இஸ்லாமிய அமர்வின் ஒழுங்குகள் (பகுதி-3)

இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து கடந்த பகுதியில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக…

4. திட்டமிடல்:

அமர்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்தப்படுகிறது எனில் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் மிக அவசியமானதாகும். கூட்டத்தை வழிநடத்துபவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த அமர்வில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் தயார் செய்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளல், அமர்வு சரியானபடி ஆரம்பிக்க உதவிகரமாக அமையும்.

அதற்கென அமர்வின் பொறுப்பாளர் தனியாக நபர்களை நியமித்தோ அல்லது அவர் விரும்பிய வழியில் ஏற்பாடுகளை செய்வது, ஓர் நல்ல வழிநடத்துனர் அமர்வுக்கு தலைமை ஏற்றுள்ளார் என்ற எண்ணத்தை அமர்வில் கலந்து கொள்வோரின் மனதில் ஆரம்பத்திலேயே ஏற்பட வழிவகுக்கும். மேலும் அந்த அமர்வின் பொறுப்பாளருக்கு மதிப்பளித்து அவர் வார்த்தைகளை செவிதாழ்த்தி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை அவ்வமர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகிறது.

அமர்வின் பொறுப்பாளர் முன்னரே அமர்வின் மொத்த நேரம், அதில் பேசப்பட போகும் நபர்களுக்குரிய நேரங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு தயார் நிலையில் இருப்பது மிக்க அவசியமாகும். அமர்வு நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் முடிய அது மிக்க பலன் தரும். அதுமட்டுமல்லாமல் திட்டமிட்ட அமர்வுப் போக்கு அமர்வில் ஓர் ஒழுங்கையும், சலசலப்பின்மையையும் ஏற்படுத்தி ஒன்றுகூடிய காரியத்திற்கான தீர்வினை எளிதில் அடைய வழிவகுக்கும்.

5. நல்லதை மட்டும் பேசுதல்:

அமர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படும் பொழுது கூற விரும்பும் கருத்துக்குப் பொருத்தமான சொற்களையே தேர்வு செய்து பேச முயல வேண்டும். அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து காயப்படுத்தாதிருத்தல், அவ்வமர்வுக்குத் தொடர்பிருந்தாலேயொழிய அக்கூட்டத்தில் இல்லாதவர்களைக் குறித்து முழுமையாக அறியாத காரியங்களையும், அவரைக் குறித்த தவறான காரியங்களையும் கூறாதிருத்தல், நல்லதையும் முழுமையாக அறிந்த விஷயங்களைக் குறித்து மட்டுமே பேசுதல் போன்றவற்றை கலந்து கொள்பவர்களுக்கு பொறுப்பாளர் நினைவுபடுத்த வேண்டும்.

நபியே எதனை பேசிய போதிலும் நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு குறிப்பிடுங்கள்.ஏனெனில் ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுவான் (அல்குர்ஆன் 17:53)

அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பியவர் பேசினால் நல்லதையே பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.” (புஹாரி, முஸ்லிம்)

போன்ற இஸ்லாத்தின் அறிவுரைகள் ஒரு முஃமின் பேசும் பொழுது எவற்றைப் பேச வேண்டும் எவற்றைப் பேசக் கூடாது என்பதை தெளிவாக வலியுறுத்துகின்றன. முழுமையாக இஸ்லாமிய அடிப்படையில் அமர்வு நடத்த எண்ணுவோர் இவ்விஷயத்தில் அதிக கவனமுடன் இருத்தல் வேண்டும்.

ஏதாவது முக்கிய விஷயங்களைக் குறித்து அலசிக் கொண்டிருக்கும் வேளையில் கலந்துரையாடல் சூடேறி விட்டாலோ அல்லது கலந்துரையாடலில் தேவையில்லாத வார்த்தைகளை பேச்சின் சுவாரசியத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பயன்படுத்த தொடங்கினாலோ, உடனடியாக அமர்வு வரையறைகளை பேணுவதற்காக தலைமை ஏற்று வழிநடத்துபவர் தனை கண்டித்து உணர்த்துவதற்காக செயற்படுவது அவசியமாகும். இதன் கருத்து பங்கு பெறுபவர்கள் தங்களது கருத்துக்களை, கண்ணோட்டங்களை தெரிவிக்காது மௌனமாக இருக்க வேண்டும் என்பதல்ல என்பதனையும் வழிநடத்துபவர் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவுபடுத்தி விடல் வேண்டும்.

6. நோக்கத்தில் கவனமாக இருத்தல்:

சாதாரணமாக அமர்வுகள் நடத்தப்படும் பொழுது அமர்வு கூடியதன் நோக்கம் ஒன்றாக இருக்கும். எந்த நோக்கத்திற்காக அக்கூட்டம் கூட்டப்பட்டதோ தனை விட்டு கலந்துரையாடல் வேறு விஷயங்களில் திசைமாறி செல்லும். நடப்பு உலகோடு தொடர்புள்ளவர்களுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெறும் பொழுது இவ்வாறு நிகழ்வது இயற்கையே.

எனினும் ஓர் இஸ்லாமிய அமர்வை பொறுத்தவரை இவ்வாறு நடைபெறுவது விரும்பத்தக்கதல்ல. இதனால் அக்கூட்டம் என்ன நோக்கத்திற்காக கூட்டப்பட்டதோ அந்நோக்கம் முழுமையாக பூர்த்தியாகாத நிலையில் அமர்வை முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அல்லது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க வேண்டி, முடிவு எடுக்கப்பட வேண்டிய விஷயத்தை முழுமையாக ஆராயாமலேயே அவசர, அவசரமாக கூட்டத்தை முடிக்க வேண்டிய நிலைக்கு பொறுப்பாளர் தள்ளப்படுவார். எனவே எதைப்பற்றி பேசுவதற்கு அமர்வு கூட்டப்பட்டதோ அவ்விஷயத்தை சுற்றியே கலந்துரையாடல் நடைபெறுவதை கூட்ட பொறுப்பாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் தலைப்பிற்குசம்பந்தமில்லாத வியங்களில் கலந்துரையாடல் திசைமாறுவதற்கு பொறுப்பாளர் அனுமதிக்கக் கூடாது.

7. நிகழ்ச்சி நிரலைப் பேல்:

அமர்வு ஆரம்பிப்பதற்கு முன் நிகழ்ச்சி நிரல் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமாயின் அதில் அமர்வு ஆரம்பித்தபின் புதிதாக எதனையும் இணைத்துக் கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒரு வியம் கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டும் என பங்கேற்பாளர்கள் ஒன்றாக வற்புறுத்தி, வியமும் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவ்வியத்தை கலந்துரையாடலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு பேணப்படுவதன் மூலம் அமர்வின் நோக்கம் முழுமையடைவதுடன், தெளிவான முடிவெடுக்க வழி வகுக்கும்.

ஆக்கம்: முன்னா

< பகுதி-2 | பகுதி-4 இன்ஷாஅல்லாஹ் விரைவில்