இஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் – புதிய தொடர் (பகுதி-1)

உலகில் மனிதர்கள் தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி வழி நடத்துவதே இஸ்லாமிய மார்க்கமாகும். அது மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாயிலாக செயல்முறை டிவில் விளக்கம் கொடுக்கிறது. ஒருவர் காலையில் விழித்தெழுவதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒவ்வொரு செயல்பாட்டிலும் இஸ்லாமிய வழிகாட்டியைப் பேண முயல்வாராயின் அது அவரது வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இறைவனின் திருத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தது வாழ்நாளில் காட்டித்தந்த ஒவ்வொரு செயல்பாடும் முஸ்லிம்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக விளங்குகிறது. இதனைப் பேணி நடக்கும் முஸ்லிம்களுக்கு இறைவன் இவ்வுலகிலேயே மகத்தான நற்கூலிகளையும் பல வெகுமதிகளையும் வழங்குகிறான்.

மனிதர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இரண்டுக்கு மேற்பட்டோர் கூடிப் பேசுதல் என்பது தவிர்க்க முடியாத சம்பவமாகும். இது படிக்காத பாமரன் முதல் நாட்டின் அதிபர் வரை அனைவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் சம்பவமாகும். இவ்வாறு கூடிப்பேசுதல் என்பது பல்வேறு காரணங்களுக்காக அமையலாம்.

ஒவ்வொரு கலந்துரையாடலுக்கும் ஏதாவது ஒரு நோக்கம் இருக்கும். முக்கியமாக அக்கலந்துரையாடலின் இறுதியில் முக்கியமான சில விஷயங்களுக்கு ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கலந்துரையாடல்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்து, அலுவலகங்கள், அரசு அமைச்சகங்கள் என எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இதுபோன்ற கலந்துரையாடல்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. அதைவிட ஒரு பொதுவான விஷயத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டுமாயின் அதனை இவ்வகைக் கலந்துரையாடல்களின் மூலம் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

கலந்துரையாடல்(மஷூராக்)களில் எடுக்கப்படும் முடிவுகளில் இறைவனின் அருள் உள்ளதாகவும் இஸ்லாம் தெரிவிக்கிறது.

…. ஈமான் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.

அவர்கள் (எத்தகையொரென்றால்) …அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர் (அல் குர்ஆன் 42:36-38)

நம்பிக்கை கொள்வதோடு எல்லா விஷயங்களிலும் இறைவனைச் சார்ந்திருப்பவர்களுக்கு இறைவன் தன்னிடம் மிக மேலான நிலைகளை வைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் தெளிவாகத் தெரிவிக்கிறான். அவ்வாறு எல்லா விஷயங்களிலும் இறைவனை முற்றிலும் சார்ந்திருப்பவர்கள் எனக் கூறிவிட்டு குறிப்பாக அவர்களின் தன்மைகளை "தம்மிடையே தங்களது காரியங்களைக் குறித்து கலந்தாலோசனை செய்பவர்கள்" என எடுத்துக் குறிப்பிடுவதிலிருந்து இஸ்லாம் கலந்தாலோசனை செய்வதற்கு எத்துணை முக்கியத்துவம் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் அதனைச் சார்ந்திருப்பவர்களோடு கலந்து முடிவு செய்வதன் மூலம் (இறைவனின் அறிவுரையைக் கடைபிடிப்பதால்) அச்செயலின் முடிவில் ஏதாவது பிழை ஏற்பட்டால் கூட அதனால் அதனைப் பேணியவர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படுவதில்லை. மாறாக அவர்கள் இறைக்கட்டளையை பேணுவதால் நன்மையின் கணக்கிலேயே அது வரவு வைக்கப்படுகின்றது.

அது மட்டுமன்றி அச்செயலில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதால் மீண்டும் அதனைக் குறித்து கலந்தாலோசிக்கவும் தவறு எங்கு நிகழ்ந்தது என ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வரவும், தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்விலிருந்து தனி மனிதன் பாதுகாக்கப்படவும் முடிகிறது.

எவ்விஷயத்திலும் கூட்டு உழைப்பையும் கூட்டமைப்பையும் வலியுறுத்தும் இஸ்லாம் இதன் மூலம் சமூகத்தில் பிணைப்பும், ஒற்றுமையும் நிகழவே விரும்புகிறது. இதனாலேயே ஷைத்தானின் தீண்டலை விட்டுப் பாதுகாத்து இருப்பினும், இறைவன் தனது திருத்தூதராக தேர்ந்தெடுத்துத்  தனது கண்காணிப்பில் தன் கட்டளைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களையே "சகல காரியங்களிலும் அவருடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்யக்"  கட்டளையிடுகிறான்.

இறைவனின் பொருத்தத்தை நாடி ஒன்று கூடும் அமர்வுகளின் மூலம் ஒருமித்த கருத்திற்கு வந்து அதன்பின் ஒரு நல்ல செயலில் ஈடுபடுதலில் ஏற்படும் நன்மைகள் அளவிட இயலாதவை. அதில் மிக முக்கியமானது, தனிநபரின் "தான்" என்ற அகங்காரம் இல்லாமல் போவதும், கூட்டுமுயற்சி மூலம் எடுக்கப்படும் செயல்கள் சிரமம் குறைந்து இலகுவாக நடந்து விடுவதுமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை முகம் பார்த்து உரையாடுவதனால் தன்னிச்சையாக இழையோடும் சகோதரத்துவப் பிணைப்பும் அதன் மூலம் ஏற்படும் நல்லுறவுகளும் அளப்பரியவை.

… அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3:159)

… அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3:159)இதிலிருந்து இஸ்லாம் ஒவ்வொரு காரியத்திலும் கலந்தாலோசனை செய்வதையும் அதன் மூலம் சமூகத்தில் ஒருவருக்கொருவர் அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்த முயல்வதையும் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே தனிநபர் குடும்ப வாழ்விலிருந்து ஒரு நாட்டை வழிநடத்தும் அரசு வரை ஒவ்வொருவரும் தங்களுக்குரிய காரியங்களில் தங்களைச் சார்ந்தோரைக் கலந்தாலோசித்து அக்காரியத்தில் முடிவெடுப்பதே முழுமையான இறைவன் காட்டிய வழிமுறையாகும். அதில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகுந்த கவனம் செலுத்த முயல வேண்டும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்தாலோசனை நடக்கும் இடங்களில் அது முழுமையான இறை உவப்பைப் பெறும் நோக்கில் நடத்தப்படுமாயின் சில ஒழுக்கங்களையும், விதிமுறைகளையும் பேணுவதும் மிகுந்த அவசியமாகின்றது. அதனைக் குறித்து இன்ஷா அல்லாஹ் வரும் பகுதிகளில் காணலாம்.

கட்டுரை ஆக்கம்: முன்னா

பகுதி-2 >