அமெரிக்க அதிபருக்கு ஈராக் பெண்மணி கடிதம்

முதல் வளைகுடா யுத்தத்திற்குப் பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த போதும் அடிப்படை வசதிகளை மீள் கட்டமைத்து முன்னேறிக் கொண்டிருந்த ஈராக், அமெரிக்க ஆக்ரமிப்புப் படையின் மூன்று வருட கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷின் ஈராக் பற்றிய வாக்குறுதிகளை விமர்சித்தும், ஈராக்கின் தற்போதைய நிலையை விவரித்துக் கொண்டும் ஒரு ஈராக்கிய பெண்மணி புஷிற்கு அனுப்பிய கடிதத்தை ஈராக்கிலுள்ள கிதாபத் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

கடிதத்திலிருந்து…..

 

என் மகன் புஷ்ற்கும், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

 

என் மகனே! நான் ஒரு வயது முதிர்ந்தவள். எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் இல்லாததால் தான் இவ்வளவு காலமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால் இப்பொழுது இங்கே காரியங்கள் எல்லைமீறிவிட்டன. தாங்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறும் விஷயங்களில் இப்பொழுது எனக்கு நம்பிக்கை இல்லை. தொலைக்காட்சியின் முன்னிலையில் தாங்கள் நிற்கும் பொழுதெல்லாம் புன்சிரியுடன் நிற்கின்றீர்கள். அப்பொழுதெல்லாம் ஈராக்கின் எதிர்காலத்தைக் குறித்து மிகுந்த நம்பிக்கை தெரிவித்தீர்கள். அவற்றை கேட்டபொழுது நானும் சிரித்தேன். அப்பொழுது நீங்கள் கூறிய விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்தேன். உலகிலுள்ள மகத்தான ஒரு ராஜ்யத்தின் கதாநாயகன் அல்லவா நீங்கள்! அதனாலேயே தாங்கள் கூறும் விஷயங்கள் அனைத்தும் பொய் என்று பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லாமலிருந்தது.

 

நாட்கள் கடந்தன. உங்களின் வார்த்தைகளுக்கும் நாங்கள் அனுபவிக்கும் பரிதாபமான அவஸ்தைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி காணத்தொடங்கியது. ஈராக் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தாங்கள் கூறினீர்கள். எங்களின் நிலையோ வீட்டை விட்டு சாலையில் இறங்கி நிற்கக் கூட முடியாத மோசமான நிலை. ஜனநாயகத்தினூடாகவும், நீதியினூடகவும் ஈராக் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இங்கு நிலைமை, ஏதாவது ஒரு வகையில் ஆபத்தோ மரண பயமோ இன்றி ஒரு கருத்து கூட வெளியிட முடியாது என்பது தான் உண்மை.

 

தொலைக்காட்சியில் தாங்கள் முகம் காட்டி பேச செல்லும் முன் தங்களுக்கு கிடைத்துள்ள செய்திகளெல்லாம் சரியானவை தானா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். உலகத்தின் முன் வெட்கம் கெட்ட பொய்களை கூறாதிருக்க அது உபயோகப்படும். உலகின் மிகப்பெரிய சக்தியின் கதாநாயகன் அல்லவா நீங்கள்?

மகத்தான தியாகப்பெருநாள் வேளையில் தாங்கள் ஈராக்கியர்களுக்கு செய்தது என்ன? எதனால் சதாமை கொல்ல எங்களின் தியாகத்திருநாளை தேர்ந்தெடுத்தீர்கள்? சதாமை தூக்கில் ஏற்ற தாங்கள் ஏன் இத்தனை அவசரம் காட்டினீர்கள்?  உலக மக்களின் கோபத்திற்கு தாங்கள் காரணமானீர்கள். முன்பே மிகவும் கஷ்டத்திலிருந்த எங்களின் நிலைமையை இச்செய்தி மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றது. நான் இறைவனின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், "சதாமின் மரணத்தைக் காண ஈராக்கியர்களுக்கு அவசரமொன்றும் இல்லாதிருந்தது!".

 

மிஸ்டர் பிரசிடண்ட்! எங்களின் கோரிக்கையெல்லாம், எங்கள் ஈராக்கை எங்களுக்கு திருப்பித் தாருங்கள். மின்சாரமும், நீரும் முன்பிருந்தது போல் அப்படியே தந்து நாங்கள் மீண்டும் வாழ வாய்ப்பு தர வேண்டும். எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக வாழத்தகுந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். வரலாற்றின் புராதன காலத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் எங்களை நீங்கள் தள்ளி விட்டீர்கள்.

 

ஈராக் அரசிடமும், உங்களின் இராணுவத்திடமும் ஈராக் மக்களின் காரியங்களில் சிறிது கருணை காண்பிக்க நீங்கள் கூற வேண்டும் என்பது தான் என்னுடைய இறுதியான கோரிக்கை. இங்கு அவர்கள் நடத்தும் காரியங்கள் பொறுத்துக் கொள்ளும் எல்லையெல்லாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

 

ஆரோக்கியமும் நல்ல புதுவருடமும் தந்து இறைவன் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்தித்த வண்ணம் முடிக்கின்றேன்