பூஜா இங்கே… பெற்றோர் எங்கே?

பெற்றோரைத் தேடி..

பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு ஊமை என்பதால் இச்சிறுமி கடத்தப்பட்ட இடத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் காவல் துறையினருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

பூஜாவிடம் பேசியதில் அவரது தாயின் பெயர் முன்னிதேவி, தந்தையின் பெயர் ராஜூ அத்துடன் தாய்மொழி ஹிந்தி என்றும் தெரிய வந்துள்ளது.

தனக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளதாகவும் கூறும் பூஜா, தன் ஊர் என்று குறிப்பிடும் நாகலப்பீ பற்றிய தகவல் எவருக்கும் இதுவரை தெரியவில்லை.

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியிலிருந்து குழந்தை பூஜாவினைக் குறித்த தகவல்கள் தற்போது எமக்குக் கிடைத்தன. “நிர்மலா சிசு பவன்” என்ற குழந்தைகள் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள பூஜா தற்போதும் யாராலும் அடையாளம் காணப்படாத நிலையில் பெற்றோர்களிடம் சேர்க்கப்படாமலேயே உள்ளதாக சத்தியமார்க்கம்.காம் செய்தியாளர் உறுதி செய்தார்.

இச்சிறுமியின் தற்போதைய இருப்பிடமான நிர்மலா சிசு பவனின் தொலைபேசி எண் – 0471-2307434. இவரைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் ஆங்கில இணைய தள முகவரி: http://www.helppoojafindherparents.org

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு தொலைக் காட்சி, சமையல் போன்ற இதர விஷயங்களில் ஈடுபடும் போதும் குழந்தைகளுடன் நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். வெளியே செல்லும் பொழுது சிறு குழந்தைகளை முழுமையாக கண்காணிக்க இயலாத சூழ்நிலைகள் உருவாகும் என்ற நிலை இருந்தால் புறப்படும் பொழுதே தங்களைக் குறித்த முக்கியமான தொலைபேசி எண் போன்ற சில தகவல்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் விதத்தில் முன்னேற்பாடு செய்து கொள்வதும் அறிவார்ந்த செயல்பாடாகும்.

இதைப் படிக்கும் அன்பர்கள் இச்செய்தியை முடிந்தவரை பிறருக்கு அனுப்புங்கள். ஆதரவின்றி நிர்கதியாய் நிற்கும் இச்சிறுமி உரியவரிடம் பத்திரமாய் போய் சேர்ந்திட இறைவனிடம் பிரார்த்திப்பதோடு சத்தியமார்க்கம்.காம் தன் பங்கிற்கு இதில் கரம் சேர்க்கிறது.