உலக நாடுகளின் ஒப்புதல் ஏதுமின்றிப் பல நாடுகளை வன்முறையில் ஆக்கிரமித்த அமெரிக்கா ஏற்படுத்திய போர்ச் சீரழிவுகளால், வியட்நாமில் தொடங்கி, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது உலகறிந்த ஒன்றாகும். பாலஸ்தீனத்துக்கு எதிராக, இஸ்ரேலை வளர்த்து விட்டு அங்குக் குளிர் காயும் குள்ளநரி அமெரிக்காவின் போக்கானது எத்தகையது என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கின்றோம்.
நாடுகள் பலவற்றில் குழப்பத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு ஏதிராகத் தற்போது ஆங்காங்கே பல போர் எதிர்ப்புப் போராட்டங்கள் கிளம்பி உள்ளன. ஜந்து ஆண்டுகளுக்கு முன்னால் மார்ச் 2003இல், “உயிர்க் கொல்லிப் போராயுதங்கள் உள்ளன” என்று பொய் பிரச்சாரம் செய்து ஈராக்கைக் கைப்பற்றிய ஆதிக்கச் சக்தி கொண்ட அமெரிக்கா, இன்னும் அந்நாட்டில் எந்த விதமான சிறிய ஆயுதங்களைக்கூட கைப்பற்றவில்லை.
ஆகையால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மக்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல தெருமுனைப் பிரச்சாரங்களை, சாலைப்போராட்டங்களை நாள்தோறும் நடத்தி வருகின்றார்கள்.
மார்ச் 15 – 2008 சனிக்கிழமையன்று, “லண்டன் மற்றும் கிளாஸ்கோ போன்ற நகரங்களில் நடந்த போர் எதிர்ப்புப் போராட்டத்தில் 30,000 த்திலிருந்து 40,000 மக்கள் வரை கலந்துக்கொண்டனர்” என்ற செய்தியினை பேராட்டக்குழுவின் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் லண்டன் காவல்துறையானது அந்தச் செய்தியினை மறைத்து, “1,000 த்திலிருந்து 1,500 மக்கள்தான் கலந்துக்கொண்டனர்” என்று வாய் கூசாமல் பொய்கூறி வருகிறது. இதற்கு முன்பும் பல போரெதிர்ப்புப் போராட்டங்களையும் லண்டன் மக்கள் செய்து இருக்கிறார்கள்.
“ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அமைதியினை ஏற்படுத்தப் போகிறோம்” என்று சொல்லிச் சென்ற அமெரிக்காவின் ஆதிக்க இராணுவப் படைகள் அங்குப் பல பாதகச் செயல்களைச் செய்து வருகிறார்கள். அக்டோபர் 2006 முதல் செப்டம்பர் 2007 வரை ஆப்கானிஸ்தானில் பல பெண்களைச் சீரழித்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகள் மட்டும் 2,688 ஆகும். ஈராக் நாட்டின் பொம்மை அரசின் கணக்குப்படி, 112 வழக்குகள் இதுபோல் பதிவாகி உள்ளன. அமைதியினை எங்கு ஏற்படுத்தினார்கள் அந்த கெட்ட எண்ணம் கொண்ட அமெரிக்க கும்பல்கள்? அமைதியினை ஆங்காங்கே சீர்குலைத்து விட்டார்களே!
அத்துடன் எந்த விதமான காரணமும் இல்லாமல் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்தும் வருகிறார்கள். “போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்யக் கூடாது” என்று சர்வதேசச் சட்டம் சொல்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், போன்ற நாடுகளில் அட்டூழியம் செய்து கொண்டு இருக்கும் அமெரிக்கா, ஈரானையும் சிரியாவையும் தாக்குவதற்குத் தாக்க தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இராக் ஆக்கிரமிப்புக்காக அமெரிக்கா தன் 4,000க்கும் அதிகமான போர் வீரர்களை இழந்தது மட்டுமின்றி பில்லியன் கணக்கில் டாலர்களைத் தண்ணீர்போல் செலவழித்து வருகிறது. நோபல் பரிசு பெற்றவரும் அமெரிக்கப் பொருளாதார வல்லுனருமான ஜோஸஃப் ஸ்டிக்லிட்ஜ் தனது நூலான, ‘தி ட்ரில்லியன் டாலர் வார்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் இராக் போர்ச் செலவுத் தொகை 845 பில்லியன் டாலர் ஆகும்.
ஈராக் நாட்டில் தற்போது இருக்கும் அமெரிக்க மற்றும் கூட்டு இராணுவப் படைகளின் எண்ணிக்கை:
- அமெரிக்கா 152,000
- போலந்து 900
- தென் கொரியா 650
- ஆஸ்திரேலியா 550
- ரோமானியா 498
- டென்மார்க் 100
ஆகும்.
ஈராக் போரால், இக்கட்டுரை எழுதப் படும் 24 மார்ச் 2008இல் அமெரிக்க இராணுவத்தினரின் இறப்பு எண்ணிக்கை 4,000ஐத் தாண்டி விட்டது. காயம்பட்டவர்களின் எண்ணிக்கை 29,320 ஆகும். இந்த எண்ணிக்கை, சரியானது என்று சொல்ல முடியாது. இதனைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்பது ஊடகலியலாரின் கணிப்பாகும். மார்ச் 20 – 2003 க்குப்பின் ஈராக்கில் நடந்த சம்பங்களைத் திரும்பி பார்ப்போம்:
மார்ச் 20 – 2003 – ஈராக் நாட்டைச் சீர்குலைக்க அமெரிக்கா அங்கு நுழைந்த நாள்.
ஏப்ரல் 9 – 2003 – புகழ் பெற்ற பாக்தாத் நகரின் அழகு அழிக்கப்பட்ட நாள்.
டிசம்பர் 13 – 2003 – சதாம் உசேன் காட்டிக் கொடுக்கப் பட்டு, அமெரிக்க இராணுவத்தினரால் திக்ரித் நகரில் கைது செய்யப் பட்ட நாள்.
ஏப்ரல் 7 – 2004 வெளிநாட்டைச் சார்ந்த 30 நபர்கள் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்ற பொய் பிரச்சாரம் செய்யப் பட்ட நாள்..
ஏப்ரல் 22 – 2004 அபூகிரைப் சிறைச்சாலையில், அமெரிக்கா பிடித்த அப்பாவி ஈராக் நாட்டு மக்களுக்கு ஏதிராகப் பல கொடுமைகள் வெளிப்பட்ட நாள் – அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, அமெரிக்காவின் ஜனநாயகப் பாதுகாவலன் முகமூடி கிழிக்கப் பட்டு, அதன் கோர முகம் வெளியான நாள்.
ஜுன் 28 – 2004 ஈராக்கில் ஆட்சி அதிகாரம் அமெரிக்க புதிய பொம்மை அரசாங்கத்திற்கு கொடுக்கப் பட்ட நாள்.
அக்டோபர் – 15 – 2005 – தற்கொலைப் படை தாக்குதல்கள் உக்கிரமடைந்த நாள். (இன்றுவரை தொடரும் பல உயிர்த்தேசங்கள்)
17. 3. 2008 திங்கள் அன்று கர்பலா நகரில் தற்கொலைத் தாக்குதலால் 50 பேர்கள் கொல்லப்பட்ட நாள்.
டிசம்பர் – 30 – 2006 சதாம் உசேன் நியாயமின்றி தூக்கிலிடப்பட்ட் நாள்.
ஜனவரி – 7 – 2007 அமெரிக்கா இராணுவத்தினரின் இறப்பு எண்ணிக்கை 3,000ஐத் தொட்ட நாள்.
ஜனவரி – 15 – 2007 ஈராக் நாட்டிற்கு மேலும் 30,000 அமெரிக்க இராணுவத்தினர் அனுப்பப்பட்ட நாள்.
பிப்ரவரி – 14 – 2007 – பாக்தாத் நகரத்தின் பாதுகாப்பிற்காக 80,000 வீரர்கள் அனுப்பப் பட்ட நாள்.
ஆகஸ்டு – 14 – 2007 – ஈராக்கின் வட பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 400 பேர் கொல்லப்பட்ட நாள்.
செப்டம்பர் – 14 – 2007 – 2008க்குள் அமெரிக்காவிலிருந்து, சிறிய அளவில் படைகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என்று வாஷிங்டன் தலைமையகம் புளுகிய நாள்.
பிப்ரவரி – 29 – 2008 பல இராணுவ வீரர்களின் உயிரை இராக்கில் பலி கொடுத்து விட்டு, துருக்கி நாடு தன்னுடைய படைகளை வாபஸ் பெற்றுக் கொண்ட நாள்.
மார்ச் 12 – 2008 – ஈரான் நாட்டு அதிபர் மாஹமுத் அஹமதி நிஜாத் அவர்கள் ஈராக் நாட்டிற்கு விஜயம் செய்த நாள். (வருங்காலத்தில் ஈரான் – இராக் வரலாற்றுப் பிழைகளை அழித்து நல்லுறவுக்கு வழி வகுக்கும் சிறப்பு நிகழ்ச்சியாக இது கருதப் படுகின்றது)
2008 ஜுலை மாதம் இறுதிக்குள்; 140,000 படை வீரர்கள் ஈராக்கிலிருந்து வெளியேறப்படுவார்கள் என்று அமெரிக்கா மீண்டும் புளுகிய நாள்.
_____________________________________________________________________________
Khaleej Times நாளிதழின் 17 மார்ச் 2008 செய்தியை அடிப்படையாகக் கொண்டு
தொகுத்தவர் : முத்துப்பேட்டை அபூ அஃப்ரீன்