திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அலிஃப், லாம், மீம். இது இறைவேதம்; இதில் ஐயமில்லை; இது இறையச்சம் உடையோருக்கு நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:1-2)

இவ்வுலகு எண்ணற்ற அற்புதங்களைக் கண்டிருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியில் வியப்புமிக்க அற்புதங்களை மானுடம் பார்த்து பரவசமடைந்திருக்கலாம். ஆனால் இவைகளுக்கு எல்லாம் மேலாக – முன்னோடியாக மிகச்சிறந்த அற்புதமாய்த் திகழ்வது அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் நேர்வழி பெறவும் உலகில் சாந்தி, சமத்துவ நல்லொழுக்கம் நிலைபெற்றிடவும் அருளப்பட்ட அற்புதம்தான் அல்குர்ஆன்.

மனிதாபிமானம் அறவே அற்ற, அஞ்சானம் நிறைந்த, அற்ப விஷயங்களுக்காகத் தங்களுக்குள் ஆண்டுக் கணக்கில் சண்டையிட்டுக் கொண்டு தொடர் வன்முறை, போர்களினால் சீர்குலைந்து போயிருந்த அன்றைய அரேபிய மக்களிடையே அன்பையும் அறப்போதனைகளையும் போதித்து, பரஸ்பரம் பாசப்பிணைப்பை ஏற்படுத்தியது அல்குர்ஆன்.

வலியவன் எளியவனை அடக்கி ஆளுகை கொண்ட மக்களிடையே நியாய உணர்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை உருவாக்கியதும் அல்குர்ஆன். துர்பண்புகளான மது, மாது, சூது, மோசடி மற்றும் மூடப்பழங்கங்கள் நிறைந்த அன்றைய சமுதாய மக்களைத் தன் சீரிய வழிகாட்டுதல்களால் நற்பண்புகள் நிறைந்த நல்ல சமுதாயமாய் மாற்றியதும் அல்குர்ஆன்.

பெண்களை இழிவாய், போகத்திற்குரிய ஜடமாய், பெண் மக்களை உயிருடன் புதைத்த அநாகரீகமான சமுதாயமாயிருந்த அன்றைய மக்களை மீட்டெடுத்து நற்பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் உரிய நன்மக்களாய் உருவாக்கியதும் அல்குர்ஆன்.

இஸ்லாமிய வளர்ச்சியில் பொறாமை கொண்ட மாற்றுச் சிந்தனையுள்ள ஊடகங்களில் உண்மைக்கு மாறாகத் சித்தரிக்கப்படும் பெண்ணியம் குறித்து அல்குர்ஆன் அழகிய முறையில் சிறப்பித்துக் கூறுகிறது. பெண்களுக்குரிய உரிமை, கடமை, கட்டுப்பாடு குறித்தும் பெண்களுக்குரிய சிறப்பு குறித்தும் பரவலாக அல்குர்ஆன் சொல்கிறது. பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக அன்நிஸா என்ற அத்தியாயம் வழங்கி உலகில் வாழ்ந்த, வாழும் பெண்களுக்கு மிக உன்னதமான கவுரவத்தை வழங்கியது அல்குர்ஆன் மட்டுமே.

நிற வேற்றுமை, குலப்பெருமை, மொழிப் பெருமை, பொருளாதார உயர்வு, இனப்பெருமை போன்ற பாகுபாடுகளை அடியோடு அறுத்தெறிந்து அழகிய சமுதாயமாய் பரஸ்பரம் சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் உயர்பண்புகளுடைய சமுதாயமாய் மாற்றியது இந்த அருள்மறையாம் அல்குர்ஆன்.

உலகு தோன்றியதிலிருந்து இறுதிநாள் வரை ஏற்படும் பிரச்சினைகளுக்குரிய அழகிய தீர்வு இந்த அருள்மறையிலே விளக்கமாயுள்ளது.

அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், விவசாயம், வியாபாரம், இல்லறம், நல்லறம், இணக்கம், பிணக்குகளுக்கு உரிய தீர்வு போன்ற மனிதவர்க்கம் எதிர் கொள்ளும் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வுகளை விலாவாரியாக விவரித்து மாக்களை மக்களாய், நன்மக்களாய், உயர்ந்த சமுதாயமாய் உருவாக்கியது இந்த அல்குர்ஆன். இவ்வரிய பொக்கிஷம் கொடுக்கப்பட்ட நம் சமுதாயம் ஏனோ சரியாக இதைப் பயன்படுத்தி நற்பலனை அடையவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

சஹாபா பெருமக்கள் அல்குர்ஆனையும் அல்சுன்னாவையும் பற்றிப் பிடித்து அதனை முழுமையாகப் புரிந்து அதன்படி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினால் ஈருலகின் ஈடேற்றம் பெற்ற நன்மக்களாய் சரித்திரத்தில் பொறிக்கப்பட்டார்கள். அதற்கடுத்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமுதாயம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை அதன் தூய வடிவில் கடைப்பிடித்து வாழ்ந்ததினால் பேறு பெற்ற நன்மக்களாய் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.

பிரச்னைகளும் பிணக்குகளும் நிறைந்த யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுய அறிவாலும் கல்வி தரும் சிந்தனையாலும் கூட எட்ட முடியாத, எண்ணற்ற விஷயங்களுக்கான தீர்வுகளை அல்குர்ஆனின் வழிகாட்டுதலின் மூலமாக ஆய்வு செய்யும்பொழுது எட்ட முடியும்.

இஸ்லாத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யோசனையை முன்வைத்து ஒரு மேலைநாட்டு அறிஞர் குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

 

“இஸ்லாமியர்கள் அவர்களின் வேத புத்தகமான குர்ஆனையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை (சொல், செயலை)யும் பின்பற்றும் காலம்வரை அவர்களை வெல்ல முடியாது. முஸ்லிம்களை வெல்ல வேண்டுமெனில் அவர்களை குர்ஆன் மற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் பால் ஈர்க்க வேண்டும்”

அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் போதனையின்படி வாழ்ந்து வலிமையான வனப்புமிகு சமுதாயமாய இருந்த இஸ்லாமியச் சமுதாயம், இன்று எதிரிகளின் சதிவலைகளில் சிக்குண்டு, வலிமை குன்றி, தனது அடையாளங்களைப் படிப்படியாக இழந்து வருவது வேதனைக்குரிய விஷயம்.

எனினும் நற்சிந்தனையுள்ள ஒரு சில அறிஞர்களின் நன்முயற்சி, சொல், எழுத்து வடிவில் நமக்கு கிடைக்கின்றன. அவசர யுகத்தில் அவைகளைப் படித்து உணர நேரத்தை நாம் ஒதுக்குவதில்லை.

பிறப்பால், வளர்ப்பால் இஸ்லாமியர்களாகிய நாம் அல்குர்ஆனை ஆய்வு செய்வதில்லை. ஆனால், பிற மத அறிஞர்களில் ஒருசிலர் அல்குர்ஆனை ஆய்வு செய்யும்பொழுது அதிலிருந்து எண்ணற்ற பல அரிய விஷயங்களை உணர்ந்து, உணர்வுப் பூர்வமாய், அறிவுப்பூர்வமாய் தம்மை இஸ்லாத்தில் இணைத்து வெற்றியடைகின்றனர்.

முன் குறிப்பிட்டதுபோல் அன்றைய அரேபிய மக்கள் மட்டுமல்ல, உலகமே காட்டுமிராண்டித்தனமான அநாகரீக வாழ்வைக் கொண்டிருந்தபோது தான் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இந்த அருள்மறையின் போதனை மூலமாக அரேபியா மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் இஸ்லாத்தின் எழுச்சி வெகு விரைவாகப் பரவியது.

ஒழுக்கங் கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களை ஒரு நாகரீகமான, அறிவுப்பூர்வமான சமுதாயமாக அல்குர்ஆன் மாற்றியது என்றால் அது மிகையில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அருமை சஹாபா பெருமக்கள் மற்றும் அதற்குப் பிந்தைய இரண்டு நூற்றாண்டில் வசித்த நன்மக்கள் எப்படி குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றி நற்பண்பாளர்களாய் வாழ்ந்து காட்டி, மாற்றாரையும் கவர்ந்து இஸ்லாத்தின்பால் ஈர்த்தது போன்று நாமும் உறுதிமிக்க ஈமானுடன் இந்த அருள்மறையின் போதனைப்படி வாழ முற்படும்போது இறைவனின் உதவியும் வெற்றியும் நம் சமுதாயத்திற்கு என்றுமுண்டு. இதைப் புரிந்து கொண்டால் போதும். நம்மைவிட்டும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் நமது இஸ்லாமிய அடையாளத்தை மீண்டும் பெற்று ஒப்புயர்வற்ற உன்னத சமுதாயமாய் மாற்றார்களுக்கு முன்மாதிரியாய் நாம் திகழ முடியும்.

இஸ்லாம் வாளாலோ, வன்முறையாலோ பரப்பப்படவில்லை. அதன் அறிவுப்பூர்வமான, எளிய, மற்றும் அழகிய கோட்பாடுகளால் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழகாட்டுதலில் மாற்றாரை தன்பால் ஈர்த்தது; இன்ஷா அல்லாஹ் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

அல்குர்ஆன் போதிக்கும் அறநெறிகளை இந்தச் சமுதாயம் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

பெண்கள் குறித்து அல்குர்ஆன் சிலாகித்து உயர்வாய் சித்தரித்துள்ளது. ஆனால் மேலைநாட்டு ஊடகங்கள் உண்மைக்கு மாறாகச் சித்தரித்து வருகின்றன. அவற்றுக்குத் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக வேண்டியாவது நம் சமுதாயம் கல்வி, விழிப்புணர்வு மற்றும் குர்ஆன் ஹதீஸின் அறிவு ஞானம் பெற வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

அந்நிய ஆண்களின் முன்பு தங்களது மானம், கவர்ச்சியை மறைப்பதற்காக மட்டுமே இஸ்லாம் பெண்களை ஹிஜாப்-அபாயா போன்ற முழுமையான ஆடை உடுத்தச் சொல்கிறது. அவர்களின் அறிவை மறைப்பதற்கல்ல; இதைக் கண்ணுறும் சகோதர சகோதரிகள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்ய முற்படுவார்களாயின் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான், இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவன். இதில் பிழைகளிருப்பின் என்னைச் சாரும்; நிறைகள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும்.

 

ஆக்கம்: சகோதரி. நதீரா இஸ்மாயீல்

 

தஞ்சை மாவட்டம் அதிரையைச் சேர்ந்த சகோதரி நதீரா அவர்கள் தன் பள்ளிக்கல்வியை சவூதி அரேபியா, ஜெத்தாவில் இருக்கும் சர்வதேச இந்தியப் பள்ளியிலும் பட்டப்படிப்பை திருச்சி அய்மன் பெண்கள் கல்லூரியிலும் முடித்துள்ளார். தற்போது முதுகலைப் பட்டப்படிப்பை திருச்சி காவேரி பெண்கள் கல்லூரியில் தொடரும் இவர் முனைவர் பட்டம் பெறும் ஆவலிலும் படிப்பைத் தொடர உள்ளார். கல்லூரியில் சக தோழியரிடம் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது கணவர் இஸ்மாயில் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். விரைவில் குவைத் சென்று கணவருடன் இணைய உள்ளதாகக் கூறியிருக்கும் சகோதரி பல்வேறு இஸ்லாமியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்தார்வத்துக்குப் பெற்றோரும் கணவரும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரி நதீரா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு<span”> சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.