இஸ்லாமிய அமர்வின் ஒழுங்குகள் (பகுதி-2)

Share this:

ஒரு காரியத்தைச் செய்ய விழைவோர் அதனைக் குறித்து தம்முடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுக்க இறைவன் வலியுறுத்தியுள்ளதையும் அதனைப் பேண தனது தூதருக்கு கட்டளையிட்டதையும் கண்டோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மஷூரா எனப்படும் கலந்தாலோசனையில் சில ஒழுங்குகளைப் பேணவும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திய சமூகத்தின் அவை-கள் இதற்கு சிறந்த முன்னுதாரணங்களாகும். ஒரு இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து இப்பகுதியில் காண்போம்.

ஒரு காரியத்தைக் குறித்து கலந்தாலோசனை செய்ய இருப்பின் அதற்கான நாள், நேரம், இடம் போன்றவற்றை முடிந்த அளவு முன்கூட்டியே தீர்மானித்து அக்கலந்தாலோசனையில் பங்கு பெறவிருப்போருக்கு தெரியப்படுத்துதல் அவசியமாகும். இது அந்தக் கலந்தாலோசனையில் பங்குபெற சம்பந்தப்பட்டவர்களுக்குக் கால அவகாசம் கொடுப்பதோடு முன்கூட்டியே அவருக்கு அதில் கலந்து கொள்வதைக் குறித்து தீர்மானிக்க உதவுகிறது.

1. நேரம் தவறாமை:

நிச்சயித்த நேரத்தில் கூட்டத்தை தொடங்குவது இஸ்லாம் வலியுறுத்தும் பண்புகளில் இன்றியமையாததாகும். இவ்விஷயத்தில் கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருப்போர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இதுவே கூட்டத்தின் கால அளவைப் பேண உதவுவதுடன் குறித்த நேரத்தில் கூட்டத்தை முடிக்கவும் உதவும். அது மட்டுமின்றி குறித்த நேரம் கடந்து தாமதித்து வருவோருக்கு இது படிப்பினையாக அமைவதோடு தொடர்ந்து அதே தவறை மேலும் செய்யாமல் இருப்பதற்கு அவர்களை தூண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தைத்தொடங்குவதன் மூலம் சரியான நேரத்திற்கு வந்தவர்களைச்சிரமப்படுத்தாமல், அவர்களின் மனதில் இனி நாமும் தாமதித்து வந்தால் போதும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் விதைத்து தவறான முன்மாதிரிக்கு வழிவகுத்து விடக்கூடாது.

கூட்டத்தின் கால அட்டவணையை பேணுதல் கூட்டத்தலைவரின் மிக முக்கிய பணிகளுள் ஒன்றாகும். பங்கு பெறுபவர்கள் இவ்விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்கும் விதத்தில் கூட்டத்தின் ஆரம்பமே அமைந்து விடக்கூடாது. ஏனெனில் காலம் பொன் போன்றது.

“இறைவா! எங்கள் நேரங்கள் மீது பரக்கத் செய்வாயாக” என உமர்(ரலி) அவர்கள் பிரார்த்திப்பவராக இருந்தார்கள். மேலும் “நேரத்தை வீணடிப்பது அழிவை ஏற்படுத்தும்”என்றும் கூறினார்கள். காலத்தின் மீது சத்தியம் செய்வதன் மூலம் அல்லாஹ் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகையை நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக இறைவன் சித்தரிப்பதிலிருந்து இஸ்லாம் காலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். தேவையற்ற விடயங்களை கூட்டத்தில் பேசி நேரத்தை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இஸ்லாம் வலியுறுத்தும் ஒரு முக்கிய விடயத்தில் அசட்டையாக இருப்பது விரும்பத்தக்க செயலன்று. இதனால் ஆரம்பத்திலேயே இறைவனின் திருப்தியின்மை அந்த அமர்வில் ஏற்பட வாய்ப்பிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. வழிநடத்துபவரின் அவசியமும் கட்டுப்பாடும்:

எந்த ஒரு கூட்டமெனினும் அங்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இருப்பின் அக்கூட்டத்தின் பொறுப்பாளராக ஒருவரைக் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது எனில் அவர் அக்கூட்டத்தை வழிநடத்துவார். அல்லது அக்கூட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் ஒருவர் அக்கூட்டத்தை நிர்வகிப்பவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

வழி நடத்துபவர் இல்லையெனில் கூட்டங்களில் கட்டுக்கோப்பு இராது. இஸ்லாம் எல்லா விஷயங்களுக்கும் யாராவது ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்க வலியுறுத்துகின்றது. பொறுப்பாளர் தனது பொறுப்புகளில் அசட்டையாக இல்லாமலும், பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகவும் இருத்தல் அவசியம்.

கூட்டத்திற்கு ஒருவர் பொறுப்பாளராக/வழிநடத்துபவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவரது ஆகுமான பணித்தல்களை அனுசரிப்பது அக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

“உங்களுக்கு உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் அவருக்குக் கட்டுப்படுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும்,

“நீங்கள் உங்கள் தூதருக்கும், உங்களின் தலைவர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும் கட்டுப்படுங்கள். அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்களே” என இறைவன் தனது திருமறையிலும் கட்டளையிடுகின்றான்.

ஒரு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விஷயத்தில் எடுக்கப்படும் முடிவு அக்கூட்டத்தின் பொறுப்பாளருக்கு மற்றவர்கள் கட்டுப்படும் விஷயத்தைச் சார்ந்ததாகும். இஸ்லாத்திற்கு எதிரான விஷயத்தில் அப்பொறுப்பாளர் செயல்படும் வரை அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவது மிகவும் அவசியமாகும். இங்கு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு சரியா தவறா என்பது முக்கியமல்ல. கலந்தாலோசனை இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் நடந்ததா இல்லையா என்பதே முக்கியமாகும்.

ஆலோசிக்கப்படும் விஷயத்தில் எடுக்கப்படும் முடிவு தவறாக அமைந்து விட்டாலும் அக்கூட்டம் சரியான இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி அமையுமானால் முயற்சி செய்ததற்கான கூலி ஒவ்வொருவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்பதும் அத்தவறான முடிவினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு யாரும் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் எந்நேரமும் நினைவில் கொள்ள வேண்டும்.

3. இறைவனைப் புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பித்தல்:

“இறைவனைப் புகழ்ந்து ஆரம்பிக்கப்படாத செயற்பாடுகள் இடையில் அறுந்துவிடும்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்). (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்).

இதன்படி கூட்டத்திற்குப் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறைவனைப் புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும்.

இறைவனைப் புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பித்தல் என்பது பல விதங்களில் அமையலாம். பிஸ்மில்லாஹ் கூறி அல்ஹம்துலில்லாஹ் என்றாலும் அல்லாஹ்வை புகழ்ந்ததாக ஆகிவிடும். சற்று சிறப்பாக துவங்க நினைத்தால் யாராவது ஒருவரை குர்ஆனின் சில குறிப்பிட்ட வசனங்களை மூலம் மற்றும் மொழிபெயர்ப்புடனும், மற்றொருவரை ஏதாவது ஹதீஸ் மற்றும் விளக்கத்துடனும் கூட்டத்தின் ஆரம்பத்தில் கூற வைக்கலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்த ஒரு கூட்டத்தில் பேசத் துவங்கினாலும் அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணம் இறைவனின் நற்செய்திகளை கூறாமல் பேசத் துவங்குவதேயில்லை. இதன் அடிப்படையில் கூட்டத்தை மேலும் சிறப்பாக எவ்விதத் தடங்கலோ சலசலப்போ இல்லாமல் துவங்க நினைத்தால் அக்கூட்டத்திற்காக நாள் குறிக்கப்படும் பொழுதே யாராவது ஒருவரையோ அல்லது இருவரையோ இது போன்று குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கம் ஆரம்பத்தில் கொடுக்க நியமித்து விடலாம்.

இவ்விதம் ஒரு கூட்டம் ஆரம்பிப்பதன் மற்றொரு சிறப்பு என்னவெனில், கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆரம்பத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்க உரைகள் நிகழ்த்தப்படுவதால் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் மனதில் ஒருவித அமைதியும், நாம் இறை மஜ்லிஸில் கூடியுள்ளோம் என்ற ஓர் உணர்வும் ஆரம்பத்திலேயே நினைவுறுத்தப்படுகிறது. இதனால் அந்த அவையில் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்படும் அமைதி கடைசி வரை நிலைநிறுத்தப்படுகிறது. அது மட்டுமன்றி கூட்ட துவக்கத்திலேயே குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கம் மூலம் அனைவரையும் அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கச் செய்ய வைப்பதால் கூட்ட இறுதி வரை நடக்கும் சம்பவங்களை அவர்களுக்கு உள்வாங்க வழிகோலப்படுகிறது.

இவ்வாறு நிர்ணயித்த சரியான நேரத்தில் ஒரு கூட்டம் இறைவனை புகழ்ந்து ஆரம்பிக்கப்பட்டது எனில் அக்கூட்டம் முடிவு பெறும் நேரம் வரை அக்கூட்டத்தைச் வானவர்கள் சூழ்ந்து கொண்டு அக்கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த வண்ணம் இருப்பர்.

“இறைவனை நினைவு கூரும் மஜ்லிஸ்களில் வானவர்கள் சூழ்ந்து கொண்டு அங்கு பேசப்படும் விஷயங்களுக்காக ஆமீன் கூறிக் கொண்டு இருக்கின்றனர்” என்ற நபி மொழி இதனை உணர்த்தி நிற்கின்றது.

எனவே முடிந்த அளவு நல்ல விஷயங்களை மட்டுமே இது போன்ற கூட்டங்களில் பேசவும் விவாதிக்கவும் முயல வேண்டும்.

இறைவன் நாடினால் வளரும்.

கட்டுரை ஆக்கம்: முன்னா

< பகுதி-1 | பகுதி-3 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.