குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம் என்று தெளிவாக ஒப்புக் கொண்டிருந்த போதும் இது குறித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இப்போது குஜராத் கலவரம் பற்றி மறு விசாரணை நடத்த புதிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகள் கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா, CBI  முன்னாள் இயக்குநர் R.K. ராகவன், ஓய்வு பெற்ற காவல் இயக்குநர் C.P. சத்பதி ஆகியோர் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெறுவர். அவர்கள் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனித நேய ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து முனைப்புடன் போராடி வரும் பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா சற்றல்வாட், "கால தாமதமானாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். குஜராத் காவல் துறை காவிகளின் கூலிப்படையைப் போல செயல்படுவதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கானல் நீராக இருந்து வந்த நீதி இப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று கூறினார்.

 

குஜராத் கலவரம் தொடர்பாக நான்காயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டாலும் போதிய ஆதாரம் இல்லை என ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை குஜராத் காவல்துறை தவிர்த்துவிட்டது எனவும், சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சாட்சிகள் பலர் அரசுக்கு எதிராக சாட்சி அளித்தாலும் பின்னர் வழக்கிலிருந்து பின்வாங்கினர். அவர்கள் மிரட்டப்பட்டதால் இவ்வாறு தடம் பிறழ்ந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த விசாரணையை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


இதையடுத்தே சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை ஏற்படுத்தும் முடிவை நீதிபதிகள் அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இவ்வறிவிப்பு காவிக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.