இதனை உணர்ந்த ஜப்பான் ஷரியாவுக்கு ஒத்துவரும் முதலீடுகளைக் கண்டறியுமாறு தன் நாட்டிலுள்ள வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது–

— அபூஷைமா