விசாரணைக் கைதிகள் விவகாரம்: அரசின் நிலைப்பாட்டிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Share this:

தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், ஒரு நபருக்கு அதிக பட்சம் எவ்வளவு கொடுக்க இயலும் என்பதை அரசு நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேரள உயர்நீதி மன்றம் பீஹார் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம். இதனை எதிர்த்து "அரசால் நஷ்டஈடு எதுவும் கொடுக்க இயலாது" என்ற அரசு வழக்கறிஞரின் பதிலை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய நிலையில் இனி நீதிமன்றமே நஷ்டஈட்டுத் தொகையை தீர்மானிக்கும் என தலைமை நீதிபதி வி.கெ.பாலி, நீதிபதி எம்.ராமச்சந்திரன் போன்றவர்கள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது. 

விசாரணைக் கைதிகளை தேவையான சமயங்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது மட்டுமே காவல்துறையின் பொறுப்பு என்றும் அவர்கள் தண்டனையை விட அதிகக் காலம் சிறைவாசம் அனுபவித்துள்ளனரா என்பதை நீதிபதிகள் தான் பரிசோதிக்க வேண்டும் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் பி.ஜி. தம்பி நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம் கைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்ட சம்பவங்களுக்கு நீதிமன்றத்தின் மீது பழிபோடுவதை டிவிஷன் பெஞ்ச் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தண்டனையை விட அதிகக் காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் உருவானவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான டி.ஜி.பியின் விளக்கமும் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்தை அரசு பெறுவதற்கு காரணமாக ஆகியுள்ளது.

தண்டனையை விட அதிகக் காலம் விசாரணை கைதிகளாக சிறையில் செலவழிக்கவேண்டிய நிலை நாட்டில் நிலவுகிறது என்பது வெட்கப்பட வேண்டிய சூழலாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி இதுவரை 75 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது. மீதியுள்ள 35 கைதிகள் வேறு சில வழக்குகளில் தண்டனை அனுபவிப்பதால் அவர்களை விடுதலை செய்யவில்லை என்றும் அரசு தெரிவித்தது.

தண்டனைக் காலத்தைவிட அதிகநாட்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் காலம் தள்ளுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் தொடர்பான விஷயத்தில் நஷ்டஈட்டுத் தொகையையும் நீதிமன்றமே தீர்மானித்து, பின்னர் இறுதி தீர்ப்பில் அறிவிக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.